search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த ஆண்டில் 2-வது முறையாக வரும் வைகுண்ட ஏகாதசி: 29-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு
    X

    இந்த ஆண்டில் 2-வது முறையாக வரும் வைகுண்ட ஏகாதசி: 29-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு

    இந்த ஆண்டு 2-வது முறையாக வைகுண்ட ஏகாதசி வருகிற 29-ந்தேதி வருகிறது. அன்றைய தினம் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
    ‘மாதங்களில் நான் மார்கழி’ என்று பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணர் உபதேசித்து உள்ளார். மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த நாளில் அதிகாலையில் எழுந்து, வீடுகளில் கோலமிட்டு, கோவில்களில் வழிபாடு நடத்துவார்கள்.

    இத்தகைய பெருமைக்குரிய மார்கழி மாதத்தில் தான் இறைவனை அடையும் வைகுண்ட ஏகாதசி என்று சொல்லப்படுகின்ற சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெறுகிறது.

    ஆண்டிற்கு ஒரு முறை நிகழும் இந்த நிகழ்வு, சில ஆண்டுகள் 2 முறையும் நடந்த வரலாறு உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டில் (2017) கடந்த ஜனவரி 8-ந் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதன்பிறகு தற்போது வருகிற 29-ந் தேதி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு 2 முறை சொர்க்கவாசல் திறக்கப்படுவதால், அடுத்த ஆண்டு (2018) இந்த விழா நடக்காது.

    ஒரே ஆண்டில், இரண்டுமுறை வைகுண்ட ஏகாதசி வருவது மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. இதேபோல், கடந்த 2015-ம் ஆண்டு வைகுண்ட ஏகாதசி ஜனவரி 1-ந் தேதியும், டிசம்பர் 21-ந் தேதியும் என 2 முறை வந்தது நினைவுகூரத்தக்கது.

    2 முறை சொர்க்கவாசல் (பரமபதவாசல்) திறக்கப்படும் நிகழ்வை பொறுத்தவரையில் பக்தர்களுக்கு இரட்டிப்பு மகிழ்வை கொடுக்கக்கூடியதாகவே அமைந்துள்ளது.

    இதுகுறித்து அர்ச்சகர்கள் கூறுகையில், ‘ஆங்கில மாதங்களையோ, ஆண்டையோ நாங்கள் கருத்தில் கொள்ளவில்லை. தமிழ் மாதத்துக்கு இரண்டு ஏகாதசிகளாக வருடத்துக்கு 24 ஏகாதசிகள் வருகின்றன. மார்கழி வளர்பிறையில் வரும் ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்கில ஆண்டை வைத்து பார்க்கும்போது சில ஆண்டுகள் 2 முறை வருவது போன்று தோன்றும்’ என்று தெரிவிக்கின்றனர்.
    Next Story
    ×