search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிறப்பு அலங்காரத்தில் மும்மூர்த்திகள் அருள்பாலித்த காட்சி.
    X
    சிறப்பு அலங்காரத்தில் மும்மூர்த்திகள் அருள்பாலித்த காட்சி.

    அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்

    திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத அமாவாசையையொட்டி மும்மூர்த்திகளை தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒரே குன்றில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். மும்மூர்த்தியை தரிசனம் செய்யவும், பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழவும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் திருமூர்த்திமலைக்கு வந்து செல்வது வழக்கம்.

    மேலும் விசேஷ நாட்கள், பண்டிகை காலங்கள், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள். தீபாவளி தினத்தன்று ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் திருமூர்த்தி மலைக்கு வந்தனர். மேலும் நேற்று ஐப்பசி மாத அமாவாசை என்பதால் மும்மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இந்த பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் வெளியூர்களை சேர்ந்த பக்தர்கள், சுற்றுலா பயணிகள், பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் திருமூர்த்தி மலைக்கு வந்தனர். அதன் பின்னர் பஞ்சலிங்க அருவிக்கு சென்ற அவர்கள், அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் மலை அடிவாரப்பகுதிக்கு வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மும்மூர்த்திகளை தரிசனம் செய்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    மேலும் அமாவாசையையொட்டி சில பக்தர்கள் கோவில் அருகே உள்ள திருமூர்த்திமலை ஆற்றின் கரையில் தங்களது முன்னோருக்கு திதி கொடுத்தனர்.

    திருமூர்த்தி மலைக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் தங்களது வாகனங்களை சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தி விட்டு சென்றனர். இதனால் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அரசு பஸ் டிரைவர்கள் அமணலிங்கேஸ்வரர் கோவில் வரை பஸ்களை இயக்காமல் திருமூர்த்தி அணைக்கு முன்பாகவே பஸ்சை திருப்பி சென்றனர். இதன்காரணமாக அரசு பஸ்சில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் நீண்ட தூரம் நடந்து சென்று சாமிதரிசனம் செய்தனர்.

    இதை தவிர்க்கும் விதமாக விசேஷ நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை கோவில் பகுதி வரையும் செல்வதற்கு அனுமதிக்காமல் திருமூர்த்தி அணை அருகிலேயே நிறுத்துவதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்படுவதுடன் அரசு பஸ்களில் திருமூர்த்திமலைக்கு வருபவர்கள் கோவில் பகுதிக்கு சென்று வருவதற்கு ஏதுவாக இருக்கும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×