search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆண்டுக்கு ஒரு தடவை மட்டும் திறந்திருக்கும் ஹாசனாம்பா கோவில் நடை இன்று திறப்பு
    X

    ஆண்டுக்கு ஒரு தடவை மட்டும் திறந்திருக்கும் ஹாசனாம்பா கோவில் நடை இன்று திறப்பு

    ஆண்டுக்கு ஒரு தடவை மட்டுமே தீபாவளியையொட்டி திறந்திருக்கும் ஹாசனாம்பா கோவில் நடை இன்று (வியாழக்கிழமை) திறக்கப்படுகிறது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
    கர்நாடக மாநிலம் ஹாசனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஹாசனாம்பாதேவி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலுக்கு தலப்புராணம் உள்ளது.

    அதாவது, சப்த கன்னியர்களான பிரம்ஹிதேவி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாரகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் வாரணாசியில் இருந்து தெற்கு பகுதிக்கு புத்துணர்வுக்காக வலம் வந்தார்கள் என்றும், அந்த சப்த கன்னியர்களில் வைஷ்ணவி, கவுமாரி, மகேஸ்வரி அம்மன்கள் ஹாசனாம்பா கோவிலில் மண்புற்றின் வடிவத்தில் நிலைத்தார்கள் என்றும், பிரம்ஹிதேவி கெஞ்சம்மனின் புதுக்கோட்டையில் நிலைக்கொண்டிருக்கிறார் என்றும், சாமுண்டி, வாரகி, இந்திராணி ஹாசன் நகரில் உள்ள தேவிகெரேயில் நிலைகொண்டு இருப்பதாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

    இத்தகைய புகழ்பெற்ற ஹாசனாம்பாவுக்கு சுமார் 12-ம் ஆண்டு நூற்றாண்டில் கிருஷ்ணப்பா நாயக்க பாளையக்காரரின் காலத்தில் கோவில் எழுப்பப்பட் டது. இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒரு தடவை 10 நாட்கள் மட்டுமே நடை திறந்து பூஜை நடத்தப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புரட்டாசி மாதம் இறுதி முதல் ஐப்பசி மாதம் முதல்வாரத்திற்குள் வரும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் வியாழக்கிழமை கோவில் நடை திறக்கப்பட்டு, அமாவாசைக்கு அடுத்த 3-வது நாள் கோவில் நடை சாத்தப்படுவது வழக்கமாக உள்ளது. அதாவது 10 நாட்களும் இரவு முழுவதும் நடை சாத்தப்படாமல் திறந்தே இருக்கும்.

    கோவில் நடை திறக்கப்படும் முதல் நாளில் ஹாசன் மாவட்டமின்றி மாநிலம் முழுவதில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். அவர்கள் கர்ப்பகிரகத்துக்கு எதிரே வாழைத் தண்டுகளை நட்டுவைத்து, ஹாசனாம்பாவை பயபக்தியுடன் பஜனைகள் பாடுவார்கள். பின்னர் அந்த வாழைத்தண்டுகளை வெட்டியதும், கோவில் நடை திறக்கப்படுவது இன்று வரை நடைமுறையில் இருக்கும் ஐதீகமாகும்.



    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவில் நடை இன்று (வியாழக்கிழமை) மதியம் 12.35 மணிக்கு திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. வருகிற 21-ந்தேதி (சனிக்கிழமை) கோவில் நடை சாத்தப்படுகிறது. கோவில் நடை திறந்திருக்கும் 10 நாட்களும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் ஹாசன் மட்டுமின்றி கர்நாடக மாநிலம் முழுவதும் இருந்தும் பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்வார்கள். அத்துடன் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்பட வெளிமாநில பக்தர்களும், வெளிநாட்டை சேர்ந்தவர்களும் இங்கு வந்து அம்மனை வழிபட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த ஆண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவிலில் அதிகளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் வகையில் இந்த ஆண்டு அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் தரிசன நேரம் குறைக்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரி தெரிவித்தார்.

    கோவில் நடை திறப்பை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக மைசூரு, சாம்ராஜ்நகர், மண்டியா உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஹாசனுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதுதவிர பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. 3 ‘ஷிப்ட்‘ முறையில் தலா 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அத்துடன் கோவிலின் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
    Next Story
    ×