search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கருட வாகனத்தில் எழுந்தருளிய வியூக சுந்தரராஜபெருமாள்.
    X
    கருட வாகனத்தில் எழுந்தருளிய வியூக சுந்தரராஜபெருமாள்.

    வியூக சுந்தர ராஜபெருமாள் பெரியாழ்வாருக்கு கருட வாகனத்தில் காட்சியளிக்கும் வைபவம்

    கூடலழகர் பெருமாள் கோவிலில் வியூக சுந்தர ராஜபெருமாள் பெரியாழ்வாருக்கு கருட வாகனத்தில் காட்சியளிக்கும் வைபவம் நடைபெற்றது.
    முன்னொரு காலத்தில் மதுரையை ஆண்ட வல்லபதேவன் என்ற மன்னருக்கு பரம் பொருள் யார் என்று பெரும் சந்தேகம் ஏற்பட்டது, உடனே அவர் மந்திரியை அழைத்து எனக்கு ஏற்பட்ட இந்த சந்தேகத்தை யார் தீர்த்து வைத்து, பரம் பொருள் யார் என்று நிரூபிக்கின்றனரோ அவருக்கு பொற்கிழி பரிசாக வழங்கப்படும் என்றும், அந்த பொற்கிழியை உயரமான இடத்தில் கட்டி தொங்கவிடவேண்டும், மெய்யான பரம் பொருளை யார் கூறி நிருபிக்கின்றனரோ அவர்கள் கைக்கு அது தானாக சென்று விடும் என்றும் கூறினார். 

    அதன் படி ஏற்பாடு செய்யப்பட்டது. எத்தனையோ அறிஞர்களும், புலவர்களும் வந்து கூறியும், பாடல்கள் பாடியும் சென்றனர். பொற்கிழியும் அவிழ்ந்த பாடில்லை, மன்னருக்கும் சந்தேகம் தீர்ந்தபாடில்லை. ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த விஷ்ணு சித்தர் அங்குள்ள வடபத்ரசயன பெருமாளுக்கு தினசரி பூமாலை தொடுத்து பெருமாளுக்கு சூடுவதையே தலையாய பணியாக செய்து வந்தார், அவருக்கு மன்னரின் அறிவிப்பு தெரிய வரவே, திருமாலே பரம் பொருள் என்று நிரூபிக்க மதுரைக்கு வந்தார் விஷ்ணு சித்தர்.


    யானை வாகனத்தில் பெரியாழ்வார்.

    அங்கு அவர் திருமாலே பரம்பொருள் என்று கூற அப்போது பொன்முடிப்பு தானாக அவிழ்ந்து விஷ்ணு சித்தர் கைக்கு வந்தது, மன்னரும் அதிசயித்து போனார். விஷ்ணு சித்தரை கவுரவிக்க எண்ணி அவரை தனது யானை மேல் ஏற்றி நகர்வலம் வந்தார். 

    அரண்மனை நுழைவு வாயிலுக்கு அருகே வந்த போது தன் பக்தனுக்கு அளிக்கப்பட்ட சிறப்புகளை காண ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் திருமால் கருட வாகனத்தில் வானில் காட்சியளித்தார், பெருமாளின் பேரழகை அனைவரும் கண்டதால் பெருமாளுக்கு கண் திருஷ்டி ஏற்பட்டு விடுமே என்று விஷ்ணு சித்தர் “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம் மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வித் திருகாப்பு” என்ற பாடலை பாடினார், தனக்கே திருஷ்டி கழித்த விஷ்ணு சித்தரின் செயலை கண்டு மகிழ்ந்த திருமால் பக்தியில் நீரே பெரியவர் என்று வாழ்த்தினார். 

    அதன் பின்னர் விஷ்ணு சித்தரை மக்கள் பெரியாழ்வார் என்று அழைக்கத்தொடங்கினர். இன்றளவும் இந்த பாடலே அனைத்து பெருமாள் கோவில்களிலும் தினமும் பாடப்படுகிறது. அந்த பாடல் பாடப்பட்ட தினமான நேற்று கூடலழகர் பெருமாள் கோவிலில் இருந்து வியூக சுந்தரராஜபெருமாள் இன்றைய ஜான்சி ராணி பூங்கா அருகே இன்றளவும் ஆண்டு தோறும் நிகழ்ச்சி நடந்து வருகிறது அப்போது கோவில் பட்டர்கள் பல்லாண்டு பாடலை பாடி வருகிறார்கள். இதன்படி நேற்றும் ஜான்சி ராணி பூங்கா அருகே கருட வாகனத்தில் வியூக சுந்தரராஜபெருமாள் எழுந்தருளி பெரியாழ்வாருக்கு காட்சியளிக்கும் வைபவம் திரளான பக்தர்கள் மத்தியில் நடைபெற்றது.
    Next Story
    ×