search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு பக்தர்கள் இருமுடி கட்டி, ரதத்துடன் ஊர்வலமாக புறப்பட்டதை படத்தில் காணலாம்.
    X
    கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு பக்தர்கள் இருமுடி கட்டி, ரதத்துடன் ஊர்வலமாக புறப்பட்டதை படத்தில் காணலாம்.

    காளிமலையில் துர்காஷ்டமி விழா: கன்னியாகுமரியில் இருந்து இருமுடி கட்டுடன் பக்தர்கள் ஊர்வலம்

    காளிமலையில் நடைபெறும் துர்காஷ்டமி விழாவையொட்டி கன்னியாகுமரியில் இருந்து இருமுடி கட்டுடன் புனித நீர் ஊர்வலம் நேற்று தொடங்கியது.
    குமரி-கேரள எல்லையான பத்துகாணி காளிமலையில் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் துர்காஷ்டமி விழாவையொட்டி கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு பக்தர்கள் இருமுடி கட்டி ஊர்வலமாக செல்வார்கள். அதன்படி இந்த ஆண்டு துர்காஷ்டமி திருவிழா நேற்று தொடங்கியது. விழாவையொட்டி சிறப்பு பூஜைகள், தீபாராதனை போன்றவை நடந்தன. விழா வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது.

    இதையொட்டி நேற்று கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு பக்தர்கள் இருமுடி கட்டு மற்றும் புனித நீர் ஏந்தி ஊர்வலமாக புறப்பட்டனர்.

    ஊர்வலத்தின் தொடக்க விழா கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் முன்பு நடந்தது. விழாவுக்கு வக்கீல் பெருமாள்பிள்ளை தலைமை தாங்கினார். வெள்ளிமலை இந்து தர்மபீடம் அமைப்பு செயலாளர் சுவாமி சிவாத்மானந்த மகராஜ் ஆசியுரை வழங்கினார். ஊர்வலத்தை பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தலைவர் காமராஐ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    ஊர்வலத்தை சேவாபாரதி மாநில இணை அமைப்பு செயலாளர் கிருஷ்ணன் குட்டி மற்றும் இந்து கோவில் கூட்ட அமைப்பு செயலாளர் வேலுதாஸ் ஆகியோர் வழி நடத்துகிறார்கள். விழாவில் பா.ஜனதா மாநில துணை தலைவர் எம்.ஆர்.காந்தி, திருக்கோவில் திருமடங்களின் மாநில செயலாளர் காளியப்பன், இலங்கை அறங்காவலர் செந்தில்வேள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த ஊர்வலத்துக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட ரதம் சென்றது. ஊர்வலம் விவேகானந்தபுரம், கொட்டாரம், அச்சன்குளம், பொற்றையடி, சுசீந்திரம், இடலாக்குடி, கோட்டார், மீனாட்சிபுரம், ஒழுகினசேரி, வடசேரி, கிருஷ்ணன்கோவில், வெட்டூர்ணிமடம், பார்வதிபுரம், சுங்கான்கடை வழியாக சென்று நேற்று இரவு தோட்டியோடு மவுனகுருசாமி கோவிலுக்கு சென்றது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் தோட்டியோட்டில் இருந்து மீண்டும் ஊர்வலம் தொடங்கி வில்லுக்குறி, புலியூர்குறிச்சி, தக்கலை, சுவாமியார் மடம், இரவிபுதூர்கடை, மார்த்தாண்டம், உண்ணாமலைகடை, ஆற்றூர் வழியாக சென்று இரவு ஈயாங்குளம் இசக்கியம்மன் கோவிலில் தங்குகிறது. நாளை (புதன்கிழமை) ஈயாங்குளத்தில் இருந்து புறப்பட்டு சிதறால், களியல், கடையாலுமூடு வழியாக சென்று காளிமலை சென்றடைகிறது. இரவு அங்குள்ள சிவன் கோவிலில் தங்கிய பின்பு மறுநாள் (28-ந் தேதி) மலையில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துகிறார்கள்.
    Next Story
    ×