search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தீய குணத்தை எரித்து விடும் தீப ஒளி திருநாள்
    X

    தீய குணத்தை எரித்து விடும் தீப ஒளி திருநாள்

    “தீபம்“ என்றால் ஒளி, விளக்கு. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும்.

    “தீபம்“ என்றால் ஒளி, விளக்கு. “ஆவளி” என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து, அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருவர் மனதிலும் இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்றவற்றை அகற்ற வேண்டும். தீய குணத்தை எரித்து விட வேண்டும்.

    தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்கள் புராண கதைகளின் வழியாக கூறுகின்றனர். ராமாயணத்தில் ராமர், ராவணனை அழித்து விட்டு தன வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும், சகோதரர் லட்சுமணனுடனும் அயோத்தி திரும்பினார். அந்த நாளை அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றி கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப்படுவதாக கருதப்படுகிறது.

    இன்னொரு புராண கதையும் உண்டு. அதாவது, இரண்யாட்சன் என்ற அரக்கன் வேதங்களை எடுத்து சென்று மறைத்து வைத்து விட்டான். அதனை மீட்டெடுக்க மகாவிஷ்ணு பாதாளம் நோக்கி சென்று அசுரனுடன் போரிட்டு அவனை வென்றார். அப்போது பூமாதேவியுடன் ஏற்பட்ட பரிசத்தினால் பூமாதேவி பவுமன் என்ற மகனை பெற்றெடுத்தார். அந்த பவுமன் சாகாவரம் வேண்டி பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் செய்து, பிரம்மதேவரிடம் தன்னை பெற்ற தாயை தவிர வேறு ஒருவராலும் மரணம் ஏற்படாத வரம் பெற்றான்.

    பிற்காலத்தில் நரகர் எனப்படும் மனிதர்களுக்கு எதிராக கொடுமைகள் செய்த அசுரன் என்பதால் அவன் நரகாசூரன் என அழைக்கப்பட்டான். மகாவிஷ்ணுவின் கிருஷ்ண அவதாரத்தில் பூமாதேவி சத்யபாமாவாக அவதரித்து கிருஷ்ணரை மணந்து கொண்டார். மனித அவதாரத்தில் சத்யபாமாவிற்கு, நரகாசூரன் தனது மகன் என்ற நினைப்பு மறந்திருந்தது.

    நரகாசூரனை வதம் செய்ய கிளம்பிய கிருஷ்ணர் தேரோட்டுவதிலும், வில் போர், வாள் போர் போன்றவற்றிலும் வல்லவரான சத்யபாமாவை தனது தேரை ஓட்டும்படி பணித்தார். நரகாசூரன் உடன் நடந்த சண்டையில் கிருஷ்ணர் காயமடைந்து மயக்கமடைந்தது போல நடித்தார். தனது கணவரின் நிலை கண்டு கடும் கோபம் கொண்ட சத்யபாமா, நரகாசூரனை எதிர்த்து போர் செய்து அவனை அழித்தார். அப்போது தான் அவன் தனது மகன் என அவர் தெரிந்து கொண்டார்.

    நரகாசூரன் இறந்ததும் மக்கள் தீபமேற்றி அதனை கொண்டாடுவதை கண்ட சத்யபாமா கிருஷ்ணரிடம் இப்படி ஒரு தீய மகன் நமக்கு பிறக்கக்கூடாது என்று மக்கள் நரகாசூரன் இறந்த நாளை தீபமேற்றி கொண்டாட வேண்டும். ஒருவர் இறந்தபின் செய்யும் எண்ணெய் குளியல் புனிதமாக்கப்பட வேண்டும். இன்றைய தினத்தில் செய்யப்படும் எண்ணெய் குளியலின் எண்ணெயில் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டும். இந்த நாளில் ஒவ்வொருவர் வீட்டு தண்ணீரிலும் கங்கா தேவி எழுந்தருள வேண்டும் என வரம் வேண்டி அதனை பெற்று கொண்டார்.


    தீபாவளி அமாவாசையொட்டி வருவதால் தீது பாவ வழி என்று அசைவ உணவுகளை தவிர்த்து புத்தாடை, இனிப்பு வகைகள், பலகாரங்கள், நல்ல அறுசுவை சைவ உணவுடன் பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவது தான் சிறப்பானதாக இருக்கும்.

    தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும், சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய் குளியல் (கங்கா குளியல்) செய்வர். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டு காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர். ஒவ்வொருவர் வீட்டிலும் இனிப்புகள் செய்து ஒருவருக்கொருவர் வழங்கி வாழ்த்துக்களை பரிமாறி கொள்வர். அடிப்படையில் இந்து பண்டிகையாக இருந்தாலும், சாதி, மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகையாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.
    Next Story
    ×