search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா 20-ந்தேதி தொடங்குகிறது
    X

    பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா 20-ந்தேதி தொடங்குகிறது

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 20-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்குகிறது.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனியில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 20-ந் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்குகிறது. இதையொட்டி பெரியநாயகி அம்மன் கோவிலில், அன்றைய தினம் காலை காலசந்தி பூஜை, விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம் நடைபெறுகிறது.

    அதனைத்தொடர்ந்து விநாயகர், சோமாஸ்கந்தர், வள்ளி-தெய்வானை, முத்துக்குமாரசுவாமி ஆகியோருக்கு காப்புகட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. இதே போல் திருஆவினன்குடி கோவிலில் உச்சிகால பூஜையில் மூலவருக்கும், மலைக்கோவிலில் உச்சிகால பூஜையில் விநாயகர், மூலவரான சின்னக்குமாரர், சண்முகர், வள்ளி-தெய்வானை, துவார பாலகர், கொடிமரம், மயில், நவவீரர்கள் ஆகியோருக்கும் காப்புகட்டு நடைபெறுகிறது. அதன் பின்னர் சஷ்டி விரதம் தொடங்கும் பக்தர்களுக்கு காப்புகட்டும் நிகழ்ச்சி நடக்கிறது.

    7 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினசரி, சின்னக்குமாரர், சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். 6-ம் திருநாளான 25-ந் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. அன்றைய தினம் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், 2.30 மணிக்கு மூலவரிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடத்தப்படும்.

    பின்னர் திருக்கோவில் நடை திருக்காப்பிடப்படும். இதையடுத்து பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் பாதவிநாயகர் கோவில் வருதலும், சக்திவேல் திருஆவினன்குடி சென்று சிறப்பு பூஜைக்கு பின் பெரிய தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி போருக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் மாலை 6 மணிக்கு மேல் அடிவாரம் கிரிவீதிகளில் சூரசம்ஹாரம் நடைபெறும்.

    அடுத்த நாள் காலை 10.45 மணிக்கு மேல் சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சியும், இரவு 7.15 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. கந்தசஷ்டி விழாவையொட்டி வருகிற 25-ந் தேதி மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி மலைக்கோவில் தெற்கு வெளிப்பிரகார திருக்கல்யாண மண்டபத்தில் தினசரி மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×