search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காவிரி ஆற்றின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள மேடை மின்னொளியில் ஜொலித்த காட்சி.
    X
    காவிரி ஆற்றின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள மேடை மின்னொளியில் ஜொலித்த காட்சி.

    பவானி கூடுதுறையில் காவிரி புஷ்கர விழா தொடங்கியது

    பவானி கூடுதுறையில் காவிரி புஷ்கர விழா தொடங்கியது. யானை, குதிரைகளுடன் செண்டை மேளம் முழங்க ஊர்வலம் நடந்தது.
    வரலாற்று சிறப்பு மிக்க காவிரி மகா புஷ்கர விழா ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் 4 நாட்கள் நடைபெறுகிறது.

    அதன்படி பவானியில் நேற்று காலை 6.30 மணிஅளவில் கணபதி ஹோமத்துடன் புஷ்கர விழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து கொடியேற்றத்துக்காக பவானி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள எல்லையம்மன் கோவிலில் இருந்து யானை, பசு, குதிரை ஆகிய விலங்குகளை தெய்வங்களாக பாவித்து அவைகளுக்கு பூரண மரியாதை செய்யப்பட்டது. பின்னர் பவானி கூடுதுறை காவிரி ஆற்றுக்கு செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ரத்தனகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள், சச்சிதானந்தா சுவாமிகள், காளஸ்வரா நந்தா சுவாமிகள், மன்னார்குடி செண்டை அலங்கார ஜீயர் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். ஊர்வலம் காவிரி ஆற்றங்கரையை அடைந்ததும் அங்கு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து காவிரி ஆற்றில் மகா புஷ்கர யாகமும், அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. பின்னர் அகில பாரத துறவிகள், காவிரி அன்னைக்கு தீபாராதனை காட்டி தண்ணீரில் மூழ்கி மரியாதை செலுத்தினார்கள். அதன்பின்னர் ஏராளமான பக்தர்கள் ஆற்றில் புனித நீராடினார்கள்.

    காவிரி ஆற்றின் நடுவில் 100 அடி நீளத்துக்கு மேடை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த மேடை நேற்று இரவு மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இந்த மேடையில் மடாதிபதிகள் காவிரி தாய்க்கு பரிகார பூஜை, அபிஷேகம் செய்தனர். பின்னர் படித்துறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கையில் அகல் விளக்கு ஏந்தி காவிரி தாயை வணங்கினார்கள்.
    Next Story
    ×