search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள் ஊஞ்சல் திருநாள் 6-ந்தேதி தொடங்குகிறது
    X

    ஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள் ஊஞ்சல் திருநாள் 6-ந்தேதி தொடங்குகிறது

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வருகிற 6-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நம்பெருமாள் ஊஞ்சல் திருநாள் நடைபெறவுள்ளது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வருகிற 6-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நம்பெருமாள் ஊஞ்சல் திருநாள் நடைபெறவுள்ளது. ஐப்பசி மாதத்தில் வரும் ஏகாதசி திதியை சாற்றுமறையாக கொண்டு 8 நாட்களுக்கு முன்னர் தொடங்கப்படும் திருநாள் ஊஞ்சல் திருநாள் ஆகும். ஒன்பது நாட்கள் நடைபெறும் ஊஞ்சல் திருநாள் 3-ம் சுற்றான குலசேகரன் திருச்சுற்றில் அமைந்தள்ள ஊஞ்சல் மண்டபத்தில் மாலை வேளையில் நடைபெறுகிறது. இதற்காக பிரத்யேகமாக மரத்தினால் அழகான சிற்ப வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டுள்ள ஊஞ்சல் ஒன்று மாட்டப்பட்டுள்ளது.

    1-ம் திருநாள் மற்றும் 7-ம் திருநாட்களில் நம்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய இரு உபநாச்சியார்களுடன் ஊஞ்சல் கண்டருளு கிறார். 7-ம் திருநாளன்று சூர்ணாபிஷேகம் மற்றும் திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளுவது சிறப்பம்சமாகும். சாற்றுமறையான 9-ம் திருநாளன்று காலை புறப்பாடு கண்டருளி சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரியும், ஊஞ்சல் மண்டபத்தில் தங்க பாத்திரங்களினால் திருமஞ்சனும் நடைபெறுகிறது. நம்பெருமாள் ஊஞ்சலில் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருள செய்து இருபுறமும் சாமரம் வீச நாதஸ்வர இசையுடன் ஊஞ்சல் ஆட்டும் போது கிடைக்கப்பெறும் சேவையானது கண்கொள்ளா காட்சியாகும்.



    ஊஞ்சல் திருநாட்களில் முதல் நாளான வருகிற 6-ந்தேதி மாலை 5 மணிக்கு நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, ஊஞ்சல் மண்டபத்தில் இரவு 7.15 மணிக்கு ஊஞ்சல் கண்டருளுகிறார். 2-ம் திருநாளான 7-ந்தேதி முதல் 6-ம் திருநாளான 11-ந்தேதி வரை மற்றும் 8-ம் திருநாளான 13-ந்தேதியில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் மாலை 5.30 மணியளவில் புறப்பாடாகி, மண்ட பத்தில் இரவு 7.15 மணிக்கு ஊஞ்சல் கண்டருளுகிறார். 7-ம் திருநாளான 12-ந்தேதி நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்த மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு மண்டபத்தில் ஊஞ்சல் கண்டருளுகிறார்.

    9-ம் திருநாளான 14-ந்தேதியன்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் காலை 9.15 மணிக்கு புறப்பட்டு, மண்டபத்தில் மாலை 6 மணிக்கு ஊஞ்சல் கண்டருளுகிறார். 1-ம் திருநாள் முதல் 6-ம் திருநாள் வரையும், 8, 9-ம் திருநாட்களிலும் இரவு 8.30 மணிக்குமேல் மூலவர் சேவை கிடையாது. 7-ம் திருநாளன்று இரவு 9 மணிக்குமேல் மூலவர் சேவை கிடையாது. இதைப்போன்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உள்ள ரெங்கநாச்சியாருக்கு ஊஞ்சல் திருநாள் வருகிற 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×