search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம்
    X

    சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம்

    சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை முரளி மனோகர் ஜோஷி தொடங்கி வைத்தார்.
    திருப்பதி பிரம்மோற்சவத்தின் போது கருட சேவைக்காக இந்து தர்மார்த்த சமிதி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 11 வெண்பட்டு திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச்சென்று ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னை பூக்கடையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து நேற்று காலை தொடங்கியது.

    விசுவ இந்து பரிஷத் மாநில துணைத்தலைவர் கிரிஜா சேஷாத்ரி வரவேற்றார். மாநில தலைவர் தலைவர் நாராயணசாமி முன்னிலை வகித்தார். ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீரங்க ராமானுஜ மகா தேசிகன் சுவாமிகள் அருளாசி வழங்கினார். திருப்பதி தேவஸ்தான முன்னாள் தலைவர் பாப்பி ராஜூ பேசினார்.

    சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய மந்திரி முரளி மனோகர் ஜோஷி எம்.பி. கலந்துகொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    யாத்திரை என்பது நமது தேசத்தின் கலாசாரத்துடன் பின்னி பிணைந்தது. மக்களிடையே நெருக்கத்தை அதிகரித்து, தேசத்தில் ஒற்றுமையை அதிகரிக்க, இதுபோன்ற கலாசார யாத்திரைகளின் பங்களிப்பு அதிகம். ராமாயணத்தில், ஆட்சியாளருக்கும், பொதுமக்களுக்கும் எப்படிப்பட்ட நெருக்கம் இருக்க வேண்டும் என்பதற்கு அருமையான வழிகாட்டுதல்கள் உள்ளன.

    நாம் தர்ம வழியில் நடந்தால், எத்தகைய பலம் வாய்ந்த எதிரியையும் வீழ்த்தி விடலாம் என்பதுதான் ராமாயணம் வழங்கும் நீதி. இன்று மக்கள் நல அரசு என்று குறிப்பிடப்படும் கொள்கைக்கு ராமராஜ்யமே முன்னோடி. இதுபோன்ற நீதிநெறிகள், வாழ்க்கை வழிகாட்டுதல்கள், நமது ஆன்மிக பொக்கிஷங்களில் நிறைந்து கிடக்கின்றன. அவற்றை படித்து உணர்ந்து பின்பற்றினால் வாழ்வாங்கு வாழலாம்.

    நமது தேசம், தர்மத்தின் தேசம். தர்ம உணர்வுகளை கலாசார பாரம்பரியமே நிலைநிறுத்தி வருகிறது. எனவே, கலாசார பாரம்பரியங்களை போற்றி பாதுகாக்க வேண்டும். அதற்கு, திருப்பதி திருக் குடை ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகளும் உதவும். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும். விழி, எழு, லட்சியத்தை நோக்கி முன்னேறு என்று நமது ஆன்மிகம் வழங்கும் அறிவுரையை பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.



    விழாவில் இந்து தர்மார்த்த சமிதி நிர்வாக அறங்காவலர் வேதாந்தம் பேசுகையில், ‘மக்கள் இடையே பக்தியை வளர்க்க இந்த திருக்குடை உற்சவம் நடக்கிறது. நம்மிடம் இருக்கும் பேதங்களை எல்லாம் மறந்து ஆண்டவன் முன்பு அனைவரும் சமம் என்ற எண்ணங்கள் உருவாக வேண்டும்’ என்றார்.

    அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி பேசுகையில், கடந்த 2005-ம் ஆண்டு திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை தொடங்கிய போது, சென்னைக்கு குடிநீர் வரவேண்டும், தமிழகத்துக்கு மழை வரவேண்டும், பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கக்கூடாது என்று வேண்டினோம். அன்று முதல் 13 ஆண்டுகளாக பல அச்சுறுத்தல்கள் வந்த போதும் திருக்குடை உற்சவம் சிறப்பாக நடக்கிறது. திருக்குடை வரும் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு திருக்குடை மீது பூ போடுவார் கள். 5 நாளில் பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்வார் கள். நாங்கள் கொண்டு செல்லும் 11 திருக்குடைகளில் திருச்சானூருக்கு 2-ம், திருமலைக்கு 9-ம் வழங்குவோம் என்றார்.

    திருக்குடை ஊர்வலம் சென்ன கேசவ பெருமாள் கோவிலில் தொடங்கி, என்.எஸ்.சி. போஸ் ரோடு, கோவிந்தப்ப நாயக்கன் தெரு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து 6 மணிக்கு கவுனி தாண்டியது. அயனாவரம் காசி விஸ்வநாதர் கோவிலை திருக்குடை ஊர்வலம் இரவு சென்றடைந்தது. வழி நெடுகிலும் ஏராளமான மக்கள் திரண்டு நின்று பூக்களை தூவி திருக்குடையை வரவேற்றனர். தொடர்ந்து செல்லும் ஊர்வலத்தினர் 26-ந் தேதி திருமலையில் அதிகாரிகளிடம் திருக்குடைகளை வழங்குகின்றனர்.

    திருப்பதி திருக்குடை ஊர்வலத்தையொட்டி முஸ்லிம் லீக் சார்பில் சென்னை சென்டிரல் அருகே அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு முஸ்லிம் லீக் துறைமுகம் தொகுதி செயலாளர் மற்றும் விழா குழு தலைவர் எம்.பிரகாஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். அப்போது மாநில பொருளாளர் டி.முகமதுஅலி, நிர்வாகிகள் எம்.எச்.சித்திக், ஒய்.யூசுப் உள்பட பலர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×