search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மின் இழுவை ரெயில் நிலையத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்த போது எடுத்த படம்.
    X
    மின் இழுவை ரெயில் நிலையத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்த போது எடுத்த படம்.

    பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

    விடுமுறை தினத்தையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டதால் மின் இழுவை ரெயில் நிலையத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.
    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் ஆண்டுதோறும் பக்தர்கள் வருகை இருக்கும். தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் வழக்கத்தைவிட 2 மடங்கு பக்தர்கள் பழனிக்கு வருகை தருவார்கள். தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திருவிழா காலங்களில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள்.

    இது தவிர விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் வருகை அதிகமாக காணப்படும். அதன்படி விடுமுறை தினமான நேற்று பழனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கடந்த சில நாட்களாக ரோப்காரில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து படிப்பாதை, யானைப்பாதை மற்றும் மின் இழுவை ரெயில் மூலம் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

    ரோப் கார் இயக்கப்படாததால் மின் இழுவை ரெயில் நிலையத்தில் நேற்று நீண்ட வரிசை காணப்பட்டது. அதே போல் மலைக்கோவில் வெளிப்பிரகாரங்களிலும் தரிசனத்துக்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் 2 மணி நேரம் காத்திருந்தே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    சாமி தரிசனம் முடிந்ததும் மின் இழுவை ரெயில் நிலையத்தில் காத்திருக்காமல் பலர் படிப்பாதை வழியாக கீழே இறங்கினர். இருந்த போதிலும் மலைக்கோவிலின் மேல்தளத்தில் உள்ள மின் இழுவை ரெயில் நிலையத்தில் ஏராளமானோர் அடிவாரம் பகுதிக்கு செல்வதற்காக காத்திருந்தனர். இதே போல் அன்னதான கூடத்திலும் காலை முதலே பக்தர்கள் கூட்டம் இருந்தது.
    Next Story
    ×