search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கோபுரங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கோபுரங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது

    ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது. பாதுகாப்பு பணிக்காக 42 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
    பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் மிகவும் சிறப்போடு நடைபெறும். குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு வாய்ந்ததாகும். பகல் பத்து, ராப்பத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா வெகு விமரிசையாக நடைபெறும். வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் நாட்களில் பெரிய பெருமாள் எனப்படும் மூலவர் ரெங்கநாதர் முக்தியுடன் சேவை சாதிப்பார். அதன்படி இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா நேற்று இரவு மூலஸ்தானம் முன்பு உள்ள காயத்திரி மண்டபத்தில் நெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    இந்த நிகழ்ச்சியில் அரையர்கள், பட்டாச்சாரியார்கள் மட்டும் கலந்து கொண்டனர். பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) திருமொழி திருவிழா தொடங்குகிறது. காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 7.45 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தடைவார். காலை 8.15 மணி முதல் மதியம் 1 மணி வரை நம்பெருமாள் முன்பு நாலாயிரம் திவ்விய பிரபந்த பாடல்கள் பாடும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

    வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய விழாவான பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு வருகிற 29-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நடக்கிறது. முன்னதாக அன்று அதிகாலை 3.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 5 மணிக்கு சொர்க்கவாசலில் எழுந்தருளுவார். சொர்க்கவாசல் தினத்தன்று தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர் கள் கோவிலுக்கு வந்து நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து செல்வார்கள். கோவிலில் அன்று அதிக அளவில் பக்தர்கள் கூடுவதால் பாதுகாப்பு கருதி கோவிலில் உள்ள ரெங்கவிலாஸ் மண்டப அரங்கில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. இதில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கலந்து கொண்டு புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டார். பின்னர் கோவிலை சுற்றி பார்த்து பாதுகாப்பு பணிகள் குறித்து போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.


    ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் புறக்காவல் நிலையத்தை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் திறந்து வைத்து கண்காணிப்பு அறையை பார்வையிட்ட போது எடுத்த படம். 

    முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வருடா, வருடம் பாரம்பரியம் மிக்க இந்த விழா மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதே போன்று இந்த ஆண்டும் சிறப்பாக நடத்தப்பட உள்ளது. வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கோவிலை சுற்றி 42 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மக்களுக்கு முக்கிய தகவல்களை பரிமாறிக்கொள்ள 73 இடங்களில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்டு உள்ளன. 21 இடங்களில் பெரிய அளவிலான தொலைக்காட்சி பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் பக்தர்கள் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் காணலாம்.

    அதே போன்று குற்றங்கள் நடக்காமல் இருக்கவும், குற்றங்களை தடுக்கவும் 11 இடங்களில் ஒலிபெருக்கியுடன் கூடிய கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளது. 11 இடங்களில் வாகனம் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அவசர மருத்துவ வசதிக்காக 12 ஆம்புலன்சு வாகனங்களும் நிறுத்தப்பட உள்ளது. அதே போன்று 94424-51914, 94424-73540 என்ற 2 செல்போன் வசதியுடன் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. ஏதாவது புகார் உள்ளிட்ட தகவல்களை பக்தர்கள் இந்த எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    போக்குவரத்தை சரி செய்ய 4 உதவி ஆணையர்கள், 17 இன்ஸ்பெக்டர்கள், 50 சப்-இன்ஸ்பெக்டர்கள், 302 போலீசார், 50 ஊர்க்காவல் படை என மொத்தம் 423 பேர் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். அதேபோன்று வருகிற 29-ந்தேதி சொர்க்க வாசல் திறப்பு விழாவில் 2 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என்று கருதப்படுகிறது. எனவே அன்று திருச்சி மாநகர போலீசார் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட போலீசார் என மொத்தம் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது போலீஸ் துணை கமிஷனர்கள் மயில்வாகனன், சக்திகணேஷ், உதவி கமிஷனர் ஸ்ரீதர், கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் ரத்தினவேல்பாண்டியன், அர்ச்சகர்கள் சுந்தர்பட்டர், நந்துபட்டர், ராகவன் பட்டர் ஆகியோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×