search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்தது ஏன்?
    X

    புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்தது ஏன்?

    சனிக்கிழமையில் பெருமாளை சேவிப்போரை சனி ஒன்றும் செய்வதில்லை என்ற நம்பிக்கையினால்தான் புரட்டாசி சனிக்கிழமை மிகவும் சிறப்பு பெற்றுள்ளது.
    புரட்டாசி என்றவுடனேயே நம் கண்முன் தோன்றுவது பெருமாளின் திருவுருவமே. புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு விரதம் இருப்போரும் உண்டு. இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் நெற்றி நிறைய திருமண் இட்டு பாத்திரம் ஏந்தி வீடு வீடாகச் சென்று ‘நாராயணா, கோபாலா...’ என்று அவன் நாமத்தை உச்சரித்து பிச்சை எடுத்து கிடைத்த அரிசியை அரைத்து அதில் மாவிளக்கு மாவு இட்டு பெருமாளை சேவிப்பதை இன்றும் கிராமப்புறங்களில் காணமுடியும். 

    இந்த மாதம் முழுவதும் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் இந்த மாதத்திற்கு கன்னியா மாதம் என்றும் பெயர் உண்டு. நவகிரகங்களில் மகாவிஷ்ணுவின் அம்சமாக உருவானவர் புதபகவான். புதன் கிரகம் உச்ச பலம் பெறுவது கன்னி ராசியில். எனவேதான் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புரட்டாசி, பெருமாளுக்கு உரிய மாதம் என பெரியவர்கள் வகுத்திருக்கிறார்கள்.

    அதோடு பெரும்பாலும் புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரியனோடு புதனும் இணைந்திருப்பார். சூரியனுக்கு உரிய பிரத்யதி தேவதை பசுபதி என்றழைக்கப்படும் சிவபெருமான்.  புதனுக்கு உரிய பிரத்யதி தேவதை நாராயணன். இவர்கள் இருவரும் தெய்வீக மூலையாக கருதப்படும் கன்னி மூலையில் இணைவது சங்கரநாராயணரின் இணைவாகக் கருதப்படுகிறது.



    சூரியநாராயண ஸ்வாமி என்று சூரியன் பெயர் பெற்ற காரணமும் இதுவே. இதன் மூலம் அரியும், சிவனும் ஒன்று என்ற கருத்து நன்றாகப் புலப்படுகிறது. எனவேதான் புரட்டாசி மாதத்தில் சைவ, வைணவ பேதம் இன்றி பெரும்பாலான இந்துக்கள் அசைவ உணவினை தவிர்த்து சைவ உணவினையே உட்கொள்கின்றனர்.

    மகாவிஷ்ணுவின் அம்சம் புதன் என்று வேதம் சொல்கிறது. அவ்வாறு இருக்க புரட்டாசியில் புதன்கிழமைதானே முக்கியத்துவம் பெறவேண்டும், மாறாக சனிக்கிழமை சிறப்பு பெறக் காரணம் என்ன? பொதுவாக பெருமாளின் அடியவர்கள் மீது சனி பகவான் தனது முழு தாக்கத்தையும் காண்பிப்பதில்லை, மேலும் புரட்டாசி சனிக்கிழமை அன்று சனியின் வீரியம் குறைந்திருக்கும் என புராணங்கள் உரைக்கின்றன.

    சனிக்கிழமையில் பெருமாளை சேவிப்போரை சனி ஒன்றும் செய்வதில்லை என்ற நம்பிக்கையினால்தான் புரட்டாசி சனிக்கிழமை மிகவும் சிறப்பு பெற்றுள்ளது. சனியின் தாக்கம் இல்லாதவர்கள் புரட்டாசி மாதத்தில் வரும் புதன்கிழமையிலும் மாவிளக்கு மாவு இட்டு பெருமாளை சேவிக்கலாம்.
    Next Story
    ×