search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தீபாவளி கொண்டாட காரணமான கதைகள்
    X

    தீபாவளி கொண்டாட காரணமான கதைகள்

    தீபாவளி பண்டிகை என்பது பல புராண மற்றும் இதிகாச கதைகளுடன் தொடர்புடைய சிறப்பு மிகு பண்டிகையாக விளங்குகிறது.
    தீபாவளி இந்தியா முழுவதும் மதங்களை கடந்து கொண்டாடப்படும் பெரிய பண்டிகை. திருவிழா, கொண்டாட்டம் என்றவாறு உள்ளது. தீபாவளி பண்டிகை என்பது பல புராண மற்றும் இதிகாச கதைகளுடன் தொடர்புடைய சிறப்பு மிகு பண்டிகையாக விளங்குகிறது. இந்த புராண மற்றும் இதிகாச கதைகளின் முக்கிய கரு என்பது தீயவை அழிந்து நன்மை வெற்றி பெறுவதை குறிப்பதாகவே உள்ளது. நன்மை மற்றும் உண்மையின் வெற்றி நாயகர்களின் கதாபாத்திரங்கள் மட்டுமே வேறுபடுகின்றன.

    தீபங்களின் அணிவரிசை நிகழ்வாய் அறியப்படும் தீபாவளியில் ஜொலிக்கும் தீபங்கள் நல்ல அறிவு ஜோதியை பிரகாசிக்க வைக்கும் வடிவமாகவும், தீயவைகள் அழிந்து நமது உள்ளத்தில், உலகத்தில் ஏற்பட்ட வெளிச்ச சூழல் உலகம் அறியட்டும் என்பதாகவும் தீபஒளி ஏற்றி கொண்டாடப்படுகிறது.

    வட இந்திய பகுதிகளில் ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் இப்பண்டிகை தென் இந்திய பகுதிகளில் முக்கியமான ஒர நாள் பண்டிகையாக மட்டும் கொண்டாடப்படுகிறது. புராண மற்றும் இதிகாசத்துடன் அதிக தொடர்பு கொண்டுள்ள இந்த தீபாவளி இந்து மதத்தினர் மட்டுமின்றி சீக்கியர், ஜெயின், புத்த மதத்தினர் கொண்டாடும் திருவிழாவாக உள்ளது. தீபாவளியுடன் தொடர்புடைய புராண கதைகள் சில...

    இராமரின் வெற்றி திருவிழா தீபாவளி

    இராமர் வனவாசம் செல்ல வேண்டும் என தசரதர் கூறியதும் இராமர் தன் மனைவி சீதா மற்றும் லட்சுமணன் உடன் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றார். வனவாசத்தின்போது இராவணனால் சீதாதேவி தூக்கி செல்லப்பட்டு அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்டாள். இதன்பின் ஏற்பட்ட சண்டையில் இராவணனை கொன்று சீதாதேவியை மீட்டார் இராமர். இவ்வெற்றிக்கு பின் வனவாசமும் முடிந்து அயோத்தியில் இராமனை வரிசையாக அகல் விளக்கு ஏற்றி வைத்து வரவேற்றர். இராமாயண இதிகாசத்தில் தீமையை அழித்து நன்மை வெற்றி பெற்றதன் நினைவாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.



    நரகாசுரனை வதம் செய்த கிருஷ்ணர்

    கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதைத்த தினத்தையே தீபாவளி என கொண்டாடுகிறோம். பூமாதேவியின் மகனான நரகாசுரன் மனிதர்களை பெரிதும் துன்புறுத்தி வந்தான். அவன் பிரம்மாவை வேண்டி தவம் இருந்து தன் தாயை தவிர வேறு யார் மூலமாகவும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரம் பெற்றவன். இவன் கொடுமை தாங்காது மக்கள் கிருஷ்ணரிடம் தஞ்சம் அடைந்தனர்.

    உடனே கிருஷ்ணர் நரகாசுரனை அழிக்க தானே களத்தில் இறங்கினார். அவனது வரம் பற்றி அறிந்த கிருஷ்ணர் தன்னுடன் பூமாதேவியின் மறு அவதாரமான சத்தியபாமாவை தன்னுடன் போருக்கு அழைத்து சென்றார். இப்போரில் கிருஷ்ணர் ஒரு கால கட்டத்தில் மயக்கமடைந்து விழுந்து விட, தன் கணவரையே தாக்கிய இவனை விடேன் என சத்தியபாமா வில்லை எடுத்து அம்பு மழை பொழிந்தாள். அம்புகளால் துளைக்கப்பட்ட நரகாசுரன் உயிர் பிரிந்து வீழ்கிறான்.

    இதன் பின் கிருஷ்ணர் நரகாசுரன் பிடியில் இருந்த பெண்களை மீட்டார். இந்த வதம் நடைபெற்ற நாளின் அதிகாலையில் கிருஷ்ணர் எண்ணெய் தேய்த்து குளித்து தலை முழுகினார். மக்கள் ஆரவாரத்துடன் வீடுகளில் தீபங்களை அணிவரிசையாய் ஏற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இதனால் நரகாசுரன் தான் இறந்த நாளை இதேபோல் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என வரம் கேட்டான். அதன்படியே நரகாசுரன் சதுர்த்தி என்றவாறு தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    மகாபலி வரமாய் பெற்ற தீபாவளி


    பக்த பிரகாலதனின் பேரனான மகாபலி சக்ரவர்த்தி இந்திர பதவி வேண்டி யாகம் நடத்தினார். அவன் பெற்ற வரங்களால் தனது இந்திர பதவிக்கு ஆபத்து வரும் என தேவர்கள் மகா விஷ்ணுவிடம் முறையிட்டனர். இதனால் வாமன அவதாரமாய் மகாபலி நடத்திய யாக கூட்டத்திற்கு சென்று ‘தனக்கு மூன்றடி மண்’ தானமாக கொடு என கேட்க, மகாபலி தருகிறேன் என தாரை வார்த்து கொடுத்தார்.

    உடனே வாமருபம் விஸ்ரூபமாய் திரிவிக்கிரமனாக நின்றார். முதல் நாள் பூமியை ஒரு திருவடியில் அளந்தார். அடுத்த நாள் அடுத்த திருவடியால் விண்ணை அளந்தார். மூன்றாவது அடியை எங்கே வைக்க என கேட்க, மகாபலி உடனே தன் தலையை காட்ட அதன் மீது தன் பாதத்தை பதித்தார் விஷ்ணு. அதன்பின் உனக்கு என்ன வரம் வேண்டும் என கேட்க, மகாபலி உங்களுக்கு தானம் மூன்று நாளின் நடுவில் வரும் சதுர்த்தசி நாளில் மக்கள் எல்லோரும் புத்தாடை அணிந்து தீபங்கள் ஏற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று வரம் பெற்றார்.

    இதுபோல் கிருஷ்ணர் கோவர்தன கிரியை தூக்கி மக்களை காத்த நன்னாளும், பார்வதி தொடர்புடைய கேதார விரத கதையும் தீபாவளி பண்டிகையின் திருகதைகளாக உள்ளன.
    Next Story
    ×