search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்?
    X

    சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்?

    நவக்கிரகங்களில் ‘ஈஸ்வரர்’ பட்டம் பெற்ற ஒரே கிரகம், சனி. இந்தப் பட்டத்தை சிவபெருமானே, சனீஸ்வரனுக்கு வழங்கினார்.
    நவக்கிரகங்களில் ‘ஈஸ்வரர்’ பட்டம் பெற்ற ஒரே கிரகம், சனி. இந்தப் பட்டத்தை சிவபெருமானே, சனீஸ்வரனுக்கு வழங்கினார்.

    ஒவ்வொருவரின் பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ப, பலன்களை வழங்கி வந்தார் சனி பகவான். இதனால் அவர் மீது தேவர்களும், முனிவர்களும் கோபத்தில் இருந்தனர். அவரை வசைபாடவும் செய்தனர். இதனால் மனம் சோர்ந்து போனார் சனி பகவான். ‘ஈசன் எனக்கு இட்ட கட்டளையைச் செய்ததற்கு, தேவர்களும், முனிவர்களும் என் மேல் கோபம் கொள்வது ஏன்?’ என்று அறியாமல் கவலை கொண்டார்.

    நேராக சிவபெருமானைச் சந்தித்து தன்னுடைய மன வருத்தத்தைச் சொன்னார் சனி பகவான்.

    உடனே ஈசன், ‘நாளை நீ, தேவலோகத்தில் தேவர்களும், முனிவர்களும் கூடியிருக்கும் வேளையில், தேவலோகம் வழியாக கயிலாயத்திற்கு வா. பின்னர் என்னை 7½ நிமிடம் பிடித்துக் கொள்’ என்றார்.

    சனி பகவானும் ஈசன் சொன்னபடியே, குறிப்பிட்ட நேரத்தில் தேவலோகம் வழியாக கயிலை நோக்கிச் சென்றார். தேவலோகத்தின் வழியாக சனி பகவான் வந்தபோது, அவரைப் பார்த்த தேவர்களும், முனிவர்களும், ‘சனி பகவான் யாரையோ பிடிக்க வருகிறார்’ என்று எண்ணி தலைதெறிக்க ஓடினர். ஆனால் சனி பகவான் தேவலோகத்தைக் கடந்து கயிலாயம் நோக்கிச் செல்வதைப் பார்த்ததும் அதிர்ந்தனர். அவர் பின்னாலேயேச் சென்று நடப்பதை அறிய நினைத்தனர்.

    கயிலாயம் சென்ற சனி பகவான், சிவபெருமானைப் பிடிக்க முயன்றார். அவருக்குப் பயந்தது போல் ஈசன் ஓடினார். ஆனால் சனி பகவான், ஈசனைப் பிடித்துக் கொண்டார். பின்னர் விடுவித்தார்.

    அப்போது ஈசன், ‘பாரபட்சம் பார்க்காமல், என்னையே பிடித்த உனக்கு என்னுடைய ஈஸ்வரர் பட்டத்தை அளிக்கிறேன்’ என்றார். அன்று முதல் சனி பகவான், ‘சனி ஈஸ்வரர்’ என்று அழைக்கப்படலானார்.

    அப்போது முதல் சனி பகவானை சபித்தவர்கள், அவரது நீதி வழுவாமையைக் கண்டு, சனீஸ்வரனிடம் சரணடைந்தனர்.
    Next Story
    ×