search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குலசேகரன்பட்டினம் தசரா விழா: காளி வேட மகிமை
    X

    குலசேகரன்பட்டினம் தசரா விழா: காளி வேட மகிமை

    குலசேகரன்பட்டினம் தசரா விழாவின்போது ஆண்கள் காளி வேடமிட்டு வருவதை பார்க்கலாம். சமீபகாலமாக முத்தாரம்மன் அருள்பெற இளம்பெண்களும் காளி வேடம் போட தொடங்கி உள்ளனர்.
    குலசேகரன்பட்டினம் தசரா விழாவின்போது ஆண்கள் காளி வேடமிட்டு வருவதை பார்க்கலாம். காளி வேடத்தில் இருப்பவர்களை கண்டதும் அம்மனே நேரில் வந்ததாக பக்தர்கள் நினைத்து வழிபட்டு, காணிக்கை அளித்து அருள்வாக்கு பெறுவதும் வழக்கமாக உள்ளது. அம்மன், சூரனை சூலாயுதத்தால் குத்தும்போது இவர்களும் கைகளில் உள்ள சூலாயுதத்தால் மகிஷனை குத்துவார்கள்.

    காளிவேடம் போடுபவர்கள் தசராவின்போது 48 நாட்கள் கடும் விரதம் இருப்பர். அந்நாட்களில் ஒருவேளை மட்டுமே சைவ உணவு சாப்பிடுவார்கள். அவரவர் ஊரின் கோவில்களில் தங்கி தானே சமைத்து, காலை, மாலை இரு வேளையும் குளித்து விரதம் மேற்கொள்வார்கள். கொடியேற்றத்திற்கு பின் இவர்கள் ஊர், ஊராக செல்வார்கள்.

    தலையின் பின்புறம் தொங்கும்படி கட்டப்பட்ட நீண்ட முடியுடன், தகரத்தாலும், அட்டையாலும் செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்ட கிரீடம், நேர்பார்வை மட்டுமே பார்க்க தக்கவாறு சிறு துளையிடப்பட்டுத் தகரத்தால் செய்யப்பட்ட கண்மலர், வாயின் இருபுறமும் செருகி கொள்ளக்கூடிய வீர பற்கள், வெளியில் தொங்கும் நாக்கு, முகத்தில் சிவப்பு நிற பூச்சு, மரப்பட்டையாலும், இரும்பு தகடாலும், அட்டையாலும் செய்யப்பட்ட பக்கத்துக்கு நான்கு என்ற முறையில் 8 கைகள், சிவப்பு புடவை, மனித தலைகள் வரையப்பட்ட அட்டை மாலை, ருத்திராட்ச மாலைகள், பாசி மாலைகள், இடையில் ஒட்டியாணம், காலில் கனத்த சலங்கைகள், கையில் இரும்பு வாள் இவையே காளியின் அவதாரமாக அணிவதற்கு உரிய பொருட்கள்.

    இப்பொருட்களின் மொத்த எடை 30 கிலோ இருக்கும். சமீபகாலமாக முத்தாரம்மன் அருள்பெற இளம்பெண்களும் காளி வேடம் போட தொடங்கி உள்ளனர்.
    Next Story
    ×