search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கங்கை தீர்த்தத்தில் வேலுக்கு மகா அபிஷேகம் நடப்பதை படத்தில் காணலாம்.
    X
    கங்கை தீர்த்தத்தில் வேலுக்கு மகா அபிஷேகம் நடப்பதை படத்தில் காணலாம்.

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கங்கை தீர்த்த குளத்தில் தங்கவேலுக்கு மகா அபிஷேகம்

    திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் திருக்கரத்தில் உள்ள தங்கவேல், மலை மேல் உள்ள குமரருக்கு எடுத்து சென்று, அங்குள்ள கங்கை தீர்த்த குளத்தில் மகா அபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள காசிவிசுவநாதர் கோவில் மற்றும் மலை மேல் குமரர் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியசாமி சன்னதி வளாகத்தில் உள்ள வற்றாத கங்கை தீர்த்த குளம் (சுனை) உள்ளது. இது, தெய்வீக புலவர் நக்கீரரின் பாவ விமோசனம் பெறுவதற்காக முருகப்பெருமான் தன் திருக்கரத்தில் உள்ள வேல்கொண்டு மலையின் பாறையை கீறி உருவாக்கியதாக புராண வரலாறு கூறுகிறது.

    இதை நினைவூட்டும் விதமாக ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை, கோவிலின் கருவறையில் இருந்து முருகப் பெருமான் திருக்கரத்தில் உள்ள தங்கவேல், மலை மேல் உள்ள குமாரருக்கு எடுத்து செல்லப்படுவது வழக்கம். அதுபோல இந்தாண்டுக்கான வேல் எடுக்கும் திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.

    இதையொட்டி காலை 10 மணிக்கு கருவறையிலிருந்து மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமான் திருக்கரத்தில் உள்ள தங்கவேல் எடுத்து வரப்பட்டு கம்பத்தடி மண்டபத்தில் இருந்த பல்லக்கில் வைக்கப்பட்டது. பிறகு அங்கிருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மலைமேல் உள்ள குமரர் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    தொடர்ந்து அங்குள்ள காசிக்கு நிகரான கங்கை தீர்த்த குளத்தில், தங்கவேலுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. மேலும் பால், பன்னீர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல்முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷத்துடன் பக்தியுடன் சாமி கும்பிட்டனர் பின்பு பக்தர்கள் அனைவருக்கும் கதம்ப சாதம் வழங்கப்பட்டது.

    இதனையடுத்து மதியம் 2 மணிக்கு மேல் மலையை விட்டு வேல் எடுத்து வரப்பட்டு, மலை அடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் சன்னதிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பழனியாண்டவருக்கும், தங்கவேலுக்கும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    பிறகு அங்கு இருந்து மேளதாளங்கள் முழங்க பூப்பல்லக்கில் வேல் எடுத்து நகரின் முக்கிய ரத வீதிகள் வழியே வலம் வந்து கோவிலை சென்றடைந்தது.
    Next Story
    ×