search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
    X

    திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

    திருச்செந்தூர் கோவிலில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






    மாமரமும், சேவலுமாக உருமாறி வந்த சூரபத்மனை படத்தில் காணலாம்.
    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடந்து வரும் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடந்தது. இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதால் கடற்கரை பகுதி முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் தலைகளாகவே காட்சி அளித்தது. ஒரே நேரத்தில் திரண்ட பக்தர்களின் வெள்ளத்தால் நேற்று கடற்கரை பகுதியே திக்குமுக்காடிப்போனது.

    சூரபத்மனை வதம் செய்வதற்காக சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளிய காட்சி.







    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்சீரலைவாய் என்று அழைக்கப்படும் திருச்செந்தூரில் முருகபெருமான் சுப்பிரமணிய சுவாமியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். முருகபெருமான் சூரபத்மனை வென்று தேவர்களை காத்த இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதேபோன்று இந்த ஆண்டும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 20-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் யாகசாலை பூஜைகள் நடந்தன. மதியம் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலையில் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. இரவில் சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரிவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா நாட்களில் கோவில் வளாகத்தில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கியிருந்து விரதம் இருந்தனர்.

    6-ம் திருநாளான நேற்று மாலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் உச்சிகால அபிஷேகம் நடந்தது. மதியம் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு தீபாராதனைக்கு பின்னர் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். அங்கு சுவாமி-அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.


    சூரபத்மனை வதம் செய்வதற்காக சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளிய காட்சி.


    மாலையில் ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில் இருந்து சூரபத்மன் தனது படைவீரர்களுடன் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து, கோவில் கடற்கரைக்கு வந்து சேர்ந்தான். தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வண்ண மலர்களாலான மாலைகள் அணிந்து அலங்காரத்துடன் கையில் வேல் ஏந்தி, சூரபத்மனை வதம் செய்ய கடற்கரைக்கு புறப்பட்டார்.

    முதலில் மாயையே உருவாக கொண்ட யானை முகம் கொண்ட தாரகாசூரன், தனது பரிவாரங்களுடன் முருகபெருமானிடம் போரிடுவதற்காக அவரை மூன்று முறை சுற்றி வந்து, சுவாமிக்கு எதிராக நின்றான். மாலை 5.05 மணிக்கு முருகபெருமான் வேல் கொண்டு தாரகாசூரனை வதம் செய்தார்.

    அதன்பிறகு கன்மமே உருவாக கொண்ட சிங்கமுகாசூரன், முருகபெருமானை வலமிருந்து இடமாக மூன்று முறை சுற்றி வந்து நேருக்கு நேர் போரிட தயாரானான். மாலை 5.17 மணிக்கு சிங்கமுகாசூரனையும் முருகபெருமான் வேலால் வதம் செய்தார்.

    தனது சகோதரர்களின் இழப்பால் கோபம் அடைந்த ஆணவமே உருவான சூரபத்மன் தனது படைவீரர்களுடன் வேகமாக முருகபெருமானுடன் போர் புரிய வந்தான். தொடர்ந்து மாலை 5.28 மணிக்கு முருகபெருமான் வேல் எடுத்து சூரபத்மனை சம்ஹாரம் செய்தார். இறுதியாக மாமரமும், சேவலுமாக உருமாறி வந்த சூரபத்மனை சேவலும், மயிலுமாக மாற்றி முருகபெருமான் ஆட்கொண்டார். மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் முருகபெருமான் வைத்து கொண்டார்.

    சூரசம்ஹாரம் நிகழ்ந்தபோது வானத்தில் கருடன் மூன்று முறை வட்டமிட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பல லட்சக்கணக்கான பக்தர்கள் ‘கந்தனுக்கு அரோகரா...வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா‘ போன்ற பக்தி கோஷங்களை விண்ணதிர எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.


    தாரகாசூரன், சிங்கமுகாசூரன், சூரபத்மன் ஆகியோர் சுவாமி ஜெயந்திநாதருடன் போர்புரிய வந்த காட்சி.

    சூரசம்ஹாரம் முடிந்ததும் சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் உள்ள சந்தோச மண்டபத்துக்கு சென்றார். அங்கு சினம் தணிந்த முருக பெருமானுக்கும், வள்ளி-தெய்வானை அம்பாள்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் கிரிவீதி வலம் வந்து, கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதிக்கு சென்றார். அங்கிருந்த கண்ணாடியில் தெரிந்த சுவாமியின் பிம்பத்துக்கு அபிஷேகம்(சாயாபிஷேகம்) நடந்தது. பின்னர் விரதம் இருந்த பக்தர்களுக்கு யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட தகடுகள் வழங்கப்பட்டன.

    சூரசம்ஹாரத்தை காண்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். சூரசம்ஹாரம் நடந்ததும் பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    7-ம் திருநாளான இன்று (வியாழக்கிழமை) இரவு 11.45 மணிக்கு கோவில் ராஜகோபுரம் அருகே உள்ள மண்டபத்தில் வைதீக முறைப்படி சுவாமி குமரவிடங்க பெருமான்-தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.

    8-ம் திருநாளான நாளை(வெள்ளிக்கிழமை) இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் எழுந்தருளி, பட்டினபிரவேசம் சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.
    Next Story
    ×