search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிரம்மோற்சவ விழாவில் உற்சவர் மலையப்பசாமி பவனி வந்த காட்சி.
    X
    பிரம்மோற்சவ விழாவில் உற்சவர் மலையப்பசாமி பவனி வந்த காட்சி.

    பிரம்மோற்சவ விழா 2-வது நாள்: சிறிய சேஷ வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா

    திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான நேற்று காலை சிறிய சேஷ வாகன வீதிஉலாவும், இரவு ஹம்ச வாகன வீதிஉலாவும் நடந்தது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை சிறிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது. சிறிய சேஷ வாகனத்தில் மலையப்பசாமியை தாங்கியிருப்பது ‘வாசுகி’ என்ற நாகம் ஆகும். ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையில் நாகங்களில் நான் வாசுகியாக இருப்பேன் என்பார். அதை உணர்த்தும் வகையில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் மலையப்பசாமி 5 தலைகளை கொண்ட சிறிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது நான்கு மாடவீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. எனப் பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

    வாகன வீதிஉலாவுக்கு முன்னால் யானைகள், குதிரைகள், காளைகள் அணிவகுத்துச் சென்றன. ஆண், பெண் நடன கலைஞர்கள் கோலாட்டம் ஆடினர். நாட்டுப்புற நடனம் நடந்தது. கேரள செண்டை மேளம் இசைக்கப்பட்டது. சாமி வேடமிட்டு பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.

    வீதிஉலாவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு, முதன்மைப் பாதுகாப்பு அதிகாரி ரவிகிருஷ்ணா, கோவில் துணை அதிகாரி கோதண்டராமாராவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து பிற்பகல் 2 மணியில் இருந்து மாலை 4 மணிவரை உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. இரவு 7 மணியில் இருந்து நள்ளிரவு 1 மணிவரை இலவச தரிசனத்தில் மூலவரை வழிபட கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணிவரை ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு 9 மணியில் இருந்து 11 மணிவரை ஹம்ச வாகன வீதி உலா நடந்தது.

    ‘ஹம்சம்’ என்றால் அன்னப் பறவையை குறிக்கும். அன்னம் தண்ணீர் கலந்த பாலை தனித்தனியாக பிரித்தெடுக்கும் வல்லமை கொண்டது. அதேபோல் நல்லது, கெட்டதை பிரித்துப் பார்த்தும், பாவம் மற்றும் புண்ணியம் செய்தவர்களை அடையாளம் கண்டும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் முறையை விளக்கும் வகையில் சிறப்பு அலங்காரத்தில் மலையப்பசாமி ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை சிம்ம வாகன வீதிஉலாவும், பிற்பகல் 2 மணியில் இருந்து மாலை 4 மணிவரை ஸ்நாபன திருமஞ்சனமும், இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலாவும் நடக்கிறது.
    Next Story
    ×