search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது: இலவச தரிசனத்துக்கு 18 மணிநேரம் ஆனது
    X

    திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது: இலவச தரிசனத்துக்கு 18 மணிநேரம் ஆனது

    திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: இலவச தரிசனத்துக்கு 18 மணிநேரம் ஆனது
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருமலையில் எங்குப் பார்த்தாலும் பக்தர்களின் தலைகளாகவே காட்சி அளித்தனர். திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி தரிசன வரிசைகளில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு காத்திருந்தனர்.

    இலவச தரிசன பக்தர்களுக்கு 18 மணிநேரமும், அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகள் வழியாக நடந்து வந்த திவ்ய தரிசன பக்தர்களுக்கு 3 மணிநேரமும், 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசன பக்தர்களுக்கு 4 மணிநேரமும் ஆனது. நேற்று கோவிலுக்கு வெளியே சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனத்துக்காக காத்திருந்தனர்.

    ஏராளமான பக்தர்கள் நாராயணகிரி பூங்கா பகுதியில் படுத்துத் தூங்கி ஓய்வெடுத்தனர். நேற்று காலை 9 மணியில் இருந்து இரவு 7 மணிவரை 62 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 51 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.


    கூட்டம் அலைமோதியதால் நாராயணகிரி பூங்கா பகுதியில் படுத்து தூங்கி பக்தர்கள் ஓய்வெடுத்த காட்சி.

    இந்தநிலையில் திருமலை-திருப்பதி தேவஸ்தான (பொறுப்பு) முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.சீனிவாசராஜு நேற்று திருமலையில் உள்ள தரிசன வரிசைகள், அன்னதானக்கூடம், லட்டு கவுண்ட்டர்கள், வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் உள்பட பல்வேறு இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறுகையில், தமிழ் புரட்டாசி மாதம் முடிந்து, ஐப்பசி மாதம் தொடங்கியதையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும். இதற்கு அதிகாரிகளும், பக்தர்களும் தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும், வரிசையில் நிற்கும் பக்தர்கள் மட்டுமே இன்று (அதாவதுநேற்று) தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர், கோவிலுக்கு வெளியே காத்திருக்கும் பக்தர்களுக்கு நாளை (அதாவது இன்று) சாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும், என்றார்.

    ஆய்வின்போது அன்னதானத்திட்ட அதிகாரி வேணுகோபால், கோவில் துணை அதிகாரி கோதண்டராமாராவ், கேட்டரிங் அலுவலர் சாஸ்திரி, சுகாதாரத்துறை ஆய்வாளர் கிருஷ்ணய்யா மற்றும் பலர் உடனிருந்தனர்.
    Next Story
    ×