search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கந்தசஷ்டி முதல் நாள்: யார் பெரியவன் என்பதில் விநாயகருக்கு பதில் சொன்ன முருகன்
    X

    கந்தசஷ்டி முதல் நாள்: யார் பெரியவன் என்பதில் விநாயகருக்கு பதில் சொன்ன முருகன்

    இன்று கந்தசஷ்டி திருநாள் தொடங்குகிறது. முருகபெருமானின் புகழை கூறும் பக்தி இலக்கியங்களில் இருந்து முருக பெருமானின் மகிமைகளை கட்டுரையாக காண்போம்.
    இன்று கந்தசஷ்டி திருநாள் தொடங்குகிறது. முருகபெருமானின் புகழை கூறும் பக்தி இலக்கியங்களில் இருந்து முருக பெருமானின் மகிமைகளை கட்டுரையாக காண்போம்.

    முருகன் என்றால் அழகு என்று பொருள். எல்லா அழகையும் ஒருங்கே பெற்றவன். கண்கள், முகம், கரங்கள், தோள், ஆயுதம், வடிவம், பேசும் சொற்பொருள் என இத்தனை அழகையும் மொத்தமாக கொண்டவன் முருகன். சிவபெருமானோ, 64 திருவிளையாடல்களை ஆடினார். ஆனால் அவர் மகன் முருகனோ அளவில்லா விளையாட்டை உடையவன். தன் தந்தையோடும், தமையனாரோடும், தாயாரோடும் மற்ற தேவாதி தேவர்களோடும், அடியவர்களோடும் எண்ணற்ற திருவிளையாடல்களை ஆடினான்.

    தமையனாரோடு முருகன் ஆடிய ஒரு விளையாட்டை புலவர் ஒருவர் அற்புதமாக கூறியிருக்கிறார். அதாவது, ஒரு சமயம் கயிலை மலையில் அம்மையப்பராகிய பார்வதி, பரமேசுவரர் முன்பாக விநாயகரும், முருகனும் விளையாடிக் கொண்டிருந்தனர். விநாயகர், முருகனின் மார்பை தழுவியும், உச்சிமோந்தும், முதுகை துதிக்கையால் தடவியும் விளையாடினர்.

    அப்போது தாய், தந்தையர் இருவரும் மகன்களை அழைத்தனர். உடனே விநாயகர், ‘தம்பி நான் பெரியவன் என்பதால் நான்தான் முன் செல்ல வேண்டும். நீ என் பின்னால் வா! என்றார்.‘ அதற்கு முருகன், ‘ஐங்கரத்தண்ணலே நில்லும். எனக்கு 6 முகம். உனக்கு ஒரு முகம், எனக்கு பன்னிருகரங்கள். தங்களுக்கு ஐந்து கரங்கள், எனக்கு ஆறு வாய். உங்களுக்கு நான்கு வாய். எனக்கு பதினெட்டு கண்கள். தங்களுக்கு மூன்று கண்கள். தாங்கள் முகத்தில் பெரியவரா, கரங்களில் பெரியவரா? கண்களில் பெரியவரா? வாயில் பெரியவரா? கொஞ்சம் கோபப்படாமல் சொல்லுங்கள்‘ என்று முருகன் கேட்டான்.

    அதற்கு விநாயகர், ‘நீ சொல்வது வேடிக்கையாக இருக்கிறது தம்பி, நான் உன்னை விட வயதில் பெரியவன்‘ என்றார். தாங்கள் வயதில் மட்டுமா பெரியவர். வயிற்றிலும் பெரியவர்தான் என்று நகைச்சுவையாக கூறினான் முருகன். அது இருக்கட்டும் உன் ஆசைக்குரிய தந்தையாருக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்த குருமூர்த்தியார் நான்தான் தெரியுமா என்றான் முருகன். அதுமட்டும் அல்ல உன் பிதாவுக்கு உபதேசித்ததால் அவருக்கும் நானே பெரியவன் என்று முருகன் சொன்னான்.

    உடனே விநாயகர், ‘தம்பி நீ பெரிய பேச்சுக்காரன். உன்னோடு பேச என்னால் முடியாதப்பா, நீதான் பெரியவன். நீதான் தகப்பன்சாமி, நீ அம்மா மடியில் ஏறு!‘. நான் அப்பா மடியில் ஏறுகிறேன் என்று உள்ளம் மகிழ்வோடு விநாயகர் சொன்னார். இருவரும் தாய், தந்தையரின் மடியில் ஏறி விளையாடினார்கள். சிறு வயதில் தந்தையாரோடு, முருகன் செய்த திருவிளையாட்டை இன்னொரு புலவர் அழகாக கூறியிருக்கிறார். அதாவது, முருகன், தன் தந்தையிடம், தந்தையே முன்பு ஒருமுறை நாரதர் கொடுத்த மாங்கனியை என்னை ஏமாற்றி என் அண்ணன் விநாயகருக்கு, அதாவது உங்கள் மூத்த பிள்ளைக்கு கொடுத்து விட்டீர்கள்.



    நான் மாம்பழம் பெறாமல் ஏமாந்து போனேன். இப்போது உங்களிடம் ஒரு நாவல்பழம் உள்ளது. அதையாவது எனக்கு தாருங்கள் என்றான் முருகன். அதற்கு, சிவபெருமான் என்னிடம் எங்கே இருக்கிறது நாவல்பழம் என்று கேட்டார். உங்கள் கண்டத்தில் (கழுத்தில்) ஒட்ட வைத்திருக்கும் நீலமாக இருக்கும் நாவல் பழத்தை (திருநீலகண்டத்தை) பறித்து தின்பேன் என்று சொல்லிக் கொண்டே முருகன், சிவபெருமானின் தோள் மீது ஏறி அவரது கழுத்தை பிடித்தான்.

    அருகில் இருந்த அம்மை பார்வதிதேவியோ, முருகா அது எட்டிக்காய், விஷம் உள்ளது. எனவே அது வேண்டாம். இதோ என்னிடம் மாங்கனி உள்ளது வா தருகிறேன் என்று கூறி முருகனை தூக்கிச் சென்றார். அதன்பிறகுதான் சிவபெருமானுக்கு அப்பாடா என்று கொஞ்சம் மூச்சு வந்தது.

    இதுமட்டும் அல்லாமல் பிள்ளை தமிழில் ஸ்ரீகுமரகுருபரர் முருகனை தீராத விளையாட்டு பிள்ளை என்று வர்ணித்து பாடியுள்ளார். அவரது பாடலில், முருகன், தன் தந்தையின் கையில் உள்ள உடுக்கையை அவரது மார்பில் உள்ள பன்றிகொம்பை எடுத்து அடித்ததாகவும், சிவபெருமானின் மற்றொரு கையில் உள்ள நெருப்பை அணைப்பதற்காக அவரது திருமுடியில் உள்ள கங்கை நீரை அள்ளி அள்ளி ஊற்றியதாகவும் கூறியிருக்கிறார்.

    மேலும் சிவபெருமானின் திருமுடியில் உள்ள பிறைச்சந்திரனை, முருகன் தன் கையில் உள்ள சக்கரத்தினை கொண்டு சிவபெருமானின் கழுத்தில் உள்ள பாம்பின் வாயில் திணித்ததாகவும், சிவபெருமானுக்கு அடியார்கள் அணிவித்த அருகம்புல் மாலையை பறித்து அவரது கையில் பசியோடு இருந்த மானுக்கு முருகன் கொடுத்ததாகவும் முருகனின் சிறுவயது திரு விளையாடலை அழகாக கூறியுள்ளார்.

    இதுதவிர சிவனின் தோள் மீது ஏறி துள்ளிக்குதித்து முருகன் விளையாடினான். அப்போது சிவபெருமானின் உடம்பின் மீதுள்ள திருநீறு புகைபோன்று எழும்பி கயிலை மலையை மறைத்ததாகவும், தன்மீது பட்ட திருநீறு போக சிவனின் சடையில் உள்ள கங்கை வெள்ள நீரில் மூழ்கி கண்கள் சிவக்கும் வரை முருகன் நீராடியதாகவும், இதனை கண்டு தாய் தந்தையரான சிவபெருமானும், பார்வதியும் உள்ளம் மகிழ்ந்தனர் என்று ஸ்ரீகுமரகுருபரர் முருகன் பற்றிய தனது பிள்ளைத்தமிழ் பாடலில் அழகாக கூறியிருக்கிறார்.

    தகவல்:- நெல்லை புலவர்

    மா.கந்தக்குமார்.
    Next Story
    ×