search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஒரே நேர்க்கோட்டில் அமைந்த ஆலயங்கள்
    X

    ஒரே நேர்க்கோட்டில் அமைந்த ஆலயங்கள்

    பஞ்சபூத ஸ்தலங்கள் என கூறப்படும் ஐந்து கோவில்களும் ஒரே நேர்க் கோட்டில் அதாவது ஒரே தீர்க்க ரேகையில் அமைக்கப்பட்டுள்ளன.
    இந்த பூவுலகில் நமது கவனத்துக்கு வராத விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. அறிவியல் முதல் ஆன்மிகம் வரையில் உள்ள அவற்றை பற்றி அவ்வப்போது நாம் அறியும்போது ஆச்சரியப்படுகிறோம். அது போன்ற ஆச்சரியமூட்டும் ஆன்மிக விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றில் முதன்மையாக இருப்பது கோவில்கள் மற்றும் அவை அமைக்கப்பட்ட விதம் ஆகியனவாகும்.

    நமது ஆன்றோர்கள் கோவில்களை நிர்மாணம் செய்ய பல்வேறு காரண காரிய விதிமுறைகளை மனதில் கொண்டு செயல்பட்டதை இன்றைய காலகட்டத்தில் உணரும் வகையில் பல உதாரணங்கள் உள்ளன. குறிப்பாக, பூகோள ரீதியாக முக்கியத்துவம் பெற்ற இடங்களையே கோவில்கள் அமைக்க தேர்ந்தெடுத்தார்கள். அத்தகைய இடங்களின் முக்கியத்துவம் மற்றும் மறைபொருளாக உள்ள ஆன்மிக உள்ளர்த்தங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளும் அனைவரும் வியப்பை அடைவார்கள்.

    அக்காலத்தில் ஜி.பி.எஸ். போன்ற புவியியல் சார்ந்த உணரும் கருவிகள் அல்லது இதர வகையான தொழில்நுட்ப கருவிகள் ஆகிய எதுவும் இல்லாத நிலையில், பஞ்சபூத ஸ்தலங்கள் என கூறப்படும் ஐந்து கோவில்களும் ஒரே நேர்க் கோட்டில் அதாவது ஒரே தீர்க்க ரேகையில் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது அந்த கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு சிவ ஆலயங்கள் அனைத்தும் ஒரே தீர்க்க ரேகையில் அமைக்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக சொல்வதென்றால், இந்திய அளவில் அமைக்கப்பட்ட அந்த கோவில்கள் மிகவும் சரியாக ஒரே நேர்க்கோட்டில் அமைக்கப்பட்டுள்ள விதத்தை நாம் சாதாரணமான ஒரு நிகழ்வாக எடுத்துக்கொள்ள இயலாது. அதன் பின்னணியில் உள்ள அர்த்தங்கள் நம்மால் அறியப்பட்டால் நமது பல கேள்விகளுக்கான விடைகளும் தெரிய வரலாம். அத்தகைய கோவில்களில் சிலவற்றை பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

    பஞ்ச பூத தலங்களில் நிலம்-காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில், நீர்-திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவில், நெருப்பு-திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், காற்று-திருக்காளத்தி காளத்தீசுவரர் கோவில், ஆகாயம்-சிதம்பரம் நடராஜர் கோவில் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

    மேற்கண்ட, பஞ்சபூத தலங்கள் கிட்டதட்ட ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்களாக உள்ளன. அவை நிர்மாணிக்கப்பட்ட காலகட்டத்தில் எவ்விதமான கருவிகள் அல்லது செயற்கைக்கோள் உதவிகள் இல்லாமல் சரியான தீர்க்க ரேகையில் அவற்றை நிர்மாணித்துள்ளனர்.



    அதாவது, வடக்கே உள்ள இமயமலையில் அமைந்த கேதார்நாத் கோவில் முதல் தெற்கே கடல் கரையில் அமைக்கப்பட்ட ராமேஸ்வரம் கோவில் வரை இடைப்பட்ட தூரம் கிட்டத்தட்ட 2,400 கிலோமீட்டர்கள் இருக்கலாம். அவ்வளவு நீண்ட தூர இடைவெளியில் அமைந்துள்ள பல சிவ ஆலயங்கள் கிட்டத்தட்ட ஒரே தீர்க்க ரேகையில் அமைந்திருப்பது புதிரானதாக உள்ளது.

    இமயம் முதல் குமரி வரை அமைந்துள்ள பல கோவில்கள் பூகோள முக்கியத்துவம் மிக்க அமைப்புடனும், நேர்க்கோட்டிலும் அமைந்திருக்கும் வாய்ப்புகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

    79 டிகிரி தீர்க்க ரேகை இடங்கள் :

    * கேதார்நாத்-கேதார்நாத் கோவில் (79.06 டிகிரி )

    * காலேஷ்வரம்-காலேஷ்வரா முக்தீஷ்வர சுவாமி கோவில் (79.90 டிகிரி)

    * காஞ்சீபுரம்-ஏகாம்பரநாதர் கோவில் (79.69 டிகிரி)

    * திருவானைக்காவல்-ஜம்புகேஸ்வரர் கோவில் (78.70 டிகிரி)

    * திருவண்ணாமலை-அண்ணாமலையார் கோவில் (79.06 டிகிரி)

    * சிதம்பரம்- நடராஜர் கோவில் (79.69 டிகிரி)

    * காளஹஸ்தி- காளஹஸ்திநாதர் கோவில் (79.69 டிகிரி)

    * ராமேஸ்வரம்- ராமநாத சுவாமி கோவில் (79.31 டிகிரி)

    Next Story
    ×