search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்பு யாகம் நடந்த போது எடுத்த படம்.
    X
    பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்பு யாகம் நடந்த போது எடுத்த படம்.

    பழனி பெரியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது

    பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.
    பழனி முருகன் கோவிலின் உபகோவிலாக பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இங்கு பெரியநாயகி அம்மன், முருகப்பெருமான் வள்ளி-தெய்வானை, கைலாசநாதர் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலில் தைப்பூச திருவிழா, வைகாசி விசாகம், திருவாதிரை, ஆடி லட்சார்ச்சனை போன்ற திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும். கடந்த 1998-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ந்தேதி இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    அதன் பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ரூ.96 லட்சத்தில் கோவில் திருப்பணிகள் தொடங்கப்பட்டது. கோவிலின் உள்மண்டபம், முன் மண்டபம் வெளிசுற்றுச்சுவர்கள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது கோவில் திருப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    இதையடுத்து வருகிற 24-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி கும்பாபிஷேக விழா நேற்று சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. காலை 6 மணிக்கு மங்களஇசை, விநாயகர்பூஜை, சங்கல்பம், மகா கணபதிஹோமம், நவகிரக ஹோமம், பழனி கோவில் யானை கஸ்தூரிக்கு கஜபூஜை ஆகியவை நடந்தன.

    அதையடுத்து யாகசாலை பூஜை, கலசங்களுக்கு தீபாராதனை, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மூலவருக்கு சிறப்பு பூஜைகளும், 6 மணிக்கு மேல் காப்பு கட்டுதல், கும்ப அலங்காரம் செய்தல், யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜை நடக்கிறது.



    கும்பாபிஷேக விழாவையொட்டி பழனிகோவில் யானை கஸ்தூரிக்கு கஜபூஜை நடைபெற்றபோது எடுத்த படம்.

    இரவு 9 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை, உபசாரம், வேத மந்திரங்கள் ஓதி தீபாராதனையும், பிரசாதம் வழங்குதலும் நடைபெறுகிறது. நாளை (புதன்கிழமை) காலை 7 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜை, மாலை 5 மணிக்கு 3-ம் கால யாகபூஜை நடக்கிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 7.45 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜை, மாலை 5 மணிக்கு 5-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெறுகிறது.

    24-ந் தேதி அதிகாலை 3.30 மணிக்கு மங்கள இசையுடன் 6-ம் காலயாகசாலை பூஜை, 5.30 மணிக்கு பூர்ணாகுதியும், தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் காலை 6 மணிக்கு யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்படும் நிகழ்ச்சிக்கு பின்பு கோவில் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. அதே வேளையில் பெரியநாயாகி அம்மன், கைலாசநாதர், முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானை, நடராஜர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.

    மாலை 5.30 மணிக்கு மேல் பெரிய நாயகி அம்மன், கைலாசநாதர் திருக்கல்யாணமும், முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறும். கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணிய சிவாச்சாரியார் மற்றும் கோவில் குருக்கள்கள் செய்து வருகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×