search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆன்மிக உணர்வுக்கு துணை நிற்கும் குறியீடுகள்
    X

    ஆன்மிக உணர்வுக்கு துணை நிற்கும் குறியீடுகள்

    ஆன்மிக முக்கியத்துவம் பெற்ற சின்னங்கள் மற்றும் குறியீடுகளை பயன்படுத்துவது பற்றிய சுவாரசியமான தகவல்களை இங்கே காணலாம்.
    ஒருவரது எண்ணம் அல்லது கருத்தை இன்னொருவருக்கு தெரிவிக்கும் தகவல் தொடர்புகளுக்கு, குறியீடுகள் அல்லது சின்னங்களை பயன்படுத் தும் முறை பழங்காலம் முதலே நமது நாட்டில் இருந்து வந்துள்ளது. மன்னர்கள் தங்களது முத்திரை மோதிரங்களை பயன்படுத்தி, முக்கியமான செய்திகளை சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பினார்கள். சரித்திர ஆய்வுகளை மேற்கொள்பவர்கள், தங்களது முடிவுகளை உறுதி செய்ய சின்னங்களைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

    ஆன்மிக சின்னங்கள் :

    சின்னங்கள் அல்லது குறியீடுகளின் முக்கியத்துவம் ஆன்மிகம் சார்ந்த விஷயங்களுக்கு மிகவும் அவசியமானதாக இருப்பதோடு, உலக நாடுகள் அனைத்திலும் அவை பயன் படுத்தப்படுகின்றன. அத்தகைய சின்னங்கள் தனி நபரது வாழ்க்கை முறைகளிலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்ற நம்பிக்கை அனைத்து நாடுகளிலும் உண்டு. அந்த அடிப்படையில் ஆன்மிக முக்கியத்துவம் பெற்ற சின்னங்கள் மற்றும் குறியீடுகளை பயன்படுத்துவது பற்றிய சுவாரசியமான தகவல்களை இங்கே காணலாம்.

    ஸ்வஸ்திக் சின்னம்

    ஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ருத்தச்ரவா

    ஸ்வஸ்தி ந பூஷா விச்வவேதா று

    ஸ்வஸ்தி ந ஸ்தாசஷ்யோர் அரிஷ்டநேமி

    ஸ்வஸ்தி நோ ப்ருஹஸ்பதிர் ததாத றுறு

    -என்று யஜூர் வேதத்தில் குறிப்பிடப்படுகிறது.

    அதாவது, சகல வளங்களும் நிறைந்த நல்வாழ்வை தருவதற்காக, தேவர்களை குறித்து செய்யப்படும் பிரார்த்தனையாக இது உள்ளது. மேற்கண்ட வேத பிரார்த்தனையில் உள்ள ‘ஸ்வஸ்தி’ என்ற வார்த்தை ‘தடைகள் இல்லாத நல்வாழ்வு’ என்ற அர்த்தத்தில் குறிப்பிடப்படுகிறது. அந்த நிலையை ஏற்படுத்தும் சின்னமாக ‘ஸ்வஸ்திகா’ எனப்படும் ‘ஸ்வஸ்திக்’ என்று பயன்படுத்தப்படுகிறது. மகாவிஷ்ணுவின் வலது கரத்தில் உள்ள சுதர்சன சக்கரத்தின் வடிவமே ‘ஸ்வஸ்திக்’ என்ற கருத்தும் இருக்கிறது. செங்கோண வடிவத்தில், மேலிருந்து கீழாக மற்றும் இடமிருந்து வலமாக, ஒன்றுக்கு ஒன்று குறுக்காக செல்லும் கோடுகள் மூலம் இவ்வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்தச் சின்னத்தில் இருக்கும் எட்டு கோடுகளும் எட்டு திசைகளை குறிப்பதாகவும், அந்த திசைகளிலிருந்து புறப்படும் சுப காரிய தடையை உண்டாக்கும் சக்திகளை ‘ஸ்வஸ்திக்’ தடுப்பதாகவும் ஐதீகம் உண்டு. இந்திய ஆன்மிக பண்பாட்டு ரீதியாக, வீட்டின் தலைவாசல், தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்களை வைக்கும் இடங்கள், பணப்பெட்டி, கல்லாப்பெட்டி, கணக்கு புத்தகம் மற்றும் குறிப்பேடுகள், வழிபாட்டுக்குரிய தலங்கள் ஆகிய சகல இடங்களிலும் ‘ஸ்வஸ்திக்’ வடிவ சின்னம் பயன்படுத்தப்படுகிறது.

    வரையும் முறை :

    ஸ்வஸ்திக் சின்னத்தை வரைவதற்கென்று பிரத்யேகமான ஒரு முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது, முதலில் இடமிருந்து வலமாக உள்ள மூன்று கோடுகளை வரைந்து கொள்ளவேண்டும். பின்னர், கீழிருந்து மேலாக மற்ற மூன்று கோடுகளையும் வரைய வேண்டும். இந்த முறைப்படிதான் சகல இடத்திலும் ஸ்வஸ்திக் சின்னம் அமைக்கப்பட வேண்டும். அதன் மூலம் அனைத்து விதமான நலன்களும் ஏற்படும் என்பது ஐதீகம். அவ்வாறு வரையப்பட்ட சின்னத்தை வண்ணங்களால் அலங்கரிக்க விரும்புபவர்கள், மஞ்சள் நிறத்தில் பட்டையான கோடுகளை வரைந்த பிறகு, அவற்றின் மையப்பகுதியில் குங்குமம் மூலம் பொட்டிட்டு அலங்கரிப்பது, மங்கள சக்திகளை ஈர்ப்பதாக தாத்பரியம் உண்டு.

    இரண்டு வகைகள் :

    ஸ்வஸ்திக் சின்னமானது வலப்புற சுற்று மற்றும் இடப்புற சுற்று ஆகிய இரண்டு நிலைகளில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக, மங்களமான சக்திகளை ஈர்க்கக்கூடிய வலப்புற சுற்று அமைந்த (அதாவது கடிகார முள் சுற்றுவதுபோல) சின்னம்தான் அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு மாறாக, இடப்புற சுற்றாக (கடிகார முள் சுற்றுவதற்கு எதிர்ப்புறமாக) பயன்படுத்தப்படும் ஸ்வஸ்திக் சின்னம் தீய சக்திகளை ஈர்க்கும் தன்மை பெற்றதாக கருதப்படுகிறது. அதனால், சின்னத்தை வரையும்போது கவனமாக இருப்பது அவசியம்.

    பழங் காலங்களில் மன்னர்கள் போர் புரிய சென்ற வழிகளில், ‘ஸ்வஸ்திக்’ வடிவ கோலங்கள் போடப்படும் சம்பிரதாயம் இருந்து வந்துள்ளது. சகல தேவதைகளும் அமரும் சின்னமாக இது கருதப்பட்டதால், வீடுகளில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்பதற்காகவும் ஸ்வஸ்திக் கோலங்கள் போடப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாது தெய்வங்கள் வந்து அமரும் இடமே ‘ஸ்வஸ்திக்’ என்றும் கருதப்பட்டது. ‘ஸ்வஸ்தி’ என்ற சொல்லுக்கு இடையூறுகள் இல்லாத தன்மை என்று அர்த்தம் உண்டு.

    பூஜை அல்லது தியானம் செய்பவர்கள் பத்மாசனம் அல்லது சித்தாசனத்தில் அமர்வதுபோலவே ஸ்வஸ்திகாசனம் என்ற முறையிலும் அமரலாம். அமர்வதற்கு சற்று எளிதாக உள்ள தோடு, சுலபமாக மன ஒருமைப்பாடு அடை வதற்கும் இந்த ஆசனம் உதவியாக உள்ளது என்பதை பலரும் உணர்ந்திருக்கிறார்கள். கிழக்கு திசையை பார்த்தவாறு அதிகாலை நேரத்தில் இந்த ஆசனத்தில் அமர்ந்து ஆன்மிக பயிற்சிகளை மேற்கொள்வது பண்டைய யோக முறையாக இருந்து வருகிறது. பிரபஞ்சத்தின் நல்ல அலை வீச்சுக்களை கிரகிப்பதற்கு மேற்கண்ட முறை பெரிதும் உதவியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஸ்வஸ்திக் திருக்குளம், திருவெள்ளறை :


    திருச்சி, மணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறை திருத்தலத்தில் 1200 ஆண்டு களுக்கு முற்பட்ட ஸ்வஸ்திக் வடிவ திருக் குளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தந்தி வர்மன் ஆட்சி காலத்தில் கம்பன் அரையன் என்பவரால் அமைக்கப்பட்ட இந்த கிணறு நான்கு பக்கமும் படிகளை கொண்டது. காரியத்தடையால் வருந்துபவர்கள் மேற்கண்ட தலத்தின் மூல தெய்வத்தை தரிசித்து, ஸ்வஸ்திக் குளத்தின் தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் மங்களங்களை அருளும் தெய்வீக சக்தியின் உதவியால் வாழ்க்கையில் புதிய பாதைகள் தென்படும் என்றும் ஆன்றோர்கள் வழிகாட்டியுள்ளனர்.

    விநாயகர் சின்னம் :

    மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும் ஒன்றுக்கொன்று குறுக்காக அமைக்கப்படும் கோடுகள் கொண்ட ‘ஸ்வஸ்திக்’ விநாயகரது விசேஷ சின்னமாக கருதப்படுகிறது. விழாக் காலங்களில் வீடுகளில் பூஜையறை மற்றும் தலைவாசல் ஆகிய இடங்களில் கோலமாக இடப்படுவதோடு, வீட்டு நிலை மற்றும் கதவுகளில் மஞ்சள் மற்றும் குங்குமம் கொண்டு, வெற்றியின் சின்னமாகவும் ‘ஸ்வஸ்திக்’ வரையப்படுகிறது. தடைகள் இல்லாத நல்வாழ்வு என்ற பொருள் கொண்ட ‘ஸ்வஸ்திக்’கில் உள்ள எட்டு கோடுகளும் எட்டு திசைகளிலிருந்தும் வரக்கூடிய தடைகளை தடுப்பதோடு, நம்மால் தொடங்கப்படும் செயல்கள், இறையருளுடன் இனிதே நிறைவேற வழிகாட்டுவதாகவும் ஐதீகம். சுதர்சன சக்கர வடிவில் உள்ள ஸ்வஸ்திக், சூரியனுக்குரிய வழிபாட்டிலும் இடம் பெறுவதுண்டு.

    விநாயக சக்கரமாக கருதப்படும் ஸ்வஸ்திக் சின்னத்தின் நடுவில் பசு நெய் தீபத்தை, குபேர திக்கான வடக்கு திசையை நோக்கியும், மற்ற நான்கு கோடுகளின் முடிவில், நான்கு பசு நெய் தீபங்களை நடுவில் உள்ள தீபத்தை பார்த்தவாறு ஏற்றி வைத்து வழிபட்டு வருவதன் மூலம், வியாபார விருத்தியும், புதிய நுட்பங்களை கடைப்பிடிக்கும் வாய்ப்புகளும் ஏற்படும் என்று ஆன்றோர்கள் கூறுகிறார்கள். மேலும், தொழில் மற்றும் வியாபாரம் ஆகியவற்றில் நல்ல வேலையாட்கள் கிடைப்பதற்கும் மேற்கண்ட வழிமுறை பயன்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கண்ட வழிமுறையை வீடுகளில் கடைப்பிடிக்கலாம்.

    உலக நாடுகளில் ‘ஸ்வஸ்திக்’ :


    பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, பல்வேறு உலக நாடுகளில் ‘ஸ்வஸ்திக்’ சின்னம் மனித நாகரிகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. சீனாவில் ‘வான்’ என்றும், ஜப்பானில் ‘மஞ்சி’ என்றும், இங்கிலாந்தில் ‘பில்பாட்’ என்றும், ஜெர்மனியில் ‘ஹேக்கன்குரோஸ்’ என்றும், கிரீஸ் நாட்டில் ‘டெட்ராஸ்கெலியன்’ என்றும் ஸ்வஸ்திக் சின்னம் அழைக்கப்படுகிறது.

    குறிப்பாக ஜெர்மனிய ஆன்மிகவாளர்களால் பரிந்துரை செய்யப்பட்ட ஸ்வஸ்திக் சின்னம், ஹிட்லரின் தவறான அணுகுமுறை காரணமாக அவரது அழிவுக்கே அடிப்படையாக அமைந்து விட்டது. சீனாவின் பாரம்பரிய நிறமான சிவப்பு நிறத்தில் ஸ்வஸ்திக் சின்னம் வரையப்பட்டு, பயன்படுத்தப்படுவதோடு, புத்தர் சிலைகளிலும் செதுக்கி வைப்பதும் பண்பாடாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஸ்வஸ்திக் அமைப்பின் உலகளாவிய தன்மையை எடுத்துக்காட்டும்படியாக கென்யாவின் நைரோபியில் உள்ள மருத்துவமனையும், கலிபோர்னியாவில் உள்ள கப்பற்படை அலுவலகமும் ஸ்வஸ்திக் சின்ன அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×