search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அம்மாமண்டபம் படித்துறை அருகே காவிரி ஆற்றில் புனித நீராட குவிந்த பக்தர்களை படத்தில் காணலாம்.
    X
    அம்மாமண்டபம் படித்துறை அருகே காவிரி ஆற்றில் புனித நீராட குவிந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

    ஸ்ரீரங்கம் காவிரி புஷ்கரம்: பெருமாள் - தாயார் திருக்கல்யாண உற்சவத்துடன் இன்று நிறைவு

    ஸ்ரீரங்கம் காவிரி மகா புஷ்கர விழா பெருமாள்- தாயார் திருக்கல்யாண உற்சவத்துடன் இன்று நிறைவு பெறுகிறது.
    காவிரி மகா புஷ்கர விழா ஸ்ரீரங்கத்தில் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி அம்மா மண்டபம் சாலையில் உள்ள மாமுண்டி கோனார் திடலில் யாகசாலை அமைக்கப்பட்டு அங்கு பல்வேறு பூஜைகள். ஹோமங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பூஜைகளில் பங்கேற்று புனித நீராடி வருகிறார்கள். 10-ம் நாள் விழா வரை சுமார் 2 லட்சம் பக்தர்கள் புனித நீராடியதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் 11-வது நாளான நேற்று காலை 8 மணிக்கு யாகசாலையில் வருண ஹோமமும், 8.30 மணிக்கு கோபூஜையும் நடைபெற்றது. பின்னர் திருமண தடை விலக, தம்பதிகள் ஒற்றுமையுடன் இருக்க சுதர்சன நரசிம்ம இஷ்டி ஹோமம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

    பின்னர் மாலை 6.30 மணியளவில் அம்மாமண்டபம் படித்துறையில் காவிரி தாயாருக்கு மங்கள ஆரத்தி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணி முதல் 8.30 மணிவரை சாந்தி ஹோமம் நடைபெற்றது. நேற்றும் ஏராளமான பக்தர்கள் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் புனித நீராடினர்.

    காவிரி மகா புஷ்கர விழாவின் நிறைவு நாளான இன்று காலை 8 மணிக்கு தசாவதார யாகமும், காலை 11 மணிக்கு மகா பூர்ணாஹூதி, 11.30 மணிக்கு சகல கலச தீர்த்தங்களுடன் கோபுரப்பட்டி ஆதிநாயக பெருமாள், தாயார் காவிரிக்கு புறப்பாடு நடைபெறுகிறது. பின்னர் அம்மாமண்டபம் காவிரியில் மதியம் 12 மணிக்கு புனித நீராடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    மாலை 6 மணிக்கு காவிரி தாய்க்கு மஹா பூரண நட்சத்திர ஆரத்தி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு யாகசாலையில் பெருமாள்- தாயார் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. அத்துடன் காவிரி மகா புஷ்கர விழா நிறைவு பெறுகிறது.
    Next Story
    ×