search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா
    X

    திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா

    உலகிலேயே சனி பகவானுக்கு தனி சன்னதி திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ளது.
    புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ளது. 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை சனீஸ்வர பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகும்போது சனிப்பெயர்ச்சி விழா திருநள்ளாறில் அதிவிமரிசையாக கொண்டாடப்படும். வருகிற 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி 1 நிமிடத்துக்கு சனீஸ்வர பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசிக்கிறார்.

    “சனியைப் போல கொடுப்பாரும் இல்லை, சனியைப் போல கெடுப்பாரும் இல்லை” என்பது பழமொழி.

    சுபகிரகமாகவும், பாவ கிரகமாகவும், மத்திய கிரகமாகவும் சேரும், பார்க்கும் கிரகத்தின் இயல்புகளுக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் இவரை பொங்கு சனீஸ்வரர், மங்கு சனீஸ்வரர், அஷ்டமத்து சனீஸ்வரர் என்றெல்லாம் பெயரிட்டு அழைக்கின்றனர்.

    அவரவர் வினைகளுக்கு ஏற்ப இன்ப, துன்பங்களை தந்தருளும் சனிபகவான் ஆயுளை நிர்ணயிக்கும் ஆயுள்காரகன் ஆவார் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இவர் ஒவ்வொரு ராசியையும் சுற்றிவர 2½ ஆண்டுகள் ஆகின்றன. அதன்படி 12 ராசிகளையும் சுற்றிவர 30 ஆண்டுகள் ஆகும்.

    “முப்பது வருஷம் வாழ்ந்தவனும் இல்லை; முப்பது வருஷம் கெட்டவனும் இல்லை” என்ற பழமொழி சனி பகவானுடைய ஆணைப்படி மக்கள் வாழ்க்கை அமைந்துள்ளது என்ற உண்மையை உணர்த்துகிறது. ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி எல்லோரையும் சமநிலையில் பார்க்கக்கூடியவர் சனீஸ்வரர். இதிகாச நாயகர்களான ராமன், ராவணன், கண்ணன் மற்றும் இந்திரன் போன்றவர்களும் சனீஸ்வரனின் ஆணைப்படி இன்ப, துன்பங்களை அடைந்தனர். அதனால் தான் மக்கள் அனைவரும் சனீஸ்வரனின் கோபத்தை தடுக்கவும், கருணையைப் பெறவும் மிகுந்த பயபக்தியுடன், தியான பாராயணம், அபிஷேக, ஆராதனைகள் செய்கின்றனர்.

    உலகிலேயே சனி பகவானுக்கு தனி சன்னதி திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ளது. இங்கு அனுக்கிரக மூர்த்தியாக காட்சி தரும் சனீஸ்வரர் தன்னை வழிபடுபவர்களுக்கு சனி தோஷ நிவர்த்தி அளித்து எல்லா துன்பங்களையும் போக்குவதுடன் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும், விரும்பிய பலன்களையும் அளிப்பதாக தலபுராணம் கூறுகிறது.

    திருநள்ளாறு கோவிலில் மூலமூர்த்தி தர்பாரண்யேஸ்வரர் ஆவார். கருவறையில் பெருமான் சுயம்பு ஜோதிலிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். சனிபகவான் சன்னதி 2-வது கோபுர வாசலின் வலதுபுறமாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

    பொதுவாக சனி பகவான் சன்னதி மேற்கு நோக்கியே இருக்கும். உக்கிரமூர்த்தியாகிய சனீஸ்வரர் இங்கு சாந்த மூர்த்தியாக கிழக்கு நோக்கி அபயமுத்திரையுடன் அருளாசி வழங்குகிறார். மற்ற நவக்கிரகங்கள் இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படவில்லை என்பது சனீஸ்வரருடைய முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

    2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா உன்னத திருவிழாவாக நடைபெறும். திருநள்ளாறில் சுத்தவாக்கிய பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி அனுஷ்டிக்கப்படுகிறது. வருகிற 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி 1 நிமிடத்துக்கு சனீஸ்வர பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசிக்கும்போது சனீஸ்வரருக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேக, ஆராதனை நடைபெறும். அதைத் தொடர்ந்து சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறும். 10 மணி 1 நிமிடத்திற்கு மகா தீபாராதனை காட்டப்படும்.

    2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந் தேதி முடிய 3 ஆண்டுகள் சனீஸ்வர பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்வார்.

    சனிப்பெயர்ச்சி நேரம் :

    சனிபகவான் வருகிற 19-ந் தேதி காலை 10 மணி 1 நிமிடத்துக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசிக்கிறார்.

    அடுத்த சனிப்பெயர்ச்சி:- அடுத்த சனிப்பெயர்ச்சி தோராயமாக 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந் தேதி நடைபெறும். அன்று சனிபகவான் மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்.

    புதிய முறை தரிசனம் :

    முன்பு சனிக்கிழமை மற்றும் சனிப்பெயர்ச்சியின்போது இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சனிபகவானை மட்டும் தரிசனம் செய்ய முடிந்தது. கட்டண தரிசனம் செய்பவர்கள் மட்டும் சுவாமி, அம்பாள் மற்றும் சனிபகவானை தரிசனம் செய்ய முடிந்தது. தற்போது அனைத்து பக்தர்களும் சுவாமி, அம்பாள் மற்றும் சனிபகவானை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், பக்தர்களின் வசதிக்காக தர்பாரண்யேஸ்வரசுவாமி சன்னதி குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு 5 டன் குளிர்சாதன பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதுபோன்று வரிசையில் வரும் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் பாட்டில்கள் மற்றும் பிஸ்கட் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எப்படி செல்வது? :

    புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் திருநள்ளாறு உள்ளது.

    சென்னையில் இருந்து பஸ் அல்லது காரில் வருபவர்கள் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, திருக்கடையூர் வழியாக காரைக்கால் வந்து மேற்கு திசையில் சென்றால் திருநள்ளாறை அடையலாம்.

    ரெயில் மூலம் வருபவர்கள் மயிலாடுதுறை வந்து அங்கிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவு பயணித்தால் திருநள்ளாறு சென்றடையலாம்.

    நெல்லையில் இருந்து வரும் பக்தர்கள் மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை வந்து அங்கிருந்து காரைக்கால் வழியாக திருநள்ளாறு செல்லலாம்.

    கோவையில் இருந்து வரும் பக்தர்கள், கும்பகோணம், மயிலாடுதுறை வந்து அங்கிருந்து திருநள்ளாறு செல்லலாம். காரைக்காலில் இருந்து திருநள்ளாறு செல்ல பஸ், ஷேர் ஆட்டோ வசதி உள்ளது.



    நளதீர்த்தத்தில் புதிய தண்ணீர் :

    திருநள்ளாறு வரும் பக்தர்கள் முதலில் நளதீர்த்தத்தில் புனித நீராடி விட்டு, அங்குள்ள நளன் கலிதீர்த்த விநாயகர் கோவிலுக்கு சென்று தேங்காய் உடைத்து விநாயகரை வழிபட்ட பின்னரே கோவிலுக்கு செல்ல வேண்டும்.

    பக்தர்கள் புனித நீராடுவதற்கு வசதியாக குளத்தில் உள்ள பழைய தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு தூர்வாரி, புதிதாக மணல் நிரப்பி தண்ணீர் விடப்பட்டுள்ளது. சனிப்பெயர்ச்சி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்பதால் தொடர்ந்து 24 மணி நேரமும் 2 மோட்டார்கள் மூலம் குளத்திலிருந்து பழைய தண்ணீரை வெளியேற்றி, 2 மோட்டார்கள் மூலம் புதிதாக தண்ணீர் விடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    மேலும் குளத்தை சுற்றிலும் நிரந்தர மற்றும் தற்காலிகமாக பெண்கள் உடைமாற்றும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதுபோன்று வாகன நிறுத்தும் இடங்கள், தற்காலிக பஸ்நிலையங்கள், வடக்கு உள்வட்டச் சாலை, முக்கிய இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 80-க்கும் மேற்பட்ட தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இது தவிர முக்கிய இடங்களில் நிரந்தர கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    பெண்கள் உடைமாற்றும் அறை :

    புதுச்சேரி அரசு திருநள்ளாறை கோவில் நகரமாக அறிவித்து பல கோடி ரூபாய் செலவில் தங்குமிடம், சாலை வசதிகள், புறவழிச்சாலை, நளதீர்த்தம் உள்ளிட்ட அனைத்து தீர்த்தங்களையும் அழகு படுத்துதல் போன்ற பணிகளை செய்து வருகிறது. மேலும் புதிதாக திருநள்ளாறு வடக்கு வீதியில் வரிசை வளாகம் கட்டப்பட்டுள்ளது. தற்போது இது பக்தர்களின் பயன்பாட்டில் உள்ளது. இதுமட்டுமின்றி வடக்கு உள் வட்டச்சாலைகளில் பல்வேறு இடங்களில் பக்தர்கள் தங்கி இளைப்பாறுவதற்காக வசதிகள், இலவச கழிவறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

    சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பிலும், தேவஸ்தான நிர்வாகம் சார்பிலும் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. சென்னை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், காரைக்கால் வழியாக வரும் பஸ்களை நிறுத்த திருநள்ளாறு முன்பு உள்ள வடக்கு உள்வட்டச் சாலையிலும், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, பேரளம், நெடுங்காடு வழியாக வரும் பஸ்களை நிறுத்த சுரக்குடி ரோட்டில் வடக்கு உள்வட்ட சாலையின் மேற்கு பகுதியிலும் தற்காலிக பஸ்நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    தரிசனத்திற்கு செல்லும் வரிசை :

    சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு இலவச தரிசனம், ரூ.200, ரூ.500 கட்டண தரிசனம், நன்கொடையாளர்கள் தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் என்று 5 தரிசன பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இலவச தரிசனத்திற்கு வருபவர்கள் நளன் குளம் செல்லும் வழியில் திருநள்ளாறு போலீஸ் நிலையம் அருகில் தொடங்கும் வரிசையில் நுழைந்து வரிசை வளாகம் வழியாக கோவிலின் வடக்கு பிரகாரத்தில் நுழைந்து 3-வது பிரகாரம், 2-வது பிரகாரம் வழியாக உள்ளே செல்லலாம். 

    ரூ.200 மற்றும் சிறப்பு தரிசனத்திற்கு வருபவர்கள் தெற்கு வீதியில் அமைக்கப்பட்டுள்ள வரிசையில் நுழைந்து சரஸ்வதி தீர்த்தத்தின் மேற்கு கரை வழியாக கோவிலின் தெற்கு வாசலில் நுழைந்து உள்ளே செல்லலாம். அதுபோன்று ரூ.500 மற்றும் நன்கொடையாளர்கள் கீழவீதியில் அமைக்கப்பட்டுள்ள வரிசையில் நுழைந்து சன்னதி தெரு மற்றும் ராஜகோபுரம் வழியாக கோவிலுக்குள் செல்லலாம்.

    சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு இலவச தரிசனம், ரூ.200, ரூ.500 கட்டண தரிசனம், நன்கொடையாளர்கள் தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் என்று 5 தரிசன பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இலவச தரிசனத்திற்கு வருபவர்கள் நளன் குளம் செல்லும் வழியில் திருநள்ளாறு போலீஸ் நிலையம் அருகில் தொடங்கும் வரிசையில் நுழைந்து வரிசை வளாகம் வழியாக கோவிலின் வடக்கு பிரகாரத்தில் நுழைந்து 3-வது பிரகாரம், 2-வது பிரகாரம் வழியாக உள்ளே செல்லலாம்.

    ரூ.200 மற்றும் சிறப்பு தரிசனத்திற்கு வருபவர்கள் தெற்கு வீதியில் அமைக்கப்பட்டுள்ள வரிசையில் நுழைந்து சரஸ்வதி தீர்த்தத்தின் மேற்கு கரை வழியாக கோவிலின் தெற்கு வாசலில் நுழைந்து உள்ளே செல்லலாம்.

    அதுபோன்று ரூ.500 மற்றும் நன்கொடையாளர்கள் கீழவீதியில் அமைக்கப்பட்டுள்ள வரிசையில் நுழைந்து சன்னதி தெரு மற்றும் ராஜகோபுரம் வழியாக கோவிலுக்குள் செல்லலாம்.

    Next Story
    ×