search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமாலின் காத்தல் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் சக்கரத்தாழ்வார்
    X

    திருமாலின் காத்தல் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் சக்கரத்தாழ்வார்

    மஹா விஷ்ணுவின் திருக்கரங்களில் ஐந்து ஆயுதங்களில் முக்கியமானது ஸ்ரீ சுதர்ஸனர். இவரே திருமாலின் காத்தல் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பவர்.

    மஹா விஷ்ணுவின் திருக்கரங்களில் ஐந்து ஆயுதங்களைக் காணலாம். இவற்றில் முக்கியமானது சக்கரம் என்று போற்றப்படுகின்ற ஸ்ரீ சுதர்ஸனர். இவரே திருமாலின் காத்தல் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பவர்.

    சக்கரத்தானை திருவாழியாழ்வான் என்று போற்றுகின்றனர் ஆழ்வார்கள். இவருக்கு ஹேதிராஜன் என்ற திருநாமமும் உண்டு. சுவாமி தேசிகன் இவரை சக்ர ரூபஸ்ய சக்ரிண என்று போற்றுகிறார். அதாவது திருமாலுக்கு இணையானவர் என்று பொருள். சுவாமி தேசிகன் அருளிய சுதர்ஸனாஷ்டகத்தை தினமும் பாராயணம் செய்தால் எண்ணிலடங்காத நன்மைகளை அடையலாம்.

    பெரியாழ்வாரும் சக்கரத்தாழ்வாரை வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு என்று வாழ்த்துகிறார். சக்கரத்துடன் இணைந்தவரே திருமால் என்பது நம்மாழ்வாரின் வாக்கு. அவர் திருமாலுக்கு சுடராழி வெண்சங்கேந்தி வாராய் என்று பாமாலை சூட்டுகிறார்.

    சுதர்ஸனர், பல புராணங்களில் பேசப்படுகிறார். நரசிம்ம அவதாரத்தில் இரணியனை வதம் செய்வதற்கு நகங்களாக இருந்தவர் சுதர்ஸனர்தான் என்கிறது புராணம். அதேபோல், திருமாலின் வாமன அவதாரத்தின்போது தானம் கொடுக்க வந்த மஹாபலி சக்கரவர்த்தியைத் தடுத்தார் சுக்ராச்சாரியார்.

    அவரின் எண்ணத்தை திசை திருப்பியவர் சக்கரத்தாழ்வார். அதேபோல் சிசுபாலனை சக்கரத்தாழ்வாரைக் கொண்டே அழித்தார் ஸ்ரீகிருஷ்ணர். கஜேந்திர மோட்சத்தில் சக்கரத்தாழ்வாரைக் கொண்டே முதலையின் கழுத்தை அறுத்து கஜேந்திரனை காப்பாற்றினார் திருமால். புண்டரிக வாசுதேவன் மற்றும் சீமாலி ஆகிய அரக்கர்களின் ஆணவம் அழிந்திட சக்கரத்தாழ்வாரே காரணம். மகாபாரதப் போரில் ஜெயத்ரதனை அழித்திட கிருஷ்ண பரமாத்மா சுதர்ஸனரையே பயன்படுத்தினார்.

    அநீதிகளை அழிக்க (பகவானுக்கு) பயன்படுகின்ற சக்கரத்தாழ்வாரின் சந்நிதிகள் பல திவ்ய தேசங்களிலும் உள்ளன. காஞ்சி வரதர் கோயில், திருவரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருமோகூர், திருக்குடந்தை உள்ளிட்ட ஆலயங்களில் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார் சக்கரத்தாழ்வார்.

    இந்த சுதர்ஸனர், திருவாழியாழ்வான், சக்கரம், திகிரி என்றும் அறியப்பெறுகிறார். இவர் பதினாறு கைகளை கொண்டவராகவும், சில இடங்களில் முப்பத்திரண்டு கைகள் கொண்டவராகவும் அறியப்பெறுகிறார். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கென தனி சந்நிதி காணப்பெறுகிறது. சக்கரத்தாழ்வார் தனது பதினாறு ஆயுதங்களை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
    Next Story
    ×