search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நெல்லையில், இன்று தசரா திருவிழாவையொட்டி 41 சப்பரங்கள் பவனி
    X

    நெல்லையில், இன்று தசரா திருவிழாவையொட்டி 41 சப்பரங்கள் பவனி

    நெல்லை மாநகரத்தில் தசரா திருவிழாவையொட்டி நாளை 41 சப்பரங்களின் பவனி நடக்கிறது.
    பாளையங்கோட்டையில் உள்ள ஆயிரத்தம்மன், தூத்துவாரி அம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், யாதவ உச்சிமாகாளி, விசுவகர்ம உச்சிமாகாளி, வடக்கு உச்சிமாகாளி, முப்பிடாதி அம்மன், கிழக்கு உச்சிமாகாளி அம்மன், புதுப்பேட்டை தெரு உலகம்மன் கோவில், புது உலகம்மன்கோவில், பேராத்து செல்வி ஆகிய 12 அம்மன் கோவில்களிலும் தசரா விழா நடந்து வருகிறது.

    நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு அனைத்து கோவில்களிலும் பால்குடம் எடுத்து வருதலும், கிரக குடம் எடுத்து வருதலும் நடக்கிறது. பகல் 12 மணிக்கு அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு அந்தந்த கோவில்களில் இருந்து அம்மன் சப்பரங்கள் புறப்பட்டு வீதி உலா செல்கின்றன.

    1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு 12 அம்மன் சப்பரங்களும் பாளையங்கோட்டை ராமசாமி கோவில் திடலில் அணிவகுத்து நிற்கும். இதன்பிறகு அனைத்து சப்பரங்களும் வடக்கு முத்தாரம்மன் கோவில் வழியாக சென்று மாலை 3 மணிக்கு பாளையங்கோட்டை கோபால்சாமி கோவில் திடலில் அணிவகுத்து நிற்கும். அங்கிருந்து இரவில் பாளையங்கோட்டை மார்க்கெட்டுக்கு வந்து சேரும். நள்ளிரவு 12 மணிக்கு போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகே உள்ள மாரியம்மன் கோவில் முன்பு சப்பரங்களில் அணிவகுத்து நிற்கும். 12 அம்மன்கள் புடை சூழ ஆயிரத்தம்மன், சூரனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

    நெல்லை டவுனில் உள்ள பகவத்சிங் தெரு துர்க்கையம்மன், தடிவீரன்கோவில் தெரு தேவி மாரியம்மன், திருப்பணிமுக்கு மாரியம்மன், தடிவீரன்கோவில் தெரு தேவிசுந்தராட்சி அம்மன், சிவா தெரு முத்தாரம்மன், மாதாங்கோவில் தெரு உச்சிமாகாளி அம்மன், காவல்பிறை தெரு உச்சிமாகாளி அம்மன், குற்றாலம் ரோடு முப்பிடாரி அம்மன், தெப்பக்குளம் கீழத்தெரு வலம்புரி அம்மன், கீழரதவீதி வாகையடி அம்மன், குற்றாலம் ரோடு முப்புடாதி என்ற திரிபுரசுந்தரி அம்மன், அக்காசாலை விநாயகர் கோவில் தெரு உச்சிமாகாளி அம்மன், அம்மன் உள்ளிட்ட 29 அம்மன் கோவில்களிலும் நாளை (சனிக்கிழமை) தசரா திருவிழா நடக்கிறது.

    இரவு 11 மணிக்கு அனைத்து அம்மன் கோவில் சப்பரங்களும் நெல்லை மாநகரில் பவனி வரும். நள்ளிரவு 1 மணிக்கு 29 அம்மன் கோவில்களின் சப்பரங்களும் நெல்லையப்பர் கோவில் முன்பு கிழக்கு நோக்கி வரிசையாக அணிவகுத்து நிற்கும். தசரா திருவிழா, சரசுவதி பூஜை, ஆயுதபூஜையையொட்டி மக்கள் நெல்லை டவுன், பாளையங்கோட்டை மார்க்கெட்களில் சாமி கும்பிடுவதற்கு தேவையான வாழைப்பழம், தேங்காய், பொரி, கடலை உள்ளிட்ட பொருட்களை நேற்று வாங்கி சென்றனர். இதனால் மார்க்கெட்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
    Next Story
    ×