search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்சானூர் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான நேற்று தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.
    X
    திருச்சானூர் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான நேற்று தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.

    பிரம்மோற்சவ விழா 8-வது நாள்: தேரில் பத்மாவதி தாயார் பவனி

    திருச்சானூர் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. தேரில், பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருப்பதி அருகே உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று அதிகாலை 3 மணியளவில் மங்கள இசையோடு பத்மாவதி தாயாரை துயில் எழுப்பி, அதிகாலை 3 மணியில் இருந்து 3.30 மணிவரை சுப்ரபாத சேவை, 3.30 மணியில் இருந்து 4 மணிவரை சகஸ்ர நாமார்ச்சனை, 4 மணியில் இருந்து 4.30 மணிவரை நைவேத்தியம், 4.30 மணியில் இருந்து 5.15 மணிவரையிலும் உற்சவருக்கு ரதபலி கைங்கர்ய பூஜை நடந்தது.

    அதைத்தொடர்ந்து காலை 7 மணியில் இருந்து 9 மணிவரை தேரோட்டம் நடந்தது. விழாவில், திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் கலந்து கொண்டு, வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தங்க, வைர நகைகளால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் பத்மாவதி தாயார் தேரில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பின்னர் மதியம் 1 மணியில் இருந்து 2.30 மணிவரை கோவில் அருகில் உள்ள ரத மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஆஸ்தான மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. இதையடுத்து உற்சவர் வாகன மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு, உற்சவர் பத்மாவதி தாயாருக்கு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை குதிரை வாகன வீதிஉலா நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி போலா.பாஸ்கர், சந்திரகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செவிரெட்டி பாஸ்கர்ரெட்டி, கோவில் துணை அதிகாரி முனிரெத்தினம் ரெட்டி, முதன்மைப் பாதுகாப்பு அதிகாரி ரவிகிருஷ்ணா, கூடுதல் பாதுகாப்பு அதிகாரி சிவக்குமார்ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான இன்று (வியாழக்கிழமை) பகல் 11.48 மணியளவில் மகர லக்னத்தில் பத்மா புஷ்கரணியில் பஞ்சமி தீர்த்த புனித நீராடல் நிகழ்ச்சி (சக்கர ஸ்நானம்) நடக்கிறது. பின்னர் இரவு 7.30 மணியளவில் கொடியிறக்கம் நடக்கிறது. இதோடு பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
    Next Story
    ×