search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பையொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
    X

    ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பையொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 29-ந்தேதி நடக்கும் சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரம் அடைந்து உள்ளன.
    பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெறும். ஏகாதசி விழா நடைபெறும் நாட்களில் பெரிய பெருமாள் எனப்படும் மூலவர் ரெங்கநாதர் முக்தியுடன் சேவை சாதிப்பார். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த 18-ந்தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் பகல் பத்து உற்சவத்தின் முதல் நாள் திருமொழி திருவிழா தொடங்கியது. நேற்று 2-ம் நாள் திருவிழா நடந்தது. அதன்படி காலை 6.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு சேவை நிகழ்ச்சிகள் நடந்தது.

    பின்னர் இரவு 9.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார். வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய விழாவான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விழா வருகிற 29-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நடக்கிறது. முன்னதாக அன்று காலை 3.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு நடைபெறும். சொர்க்க வாசல் திறப்பு விழாவில் தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து செல்வார்கள்.


    வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பரமபத வாசல் புதுப்பிக்கப்படுகிறது. இதற்காக பித்தளை தகட்டால் படிகள் தயார் செய்யும் பணி நடந்த காட்சி.

    சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடு பணிகள் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி கோவில் நுழைவு வாசலில் இருந்து முக்கிய வழிகள் முழுவதும் வர்ணம் பூசும் பணி தொடங்கி உள்ளது. அதே போன்று பாதுகாப்பு கருதியும், கூட்ட நெரிசல் இன்றி பக்தர்கள் வரிசையாக சொர்க்க வாசலுக்கு செல்ல ஏதுவாக ஸ்ரீஜெயந்தி மண்டபம், சக்கரத்தாழ்வார் சன்னதி, ஆயிரம் கால் மண்டபம் உள்ளிட்ட முக்கிய இடங் களில் சவுக்கு கட்டை மூலம் தடுப்பு வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    பக்தர்களை வெயிலில் இருந்து பாதுகாக்க பரமபத வாசல் உள்ளிட்ட கோவிலின் பல்வேறு இடங்களில் பந்தல் அமைக்கும் பணியும் நடக்கிறது. இந்த ஆண்டு பரமபத வாசலை புதுப்பிக்க கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பரமபத வாசல் முழுவதும் பித்தளை தகடு மூலம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அதே போன்று பாதுகாப்பு கருதி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் கோவிலை சுற்றி 42 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
    Next Story
    ×