search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கந்தசஷ்டி 2-வது நாள்: தந்தை கொடுத்த பணியை செய்து முடித்த முருக பெருமான்
    X

    கந்தசஷ்டி 2-வது நாள்: தந்தை கொடுத்த பணியை செய்து முடித்த முருக பெருமான்

    கந்தசஷ்டி இன்று 2-ம் நாள். முருகபெருமானின் புகழை கூறும் பக்தி இலக்கியங்களில் இருந்து முருக பெருமானின் மகிமைகளை கட்டுரையாக காண்போம்.
    முருகப்பெருமானின் வீரம் குறித்து பல்வேறு புலவர்கள் சிறப்பாக கூறி இருந்தாலும், முருக பெருமான் வரலாறு பற்றி பாடிய கச்சியப்ப சிவாச்சாரியார் தனது கந்த புராணத்திலே முருக பெருமான் வேறு, சிவபெருமான் வேறு அல்ல. இருவரும் ஒருவரே என்றும், சிவனின் அனைத்து சக்திகளையும் கொண்டு முருக பெருமான் விளங்கினார் என்றும் கூறுகிறார்.

    கார்த்திகை பெண்கள் ஆறு பேரால் முருகன் வளர்க்கப்பட்டார். திறமையான போர் கருவிகளை எப்படி கையாள வேண்டும் என்று அவர்கள் முருகனுக்கு கற்றுக் கொடுத்தனர். சிவனின் ஆற்றலையும், பார்வதி தேவியின் அருளையும் பெற்ற முருகன் முதன்முதலாக போருக்கு புறப்படுகிறார். லட்சம் வீரர்களும், சேனைகளும் நவ வீரர்கள் சூழ சூரனை அழிக்கும் திருவுள்ளத்துடன் புறப்பட்டார்.

    திருமால், பிரம்மன், இந்திரன் ஆகியோருடன் தேவர்கள் சூழ முருகனுக்கு தேரோட்டியாக வாயுதேவன் தேரை செலுத்த, முருகன் வீரம்மிக்க பராக்கிரமான தோற்றத்தோடு புறப்பட்டார். அகத்திய முனிவர் சாபத்தால் கிரவுஞ்சம் என்ற மாயை மலையாக தோன்றிய அசுரனை அழித்தால்தான் இம்மலைக்கு பக்கத்தில் உள்ள மாயாபுரியில் ஆட்சி செய்யும் சூரபதுமன் தம்பி தாரகாசூரனை அழிக்க முடியும் என்பதை உணர்ந்த முருகன், கிரவுஞ்சம் மலையை தன் வேலால் இரண்டாக பிளந்தார்.



    சுற்றிலும் அம்பு கணைகள் ஆயிரம் தொடுத்து யானை முகத்தை கொண்ட தாரகாசூரனை எதிர்த்து போர் புரிந்தார். தாரகாசூரனை வதம் செய்ய, முருகன் தன் வேற்படையை ஏவினார். முருகனது வேலானது தாரகாசூரனை அழித்து அவனது ஆணவத்தை போக்கியது. தாரகாசூரன் முருகனிடம் கேட்கிறார். “மைந்தா நீ எங்களுக்கு பகைவன் இல்லையே? எங்களுக்கும், சிவபெருமானுக்கும் எந்த பகையும் இல்லையே.

    பின் எதற்காக போருக்கு வந்தாய் என்று கேட்க, அதற்கு முருகன் அறவழியில் நடப்பவர்களுக்கு அருள் செய்வதும், தீவினை புரிபவர்களை தண்டிப்பதும் என் தந்தையான சிவபெருமானின் அருட்செயல்களாகும். சிவபெருமானிடம் பல வகையான வரங்களை பெற்ற நீங்கள் தர்மவழியில் நடக்கவில்லை. தேவர்களை சிறையில் அடைத்தீர்கள். நீங்கள் செய்த அதர்ம செயல்களுக்காக உங்களை தண்டித்த தேவர்களை சிறை மீட்கும் பணியை என்னிடத்தில் கொடுத்திருக்கிறார் என் தந்தை சிவபெருமான். அதைத்தான் நான் செய்தேன் என்றார் முருகன். தாரகாசூரனின் உடலை அழித்து அவரது ஆன்மாவை ஏற்றுக்கொண்டு அய்யனாருக்கு வாகனமாக யானையை தந்து முருகபெருமான் அருள் புரிந்தார்.

    முருகனின் வீரமும் அருளும் வெளிப்பட முக்கிய காரணம் சூரபதுமன் செய்த கொடுஞ்செயல்கள்தான். யுத்த களத்திலே 7-வது நாள் முதல் 10-வது நாள் வரை முருக பெருமான், சூரபதுமனோடு போர் புரிந்தார். வாயுதேவன் கொண்டு வந்த தேரில் முருகபெருமான் ஏறி தன் படை வீரர்களோடு சாந்தமே உருவாக புறப்பட்டார்.



    சூரபதுமனின் படை வீரர்களின் எண்ணிக்கையை பார்த்து, “முருகன் இவர்களை எல்லாம் அழிப்பதற்கே பல ஆண்டுகள் ஆகும் போல தெரிகிறது. அதற்குள் ஊழிக்காலம் (உலகம் முடிவுக்கு வரும் காலம்) வந்து முடிந்து விடும்“ என்று திருமாலிடம், இந்திரன் சொல்கிறார். அதற்கு, முருக பெருமானின் பெருமைகளை திருமால் கூறும் போது, “பெரிய கடல் போல உள்ள இந்த படைகளை எல்லாம் முருகப் பெருமான் ஏய் என்று சொல்லும் போது அழிந்து விடும்.

    அவர் இப்படைகளை எல்லாம் விரைந்து அழிப்பார். கோபத்தினால் கொல்வார். திருவாக்கால் அழிப்பார். பார்வையால் அழிப்பார். இது அவருக்கு திருவிளையாடல். முருகப் பெருமானை குழந்தை என்று எண்ணாதே. அவருடைய வேற் படையால் சூரன் அழிவான்“ என்கிறார். முருகப் பெருமான் தன் விசுவரூப தரிசனத்தை சூரனை நோக்கி காட்ட, அதனை அவன் பார்க்க முடியாமல் அவனது ஆணவம் நீங்கியது.

    முருகனை இரு கைகளால் கூப்பி வணங்கினான். ஆனால் அவனது அகங்காரம் மீண்டும் தோன்ற பல மாய தோற்றங்களோடு மறைந்து மாமர தோப்பில் ஒரு மாமரமாக நின்றான். முருகன் தன் வேலை அனுப்ப, அந்த வேலானது சூரபதுமனை தேடி மாமரத்தை இரண்டு கூறுகளாக ஆக்கியது. முருக பெருமான் தன் அருளால் ஒன்றை சேவலாகவும், மற்றொன்றை மயிலாகவும் மாற்றி கொடியிலும், தன் வாகனமாகவும் வைத்து கொண்டான். முருகன் தன் வீரத்தால் புகழ் பெற்றான்.

    தகவல்: நெல்லை புலவர் மா.கந்தகுமார்.
    Next Story
    ×