search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தாரகாசூரனை குத்தீட்டி போன்ற ஆயுதங்களால் சம்ஹாரம் செய்ததையும் படங்களில் காணலாம்.
    X
    தாரகாசூரனை குத்தீட்டி போன்ற ஆயுதங்களால் சம்ஹாரம் செய்ததையும் படங்களில் காணலாம்.

    பழனியில் கந்தசஷ்டி திருவிழா: ‘அரோகரா’ கோஷம் முழங்க சூரனை வதம் செய்த முருகப்பெருமான்

    பழனியில் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி அரோகரா கோஷம் முழங்க சூரனை, முருகப்பெருமான் வதம் செய்தார்.
    முருகப்பெருமான், அசுரர்களை அழித்து தேவர்களை காத்தருளிய நிகழ்ச்சி, முருகன் கோவில்களில் கந்தசஷ்டி திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அறுபடை வீடுகளில் 3-ம்படை வீடான பழனி முருகன் கோவிலில் கடந்த 20-ந்தேதி கந்தசஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவில் 6-ம் திருநாளான நேற்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு மலைக்கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளா பூஜை நடைபெற்றது. காலை 8 மணிக்கு சிறுகாலசந்தி, 9 மணிக்கு காலசந்தி பூஜையும் அதைத்தொடர்ந்து 11 மணிக்கு சின்னக்குமாரர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி மண்டகப்படி அடைந்தார்.

    மலைக்கோவில் சண்முகர் சன்னதியில் சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகமும் சிறப்பு அலங்காரமும், சண்முகார்ச்சனையும் நடைபெற்றது. சன்னதி முன்பு உள்ள துவார பாலகர்களுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் நடைபெற்றது. பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், சக்திவேலை மலைக்கொழுந்து அம்மனிடம் வைத்து சிறப்பு பூஜை செய்த பின்னர், தீபாராதனை நடைபெற்று அங்கு வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அதன் பின்னர் மலைக்கோவிலில் மூலவர் சன்னதி திருக்காப்பிடப்பட்டது. வில், அம்பு, கேடயத்துடன் சின்னக்குமாரர் தங்க சப்பரத்தில் போருக்கு புறப்பட்டார். உடன் வீரபாகு தேவர், நவ வீரர்கள் படைசூழ சின்னக்குமாரர் தங்க சப்பரத்தில் மலைக்கோவிலில் இருந்து சூரனை வதம் செய்ய புறப்பட்டார்.

    சூரசம்ஹாரத்தையொட்டி மாலை 3.30 மணிக்கு பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானையுடன் விசேஷ அலங்காரத்தில் வெள்ளிப்பிடாரி மயில் வாகனத்தில் பாத விநாயகர் கோவில் அருகில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார்.

    மலைக்கோவிலில் இருந்து தங்க சப்பரத்தில் பராசக்தி வேலுடன் புறப்பட்ட சின்னக்குமாரர் 5.30 மணிக்கு பாத விநாயகர் கோவில் வந்தடைந்தார். ஏராளமான பக்தர்கள் பராசக்தி வேலுக்கு மாலைகள் அணிவித்தும், மலர்கள் தூவியும் வழிபட்டனர்.

    பராசக்தி வேல் மீது வில்வம், சந்தனம், கடம்பம், நெல்லித்தழை, பூக்களை தூவினர். தொடர்ந்து பராசக்தி வேல் முத்துக்குமாரர், வள்ளி-தெய்வானையிடம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் மற்றும் சர்வசாதகம் செல்வ சுப்பிரமணிய குருக்கள், சுந்தரமூர்த்தி சிவம் மற்றும் ஓதுவார்கள் பராசக்தி வேல், குத்தீட்டி உள்ளிட்ட ஆயுதங்களை சின்னக்குமாரரிடம் வைத்து வழிபாடு நடத்தி, தீபாராதனைகள் செய்து அனுமதி பெற்று போருக்கு புறப்பட்டனர்.



    மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதைக்காண பழனி கோவில் கிரிவீதிகளில் திரளான பக்தர்கள் திரண்டிருந்தனர். கேரளா கர்நாடகா மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் சூரசம்ஹாரத்தை காண வருகை தந்து இருந்தனர். சின்னக்குமாரருடன் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் வீரபாகு மற்றும் நவவீரர்கள் போருக்கு புறப்பட்டனர். வடக்கு கிரிவீதியில் இரவு 7 மணிக்கு தாரகாசூரன் வதம் நடைபெற்றது.

    முன்னதாக கோவில் ஓதுவார்கள் கந்த புராணம் பாடி, கட்டியம் கூறி தாரகாசூரனுக்கு முருகனின் பெருமைகளை எடுத்துக் கூறினர். இதை கேட்காத தாரகாசூரன் கைகளை ஆட்டி, ஆயுதங்களை ஏந்தி சின்னக் குமாரரை போருக்கு அழைக்கும் நிகழ்ச்சியும், வீரபாகு நவ வீரர்களுடன் சென்று சமாதானம் பேசும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    முருகனிடம் பணிந்து போகுமாறு வீரபாகு கூறிய அறிவுரையை ஏற்காத தாரகாசூரன், முருகனை போருக்கு அழைத்தார். இதைத் தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் பெரிய தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரர் பராசக்தி வேலால் தாரகா சூரனை சம்ஹாரம் செய்தார். சின்னக்குமாரரிடம் பராசக்தி வேலை பெற்ற கோவில் குருக்கள் தாரகாசூரனை வதம் செய்து சூரசம்ஹார நிகழ்ச்சியை நடத்தினர்.

    அப்போது கூடியிருந்த பக்தர்கள் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா, ஞான தண்டாயுதபாணி சுவாமிக்கு அரோகரா” என்று சரண கோஷங்கள் எழுப்பினர். அரோகரா கோஷம் விண்ணை பிளந்தது. வாண வேடிக்கையும் நடந்தது.

    இந்திர வாகனத்தில் முத்துக்குமார சுவாமியுடன், சின்னக்குமாரர் சந்திக்கும் நிகழ்ச்சியும், தீபாராதனையும், ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழாவும் நடைபெற்றது. சக்தி வேலுடன் சின்னக்குமாரர் மலைக்கோவிலுக்கு சென்று சம்ரோஷண பூஜைக்கு பின்னர் நடை திறக்கப்பட்டு ராக்கால பூஜை நடை பெற்றது.

    விழாவையொட்டி இன்று (வியாழக்கிழமை) மலைக்கோவிலில் காலை 10.45 மணி சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், தொடர்ந்து திருமண விருந்தும் நடைபெறுகிறது. இரவு 7.15 பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், இரவில் முத்துக்குமார சுவாமி தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடும் நடைபெறுகிறது.

    விழாவில் பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா, இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுப்புரத்தினம், வேணுகோபாலு, சித்தநாதன் சன்ஸ் சிவனேசன், பழனிவேலு, கந்தவிலாஸ் செல்வக்குமார், நவீன், கண்பத் கிரேண்ட் ஹரிஹரமுத்து, செந்தில், பழனி நகர அ.தி.மு.க. செயலாளர் முருகானந்தம் மற்றும் கோவில் அலுவலர்கள், நகர பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×