search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மயிலாடுதுறை துலாகட்டத்தில் காவிரி மகாபுஷ்கர விழா கொடி இறக்கப்பட்டபோது எடுத்தபடம்.
    X
    மயிலாடுதுறை துலாகட்டத்தில் காவிரி மகாபுஷ்கர விழா கொடி இறக்கப்பட்டபோது எடுத்தபடம்.

    மயிலாடுதுறை துலாகட்டத்தில் காவிரி மகாபுஷ்கர விழா கொடி இறக்கும் நிகழ்ச்சி

    மயிலாடுதுறை துலாகட்டத்தில் காவிரி மகாபுஷ்கர விழா கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள துலாகட்டத்தில் 144 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி மகாபுஷ்கர விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நடைபெற்ற 13 நாட்களில் பல்வேறு ஊர்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனிதநீராடினர்.

    இதனால் மயிலாடுதுறை நகர் பகுதி முழுவதும் விழா கோலமாக காட்சி அளித்தது. விழா நாட்களில் தினமும் காலை சிறப்பு யாகம், மாலை காவிரி நதிக்கு மகாஆரத்தி வழிபாடு, பக்தி பாடல்கள், பஜனை, லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி, திருமுறை வகுப்புகள், கம்பராமாயண சொற்பொழிவுகள், ஆன்மிக கலாசார ஊர்வலம் ஆகியவை நடைபெற்றன.

    மேலும், தினமும் காவிரி துலாகட்டத்தில் அன்னபூர்ணேஸ்வரர்-அன்னபூர்ணேஸ்வரிக்கு தீர்த்தவாரியும் நடைபெற்றது. இவ்வாறு கோலாகலமாக நடைபெற்று வந்த இந்த விழா நேற்று முன்தினம் திருக்கல்யாணத்துடன் நிறைவு பெற்றது. நேற்று காவிரி மகாபுஷ்கர விழாவின் விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வள்ளலார் கோவிலில் இருந்து மேள-தாளத்துடன் எடுத்துவரப்பட்ட அஸ்திர தேவர்களுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து இரவு காவிரி அம்மன் சன்னதியில் வேத பாராயணம் முழங்க காவிரி மகாபுஷ்கர விழா கொடியை இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அந்த கொடியை காவிரி அம்மன் பாதத்தில் வைத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பூஜைகளை சிவபுரம் வேதசிவாகம பாடசாலை முதல்வர் சாமிநாத சிவாச்சாரியார் மற்றும் குழுவினர் செய்து இருந்தனர். இதில் காவிரி மகாபுஷ்கர விழா குழுவினர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×