search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் விரதம் இருக்கும் பக்தர்களை படத்தில் காணலாம்.
    X
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் விரதம் இருக்கும் பக்தர்களை படத்தில் காணலாம்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று தொடங்குகிறது

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படும். அவற்றில் முக்கிய திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்படுகிறார். யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    கந்தசஷ்டி திருவிழாவில் விரதம் இருப்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் விரதம் இருப்பதற்கு வசதியாக கோவில் நிர்வாகம் சார்பில், கோவில் கலையரங்கம் அருகில், நாழிக்கிணறு அருகில், கிரிப்பிரகாரம் அருகில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் விரதம் இருக்கும் பக்தர்கள் தங்கி உள்ளனர்.

    பெரும்பாலான பக்தர்கள் 6-ம் திருநாளில் சூரசம்ஹாரம் நடைபெறும் வரையிலும் தினமும் 3 வேளையும் உணவு அருந்தாமல் கடும் விரதம் மேற்கொள்கின்றனர். சில பக்தர்கள் தங்களது உடல்நிலைக்கு ஏற்ப, மதியம் மட்டும் பச்சரிசி சாதம் அல்லது 3 வேளையும் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் மேற்கொள்கின்றனர்.

    பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

    1-ம் திருநாள் முதல் 5-ம் திருநாள் வரையிலும் மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரி வீதி உலா சென்று, பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.

    2-ம் திருநாள் முதல் 5-ம் திருநாள் வரையிலும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை, மதியம் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    1-ம் திருநாள் முதல் 6-ம் திருநாள் வரையிலும் மதியம் யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளுகிறார். பின்னர் வேல்வகுப்பு, வீரவாள்வகுப்பு பாடல்களுடன் மேளவாத்தியங்களுடன் சுவாமி சண்முகவிலாசம் சேர்கிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் திருநாளான 25-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. 7-ம் திருநாளான 26-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 11.45 மணிக்கு சுவாமி- தெய்வானை அம்பாள் திருக் கல்யாணம் நடக்கிறது. 8-ம் திருநாளான 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவில் சுவாமி- தெய்வானை அம்பாள் பட்டின பிரவேசம் நடக்கிறது.

    9-ம் திருநாளான 28-ந்தேதி (சனிக்கிழமை) முதல் 11-ம் திருநாளான 30-ந்தேதி (திங்கட்கிழமை) வரையிலும் தினமும் மாலை 6 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாளுடன் ஊஞ்சலில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். 12-ம் திருநாளான 31-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு, சுவாமி - அம்பாள் திருவீதி உலா சென்று கோவில் சேர்கிறார்கள்.

    விழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் கோவில் வளாகத்தில் உள்ள சிங்கப்பூர் கோவிந்தசாமிபிள்ளை கலையரங்கில் பக்தி சொற்பொழிவு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×