search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நவராத்திரியையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பிரகாரங்கள் மின்னொளியில் ஜொலிப்பதை படத்தில் காணலாம்.
    X
    நவராத்திரியையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பிரகாரங்கள் மின்னொளியில் ஜொலிப்பதை படத்தில் காணலாம்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா இன்று தொடக்கம்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடல் காண்கிறோம் என்ற தலைப்பில் நவராத்திரி விழா இன்று தொடங்குகிறது. இதையொட்டி மீனாட்சி அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, புரட்டாசி(நவராத்திரி விழா), ஐப்பசி ஆகிய மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. இந்தாண்டு புரட்டாசி மாத நவராத்திரி விழா “ஆடல் காண்கிறோம்” என்ற தலைப்பில் இன்று (வியாழக் கிழமை) தொடங்கி 29-ந் தேதி வரை நடக்கிறது.

    இதையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் மீனாட்சி அம்மன் தினமும் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். முதல் நாளான இன்று ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 2-வது நாள் ஊஞ்சல் அலங்காரம், 3-வது நாள் ஞானப்பால் அருளியது, 4-வது நாள் விநாயகர் அவதரித்தல், 5-வது நாள் கோலாட்டம், 6-வது நாள் திருக்கல்யாண கோலம், 7-வது நாள் குண்டோதரருக்கு அன்னமிடல், 8-வது நாள் மகிஷாசுரமர்த்தினி, 9-வது நாள் சிவபூஜை அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் காட்சி அளிப்பார்.

    நவராத்திரி உற்சவ விழாவையொட்டி சிவபெருமானின் திருவிளையாடல்களை விளக்கும் வண்ணம் “ஆடல் காண்கிறோம்” என்ற தலைப்பில் கொலு மண்டபத்தில் 21 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அரங்கிலும் சிவனின் திருவிளையாடல் கதைகள் சிலைகள், பொம்மைகள் மூலம் விளக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் நரியை பரியாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது, நாரைக்கு முக்தி கொடுத்தது, சங்க பலகை அளித்தது, கால் மாறி ஆடிய படலம், குண்டோதரருக்கு அன்னமிடல், தாகம் தீர்த்தல், மீனாட்சி பிள்ளை தமிழ், மீனாட்சி ஊஞ்சல் உள்ளிட்ட பல்வேறு திருவிளையாடல் புராணங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் பொற்றாமரை குளம், கோபுரங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

    இந்த விழா நடைபெறும் ஒன்பது நாட்களும் மாலை 6 மணி முதல் மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.

    எனவே பூஜை நேரத்தில் பக்தர்களுக்கு தேங்காய் உடைத்தல், அர்ச்சனைகள் போன்றவை மூலஸ்தான அம்மனுக்கு நடத்தப்பட மாட்டாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும் மீனாட்சி அம்மனுக்கு தான் தேங்காய் உடைப்பு, அர்ச்சனைகள் செய்யப்படும்.

    அதே போன்று திருவிழா நடைபெறும் நாட்களில் உபயதிருக்கல்யாணம், தங்கரதம் உலா ஆகியவை பதிவு செய்து நடத்த இயலாது. விழாவிற்கான ஏற்பாடுகளை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×