search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவிழாவில் பக்தர்கள் சாணியை அள்ளி ஒருவர் மீது ஒருவர் வீசிய போது எடுத்த படம்.
    X
    திருவிழாவில் பக்தர்கள் சாணியை அள்ளி ஒருவர் மீது ஒருவர் வீசிய போது எடுத்த படம்.

    தாளவாடி பீரேஸ்வரர் கோவில் சாணியடி திருவிழா

    ஈரோடு மாவட்டம் தாளவாடியில் உள்ள பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோவில் சாணியடி திருவிழாவில் ஒருவருக்கொருவர் சாணம் வீசி மகிழ்ந்தனர்.
    ஈரோடு மாவட்டம் தாளவாடி கும்டாபுரம் மலைக்கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை அடுத்து வரும் 3-வது நாள் சாணியடி திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் ஒருவர் மீது ஒருவர் சாணத்தை வீசி மகிழும் வினோத நிகழ்ச்சி நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான சாணியடி திருவிழா நேற்று காலை சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து சாமி வீதிஉலா நடந்தது. இதில் கழுதையின் மீது சாமியை வைத்து ஊர் குளத்தில் இருந்து கோவிலுக்கு பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். கோவிலில் பீரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அப்போது ஆண்கள் சட்டை அணியாமல் கோவிலுக்குள் சென்று சாமியை வழிபட்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வான சாணியடி திருவிழாவை கொண்டாடும் விதமாக கோவிலுக்கு பின்புறம் தயாராக குவித்து வைக்கப்பட்ட பசுமாடுகளின் சாணத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பக்தர்கள் ஒருவருக்கொருவர் சாணத்தை எடுத்து மாறி மாறி வீசிக் கொண்டனர். உடலில் சாணத்தை வீசுவதை பக்தர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடினர். ஆண்கள் சாணம் வீசியதை பார்த்த பெண்கள் கரவோசை எழுப்பி ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினார்கள். இதையடுத்து பக்தர்கள் குளத்திற்கு சென்று நீராடிவிட்டு மீண்டும் பீரேஸ்வரரை வழிபட்டனர்.
    Next Story
    ×