search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெண்கள் ஏன் சில கோவில்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை?
    X

    பெண்கள் ஏன் சில கோவில்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை?

    பெண்கள் ஏன் சில கோவில்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை? உதாரணத்திற்கு, மஹாராஷ்டிரத்தில் உள்ள சனிபகவான் கோவிலில் ஏன் இந்த பாகுபாடு? என்று பார்க்கலாம்.
    கேள்வி: சத்குரு, பெண்கள் ஏன் சில கோவில்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை? உதாரணத்திற்கு, மஹாராஷ்டிரத்தில் உள்ள சனிபகவான் கோவிலில் ஏன் இந்த பாகுபாடு?

    கோவையில் உள்ள லிங்க பைரவியில் கர்ப்பக் கிரகத்திற்குள் ஆண்கள் நுழைய அனுமதியில்லை. ஆனால் அவர்கள் ஒரு போதும் இதற்கு மறுப்புத் தெரிவிப்பதில்லை. திருமணமாகி விட்டதால் எதையும் மறுத்துப் பேசாமல் இருக்கப் பயிற்சி பெற்றுள்ளார்கள் (சிரிப்பலை).

    இந்தத் தலங்கள் வழிபாட்டிற்கான இடமில்லை என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவை வெவ்வேறு விதமான சக்தி மையங்கள். சூரிய மண்டலத்தின் கிரகங்கள், நம்முடைய உடல் இயக்கம், மனதின் கட்டமைப்பு, நம் வாழ்வின் தற்போதைய நிலை ஆகியவற்றின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை நாம் அறிந்துள்ளதால், நாம் வெவ்வேறு கிரகங்களுக்காக கோவில்கள் அமைத்துள்ளோம்.

    உங்கள் பிறப்பின் நேரம் மற்றும் தேதியைப் பொறுத்து, நீங்கள் பிறந்த இடத்தின் அட்ச ரேகை மற்றும் தீர்க்க ரேகையைப் பொறுத்து, இந்திய ஜோதிடர்கள், எந்தெந்த கிரகங்கள் உங்கள் வாழ்க்கையின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நுட்பமான கணக்குகள் போடுகிறார்கள். இவை ஓரளவிற்கு உங்களுக்குப் பொருத்தமாகவே இருக்கும். எனினும், உள்நிலைதொழில் நுட்பம் ஒன்று உங்கள் கைகளில் இருந்தால், இந்தக் கிரகங்களின் தாக்கங்களை அது சமன்படுத்தும்.

    சனி என்பது தூரமாய் உள்ள ஒரு கிரகம், அது சூரியனை ஒருமுறை சுற்றிவர 30 ஆண்டுகள் எடுக்கும். சனியின் சுழற்சியையும், பூமியின் சுழற்சியையும், உங்கள் பிறப்பு பற்றிய குறிப்புகளையும் வைத்து, உங்கள் வாழ்க்கையின் வெவ்வேறு தருணங்களில் சனி உங்கள் மீது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் கணக்கிட முடியும்.

    சூரியனின் மைந்தர்களில் ஒருவர் தான் சனி, அவருடைய இன்னொரு மைந்தர்யமன். சனி ஆதிக்கம், துயரம், ஆழ்ந்த மனக்கவலை, நோய், மற்றும் பேரிழப்பிற்கான கடவுள். யமனோ மரணத்திற்கான கடவுள். இந்த சகோதரர்கள் இருவரும், எப்போதும் கைகோர்த்துக் கொண்டு சேர்ந்தே செயல்படுவார்கள்.

    அவர்களுடைய தாய், சூரியனின் மனைவி சாயா. சாயா என்றால் “நிழல்”. அறிவியலை இப்படி கதையாக வெளிப்படுத்தினார்கள். நமக்கு சூரியன் தான் வெளிச்சத்திற்கான மூலம். அவரின் மனைவி தான் சாயா, அதாவது நிழல். சூரிய ஒளி இருப்பதால் தான் நிழல் இருக்கிறது.

    ஏழாவது நாளான சனிக்கிழமை, சனியின் நாள். ஹிந்தியில் ஏழு என்பதை ‘சாத்’ என்பார்கள், அது ஆங்கிலத்தில் ‘சாட்டர்டே’  ஆனது. இந்திய ஜோதிடத்தில் சனி என்பது ஏழாவது கிரகம். “கிரகம்“ என்ற வார்த்தைக்கு “கிரகிப்பு” அல்லது “தாக்கம்“ என்பதுபொருள்.

    நவீனவானவியலின் படி சனி ஆறாவது கிரகம்தான். ஆனால், இந்திய வானவியலில், பூமியிலுள்ள உயிர்களின் மீது அதிக பட்சதாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய விண்வெளிப் பொருட்களைப் பார்த்தார்கள். அந்த விதத்தில், சூரியனையும் சந்திரனையும் கூட கிரகங்களாகப் பார்த்தார்கள், இவற்றைக் கோள்களாகப் பார்க்காததால் சனி ஏழாவது கிரகமானது.

    பூமியிலுள்ள உயிர்களின் மீது அதிக தாக்கம் ஏற்படுத்தும் கிரகங்களின் வரிசை முதலில் சூரியன், பிறகு சந்திரன், புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், மற்றும் சனி. இதில் சனி ஏழாவதாய் இருப்பினும், மிகவும் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாய் இருக்கிறான். ஏனென்றால் ஆரோக்கியமும் சந்தோ‌ஷமும் உங்கள் வாழ்க்கையில் சுதந்திரத்தைக் கொடுத்தாலும், நோயும் தீராத் துயரமும் உங்கள் வாழ்க்கையின் மீது பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும்.

    இப்போது கேள்வியெல்லாம், வெளி சக்திகளான வானின் கோள்கள் உங்கள் மீது தாக்கம் ஏற்படுத்த அனுமதிக்கிறீர்களா? அல்லது உங்கள் உள் தன்மை மட்டுமே உங்களை வழி நடத்துகிறதா? அதனால் தான், நம் கலாச்சாரத்தில், தேர்ந்த ஜோதிடர்கள், ஆன்மீகப் பாதையில் இருப்பவர்கள் குறித்தும், குருவின் வழிகாட்டுதலில் இருப்பவர்கள் குறித்தும் கணிப்புகள் செய்யமறுத்தார்கள்.

    சனியுடைய சுழற்சி 30 வருடம் என்பதால், 30 வருடங்களுக்கு ஒரு முறை சனியின் சக்தி உங்களை அதிகம் பாதிக்கும் நிலைக்கு உள்ளாகிறீர்கள். குறிப்பிட்ட இந்த ஏழரை வருடக்கால கட்டத்தை ஹிந்தியில் ‘சாடேசாத்’ எனவும், தமிழில் ‘ஏழரைசனி’ எனவும் குறிப்பிட்டார்கள்.

    நோய், மனக்கவலை, பேரிழப்புகள், மரணம் மற்றும் பிறவிசயங்கள் உங்களை பாதிக்கும் வாய்ப்புகள் அப்போது அதிகரிக்கின்றன. இந்த ஏழரை சனியின் போது ஒருவர் விழக்கூடிய குழிகளிலிருந்து பாதுகாத்திட, சனி கோயில்களில் செய்யக் கூடிய பல்வேறு செயல் முறைகளும் சடங்குகளும் தொன்றுதொட்டு இந்தக் கலாச்சாரத்தில் உருவாக்கப்பட்டன.

    சனி தேவனுக்கான கோயில்களில், சனி கடவுளாக உருவகிக்கப் பட்டுள்ளான். சில மாதங்களுக்கு முன், மஹாராஷ்டிரத்தில் உள்ள சனிஷிங்னா பூர்கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது குறித்து பெரும் சர்ச்சை நிலவியது. மிகவும் சக்தி வாய்ந்த சடங்குகள் இங்கே செய்யப்படுகின்றன.

    சனிகோயில்கள், குறிப்பாக செய்வினை செயல்களுக்கும் ஆவிகளை விரட்டவும் பயன்படுத்தப்படுகின்றன. செய்வினைகளின் தாக்கத்திலிருந்து விடுபடவும், ஆவி புகுந்து விட்டது போல் உணர்ந்தால் விரட்டுவதற்கும் இக்கோயில்களுக்கு மக்கள் வருகிறார்கள்.

    இங்கு பில்லி சூனியம் போன்ற செயல் முறைகள் செய்யப்படுவதால், இவ்விடங்களின் சக்தி பெண்களுக்கு உறுதுணையாக இருக்காது. அடுத்ததலை முறையை உருவாக்கிடும் முக்கியமான பொறுப்பு ஒரு பெண்ணிற்கு வழங்கப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட சில சக்திகளை அவளுடைய உடல் சுலபமாக கிரகித்துக் கொள்ளும், அந்த சக்தி அவளை எளிதாக பாதிக்க முடியும். குறிப்பாக, கர்ப்ப காலத்திலும் மாத விலக்கு காலத்திலும் ஒரு பெண் இந்த சக்திகளுக்குத் ஏற்புடையவளாய் இருப்பாள்.

    அப்படியானால் பெண் கர்ப்பக் கிரகத்திற்குள் நுழையவே கூடாதா? அதற்குத் தேவையான விதத்தில் பயிற்சி பெற்றிருந்தால் நுழையலாம். ஆனால், அந்த விதத்தில் ஆண்களுக்குப் பயிற்சியளிப்பதை விட பெண்களுக்கு பயிற்சியளிப்பது கடினமானது. ஏனென்றால், வாழ்க்கையின் இந்தப் பரிமாணங்களுக்கு ஆண்களின் உடலில் ஒரு சில வி‌ஷயங்கள் சாதகமாய் உள்ளன. பெண்ணின் உடலமைப்பே, செய்வினை சக்திகள் அவளை ஆழமாய் பாதிக்கக் கூடிய விதத்தில் அமைந்துள்ளது.

    செய்வினை சக்திகளை அகற்றி ஆவிகளை விரட்டிட, குறிப்பிட்ட சில சக்திகள் பயன்படுத்தப் படுகின்றன. அவை ஒரு பெண்ணிற்கு நல்ல தேகிடையாது. சனி நல்ல வரில்லை. ஆனால், அவர் நம் வாழ்க்கையின் அங்கமாக இருக்கிறார், அதனால் அவரையும் கையாள வேண்டிய நிலை நமக்கு உண்டு. இந்தச் செய்வினை சக்திகளால், இப்படிப்பட்ட வி‌ஷயங்கள் செய்யப்படும் இடங்களுக்கு பெண்கள் நுழையக் கூடாது என்றார்கள். அவர்களுடைய நல்வாழ்விற்கு அது கேடுவிளை விப்பதாய் இருக்கும்.

    வாழ்க்கையில் சில வி‌ஷயங்கள் தவறாகும் போது, அவற்றை வேறு விதத்தில் கையாளத் தேவையிருக்கும். அந்தச் சூழ்நிலை இனிதாக இருக்காது. இக்கோயில்கள் அந்த நோக்கத்தில் உருவாக்கப்பட்டவை. இன்று பெண்கள் இங்கு அனுமதிக்கப் படாததை சிலர் பெண்களுக்கு எதிரான உரிமை மறுப்பாகப் பார்க்கிறார்கள். இது உரிமை மறுப்பு கிடையாது, இது அவர்களின் உரிமை.

    இது செயல் படுத்தப்படும் விதம் வேண்டுமானால் முரட்டுத் தனமாகவும் உரிமை மறுப்பு போலவும் தோன்றலாம், அதனால் தான் சில பெண்கள் இதனை எதிர்த்துப் போராடுகிறார்கள்.

    ஒருநாள் லிங்க பைரவியின் முன்னால் ஆண்கள் கூட்டம் சேர்ந்து, “நாங்களும் கர்ப்பக் கிரகத்திற்குள் அனுமதிக்கப்பட வேண்டும்,” என்று போராடினால், ஒரு வேளை கர்ப்பக் கிரகத்தை பூட்டத் தேவையிருக்கும் என நினைக்கிறேன். அவர்களை உள்ளே அனுமதிக்க மாட்டேன், ஏனென்றால் அது ஆண்களுக்காக வடிவமைக்கப் படவில்லை. தகுந்த பயிற்சி பெறாமல், ஆண்கள் அங்கு நுழைய முடியாது. இது பாகுபாடு கிடையாது, புரிந்து கொள்ள வேண்டிய வேறுபாடு.

    சந்திர சுழற்சியின் ஒரு பாதி காலம் தியான லிங்கத்தை ஆண்கள் பராமரிப்பார்கள், மறுபாதி காலம் பெண்கள் பராமரிப்பார்கள். இரண்டு தன்மையையும் சேர்த்து பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தின் தன்மை அது.

    வேறு சில கோயில்களில், உதாரணமாக வெள்ளியங்கிரி மலை மீது உள்ள கோயிலைப் பொறுத்தவரை, மலையேறிச் செல்லும் பாதை, வன விலங்குகள் நிறைந்த அடர்ந்த காட்டின் ஊடே செல்வதால், பழங்காலத்தில் பெண்கள் பயணிப்பது பாதுகாப்பாக இருக்காது என்பதால் தடுத்தார்கள். ஆனால், இப்போது இந்த தடைகளை சற்று தளர்த்திக் கொள்ளலாம்.

    சனி கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் படி கோரிக்கை விடுத்துள்ள இத்தருவாயில், கோயில்களின் பின்னணியில் உள்ள விஞ்ஞானத்தை நாம் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். அவை எதற்காக உருவாக்கப்பட்டன என்று கற்றுக் கொடுக்க வேண்டும்.

    ஜனநாயகத்தை நாம் போற்றிக் கொண்டாடும் இன்றைய கால கட்டத்தில், நாம் அனைத்திலும் சம உரிமையை நிலை நாட்டவே விரும்புகிறோம். ஆனால், சில சூழ்நிலைகளில் இது பெண்களுக்குப் பாதகமாய் மாறிவிடும். மற்றபடி நாம் ஒரு இனமாய், இரண்டு பாலினமாய் இருக்கிறோம். இது போன்ற ஒரு சில இடங்களைத் தவிர, பாலினம் ஒரு பொருட்டாய் இருக்க வேண்டிய வேறு இடங்கள் கழிப்பறையும் படுக்கையறையும் மட்டும் தான்.
    Next Story
    ×