search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பூதநாயகி அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடிய போது எடுத்த படம்.
    X
    பூதநாயகி அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடிய போது எடுத்த படம்.

    துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு

    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியில் உள்ள பூதநாயகி அம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியில் பூதநாயகி அம்மன் கோவில் உள்ளது. சுற்றுவட்டாரப் பகுதி கிராம மக்களின் வழிபாட்டுத்தலமாக திகழும் இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் திருவிழா நடைபெறும். இதே போல் இந்த ஆண்டும் திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 19-ந் தேதி இரவு காப்பு கட்டப்பட்டு திருவிழா தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    26-ந் தேதி முதல் அலங் கரிக்கப்பட்ட அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்தார். இதைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொன்னூஞ்சல் விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. கோவிலில் சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர் அலங்கரிக்கப்பட்ட பூதநாயகி அம்மனை மின்னொளியில் ஜொலித்த மாட்டு வண்டியில் ஏற்றி வந்து வைத்த பின்னர் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலம் புறப்பட்டது. நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பள்ளிவாசல் அருகே அமைக்கப்பட்டிருந்த பந்தலில் இருந்த ஊஞ்சலில் பூதநாயகி அம்மனை வைத்து தாலாட்டுப் பாடினர்.

    பின்னர் மீண்டும் அம்மனை கோவிலுக்கு எடுத்துச் சென்றனர். மேலும் பெண்கள் பலரும் முளைப்பாரி எடுத்து வந்தனர். இந்த நிகழ்வானது நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை தொடர்ந்து நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக நேற்று காலை கோவில் முன்பு உள்ள வளாகப் பகுதியில் துவரங்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

    நேற்று இரவு காப்பு களைதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பிரபாகர் தலைமையில் அறங்காவலர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர். இதே போல் தூய்மைப் பணிகளை பொன்னம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் டாக்டர் சாகுல் ஹமீது மேற்பார்வையில் துப்புரவு பணியாளர்கள் மேற்கொண்டனர். மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஆசைத்தம்பி தலைமையில் திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    Next Story
    ×