search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நற்பலன்களை நாளும் தரும் சாளக்கிராமம்
    X

    நற்பலன்களை நாளும் தரும் சாளக்கிராமம்

    சாளக்கிராம கற்கள் வடிவத்திலும் இறைவனாகிய மகாவிஷ்ணுவை வழிபடுவது என்பதும், பல குடும்பங்களில் பாரம்பரியமாக இருந்து வரும் பழக்கம்.
    கல்லிலும், புல்லிலும், தூணிலும், துரும்பிலும் இறைவனை நமது முன்னோர்கள் கண்டதாக வரலாறு. அதன்படி சாளக்கிராம கற்கள் வடிவத்திலும் இறைவனாகிய மகாவிஷ்ணுவை வழிபடுவது என்பதும், பல குடும்பங்களில் பாரம்பரியமாக இருந்து வரும் பழக்கம்.

    பண்டைய இந்தியாவில் சிறந்து விளங்கிய அவந்தி தேசம் எனப்பட்ட இன்றைய நேபாள பகுதியின் இமயமலை அடிவாரத்தில், ‘ஹரி பர்வதம்’ என்ற மலை உள்ளது. அங்கே சங்கர தீர்த்தம் என்னும் பகுதியில் பாயும், கண்டகி நதியில் சாளக்கிராம கற்கள் உற்பத்தியாகின்றன.

    சாளக்கிராமம், கண்டகி நதியில் தாமாக தோன்றுகின்ற ஒருவகை அழகிய தெய்வீக அம்சம் நிறைந்த கற்களாகும். அவை பல வடிவங்களிலும், பல வண்ணங்களிலும் கிடைக்கின்றன. மகாவிஷ்ணுவே தங்க மயமான ஒளி பொருந்திய ‘வஜ்ரகிரீடம்’ என்ற புழுவாக வடிவம் எடுத்து, சாளக்கிராம கற்களை குடைந்து, அதன் மையத்திற்குச் சென்று, ஓம்கார சப்தம் எழுப்பியபடி, தனது முகத்தினால் பல்வேறு அடையாளங்களை உண்டாக்குவதாகச் சொல்லப்படுகிறது.

    அவ்வாறு தோன்றிய சாளக்கிராம கற்களில், நாராயணனின் ஜீவ ஸ்வரூபம் ஐக்கியமடைந்து இருப்பதன் காரணமாக மகாவிஷ்ணுவின் அவதார வடிவமாகவே அவை பக்தர்களால் போற்றப்படுகின்றன. மேலும் சாளக்கிராம கற்களில் தோன்றக்கூடிய அடையாளங்கள் மற்றும் வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பெயர்களும், பூஜை முறைகளும் வித்தியாசப்படுகின்றன. சாளக்கிராமம் என்பது நெல்லிக் கனியின் அளவில் இருந்து ஆறு அடிக்கும் மேலான உயரம் கொண்டதாக இருக்கும்.

    வைஷ்ணவ சம்பிரதாயத்தில் பிரதானமாக கருதப்படும் 108 புராண திவ்ய தேச ஆலயங்கள் சிலவற்றில் சாளக்கிராம கற்கள் கொண்டே மூல மூர்த்தி சிலை அமைத்து வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைகள் உச்சந்தலை தொடங்கி, நாபி வரையில் நீண்ட துளை உடையதாக இருக்கும். உட்புறத்தில் சங்கு, சக்கரம், தாமரை ஆகிய விஷ்ணுவின் சின்னங்களும் இருக்கும்.

    அப்படிப்பட்ட சாளக்கிராம சிலைகள் மூலவராக இருக்கும் ஆலயங்கள், பக்தர்களுக்கு விரைவில் பலன் தருவதாக நம்பப்படுகிறது. நேபாளத்தில் உள்ள முக்திநாத் என்னும் சாளக்கிராம தலம், தாமே சுயம்புவாக தோன்றியதால் ‘ஸ்வயம் வியக்தம்’ என்னும் சிறப்பினைக் கொண்டு விளங்குகிறது. அங்கு இறைவன் நிரந்தரமான நிலையில், நித்ய சாந்நித்யமாக எழுந்தருளியிருக்கிறார் என்று வைணவ பெரியோர்களால் குறிப்பிடப்படுகிறது. மேலும், பல ஆலயங்களில் மூலவருக்கு வெள்ளி அல்லது தங்கப் பூண்களுடன் கூடிய சாளக்கிராம மாலைகளும் அணிவிக்கப்படுவது வழக்கம். கோவில்களில் இருக்கும் சாளக்கிராம மூர்த்திக்கு பூஜை முடிந்த பிறகு, மூலவர் மற்றும் இதர தெய்வங்களுக்கு அன்றாட பூஜைகள் நடப்பது வழக்கமாகும்.



    நமது நாட்டில் மன்னர்களது ஆட்சி நடந்த சமயத்தில் நகர சபைகள் மற்றும் ஊர் சபைகள் ஆகியவற்றில் நடக்கும் வழக்கு களில் சாட்சி சொல்லுபவர் கைகளில் சாளக்கிராம கற்களை கொடுத்து சாளக்கிராமத்தை முன்வைத்து அவரது சாட்சியை ஏற்றுக்கொள்ளும் வழக்கம் இருந் துள்ளது. மேலும், கருட புராணமானது ‘மரண காலத்தில் சாளக்கிராமத்தை மனதால் நினைத்து வணங்குபவன் பாவங்களில் இருந்து விடுபட்டு வைகுண்டம் அடைகிறான்’ என்றும், ‘இறக்கும் தருணத்தில் சாளக்கிராம தீர்த்தத்தை அருந்திய பின்னர் இறப்பவர்கள் ‘வைவஸ்வதம்’ என்ற எமதர்மராஜனின் நகரில், அவரால் மரியாதை செய்யப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்’ என்றும் சொல்லப்பட்டுள்ளது.

    பொதுவாக, வீடுகளில் வைத்து வழிபடுவதற்குரிய சாளக்கிராம கற்களை, வழிபாட்டுக்கு தகுந்த பெரியோர்களிடமிருந்து பெற வேண்டும் என்பது நியதியாகும். சாளக்கிராமம் பற்றிய தனித்தன்மைகளை அறிந்தவர்களிடம், அவற்றின் வண்ணம், ரேகைகள், குறிகள் ஆகியவை பற்றி நன்றாக ஆராய்ந்த பிறகு, அவர் களுடைய அறிவுரையின் பேரில் வாங்குவது என்பதே பல நன்மைகளை தரக் கூடியதாகும்.

    சாளக்கிராமம் பூஜிக்கப்படும் இடத்தில் சகல இறை சக்திகளும் நித்திய வாசம் செய்வதாகவும், அங்கே சகல செல்வங்களும் விருத்தியாவதாகவும் ஐதீகம். சாளக்கிராம பூஜை செய்வது எளிதானது. குளித்து முடித்து, தூய ஆடை அணிந்து பக்தியுடன் மரப்பெட்டியில் வைக்கப்பட்ட சாளக்கிராமத்தை எடுத்து, சிறிய அளவில் அபிஷேகம் செய்து, ஊதுபத்தி காட்டி, இனிப்பை நைவேத்தியமாக படைத்து, நமக்கு தெரிந்த மந்திரங்களைச் சொல்லி வழிபடலாம்.

    துளசி இலை சமர்ப்பிக்கலாம். வெளியூர் செல்ல வேண்டிய சமயங்களில் பச்சரிசியை ஒரு தட்டில் கொட்டி, அதன்மீது சாளக்கிராமத்தை வைத்து விட்டு செல்வது வழக்கம். சாளக்கிராமத்துக்கு அபிஷேகம் செய்த நீரை தலையில் தெளித்துக் கொண்டால் வைகுண்ட பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    பொதுவாக விக்கிரகங்கள் சேதம் அடைந்து விட்டால், அதை நீர் நிலைகளில் சேர்த்து விடுவார்கள். அதற்கு பதிலாக வேறு விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து வழிபடுவது நியதி. ஆனால், சாளக் கிராம கற்கள் பின்னப்பட்டிருந்தாலோ, அல்லது விரிசல்கள் இருந்தாலோ அதை செப்பு, வெள்ளி கம்பிகள் வைத்து கட்டி, பூஜைக்கு பயன்படுத்தலாம். அபிஷேகமும், ஆராதனைகளும் செய்யலாம். வீட்டில் ஆண்களும், பெண்களும் தினமும் சாளக்கிராமத்தை பூஜிக்க வேண்டும்.
    Next Story
    ×