search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நவராத்திரி வழிபாடு தோன்றியது எப்படி?
    X

    நவராத்திரி வழிபாடு தோன்றியது எப்படி?

    நாளை (21-ந்தேதி) தொடங்கி 30-ந்தேதி வரை நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் அம்பிகையை விக்கிரக ரூபத்திலோ, படங்களிலோ பிரதிஷ்டை செய்து முறைப்படி பூஜை செய்யலாம்.
    முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் தெய்வங்களிடம் வரம் பல பெற்று, தங்களை அழிக்க யாருமில்லை என்று தலைக்கனம் பிடித்துத் திரிந்தார்கள். அவர்களது ஆட்சிக்காலத்தில் மக்கள் மிகவும் அல்லலுற்றனர். தவசீலர்களால் வேள்விகளைச் செய்ய முடியவில்லை. அனைவரும் இந்த இரு அரக்கர்களையும் கண்டு அஞ்சி நடுங்கினர். இனியும் இப்படியே போனால் மக்கள் தாங்கமாட்டார்கள் என்று எண்ணிய தேவர்கள், விஷ்ணுவிடமும், சிவனிடமும் முறையிட்டனர். அவர்கள் பிரம்மனையும் சேர்த்துக் கொண்டு, என்ன செய்வது என ஆலோசித்தனர்.

    ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது வரம். அதனால் தேவர்களும் மூவர்களும் அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர்.மக்களின் துன்பம் கண்டு சகியாத அவளும் மிக அழகான மங்கையின் வடிவம் கொண்டு பூமிக்கு வந்தாள். அவளுடைய அழகுக்கு யாரும் நிகர் இல்லை என விளங்கினாள்.

    பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்துவிட்டு, சிலை என ஆனார்கள். அதே போல இந்திரனும் திக்குப் பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அளித்துவிட்டு சிலையாக நின்றார்கள். அப்படி அவர்கள் நின்றதால்தான் அதைக் குறிக்கும் வகையில் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது. அன்னை அந்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் தாங்கி, போர்க்கோலம் பூண்டு சும்ப, நிசும்பர்களையும், அவர்களது படைத்தளபதிகளான மது, கைடபன், ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள்.

    அவள் வெற்றி பெற்ற தினமே விஜயதசமி. ஒன்பது நாட்கள் போர் விடாமல் நடந்தது. அதனாலேயே நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். ஏன் ராத்திரி? ஒன்பது பகலில் கொண்டாடலாம் என்று கேள்வி எழுவது சகஜம். அந்நாட்களில் போருக்கு என்று சில சட்ட திட்டங்கள் உண்டு. மாலை நேரம் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு போர் புரிய மாட்டார்கள். படைகள் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளும்.

    அப்போது அன்னையின் படைக்கு ஊக்கம் கொடுக்கவும், மறுநாளைய போரில் உற்சாகமாகப் போரிடவும் வேண்டி அன்னையைக் குறித்த ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இது ஒன்பது இரவுகள் நடந்தது. அதனாலேயே நாம் நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.

    9 நாட்கள் நிறைவடைந்து 10-வது நாளான விஜயதசமி அன்று அம்பிகையானவள், ஆக்ரோஷத்துடன் அதர்மங்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டி பக்தர்களுக்கு அருள் பாலிப்பதையே இந்த 10 நாட்களின் விரதம் மற்றும் பூஜை குறிக்கிறது.



    இந்த ஆண்டு நாளை (21-ந்தேதி) தொடங்கி 30-ந்தேதி வரை நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் அம்பிகையை விக்கிரக ரூபத்திலோ, படங்களிலோ பிரதிஷ்டை செய்து முறைப்படி பூஜை செய்யலாம்.

    ஒன்பது நாட்களிலும் தேவிபாகவத பாராயணம் செய்யலாம். சுமங்கலிகளையும், கன்னிப் பெண்களையும் இல்லத்திற்கு வரவழைத்து, அவர்களை தேவியாகவே கருதி தாம்பூலம், பழங்கள், வஸ்திரங்கள், வீட்டு உபயோகத்திற்கு தேவையான பொருட்களை அவரவர் வசதிக்கேற்ப அளித்து மகிழலாம்.

    இந்த நாட்களில் கொண்டைக்கடலை, கடலைப் பருப்பு உள்ளிட்ட பல்வேறு பயறு வகைகளுடன் விதவிதமான நைவேத்யங்களை நாளுக்கு ஒன்றாக படைத்து வழிபட வேண்டும். பராசக்தியின் பாடல்களை வீடுகளிலும், கோவில்களிலும் பாடி அன்னையை ஆராதித்தல் சிறப்பும், மேன்மையும் தரும்.

    அம்பிகையை - சக்தி சொரூபத்தை நினைத்து தியானிப்பதால், சகல பாவங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். நவராத்திரி நாட்களில் குடும்பத்தினர் அனைவரும் அதிகாலையிலேயே நீராடி கூட்டுபிரார்த்தனை செய்யுங்கள்.

    * பூஜையறையைச் சுத்தம் செய்து, கொலு மேடை, பூஜையறையில் “லட்சுமித்தாயே! உன்னருளால் உலக உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்று பிரார்த்தித்து ஐந்துமுகம் விளக்கேற்றி, சாம்பிராணி, பத்தி ஏற்றி வையுங்கள். இதனால் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும்.

    * குழந்தைகளுக்கு தெய்வீக விஷயங்களைக் கற்றுக் கொடுங்கள். அபிராமி அந்தாதியில் ஒரு பாடலை மனப்பாடம் செய்யச் சொல்லுங்கள்.

    * கொலு பார்க்க வரும் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், மலர்ச்சரம் கொடுத்து வழியனுப்புங்கள். . இதனால் நம் இல்லம் செழிக்கும்.

    * பசுவிற்கு அருகம்புல், அகத்திக்கீரை கொடுத்து, மும்முறை வலம் வந்து வழிபட்டால் மூன்று தேவியை வழிபட்ட பலன்.

    * ஆதரவற்ற குழந்தைகளுக்கு, முதியோர்களுக்கு உதவி செய்யுங்கள். இதனால் அம்மன் மனம் குளிர்ந்து வேண்ம் வரம் தருவாள்.

    * அம்மன் கோயில்களில் விளக்கேற்றுங்கள். மாலையில் விளக்குபூஜை நடத்துங்கள். கன்னிப் பெண்கள் துர்க்கை சந்நிதியில் விளக்கேற்றி வழிபட்டால் விரைவில் திருமணம்.ஒரு நாள் கும்பிட்டா...ஒன்பது நாள் கும்பிட்ட பலன்: நவராத்திரி ஒன்பது நாட்களிலும் பூஜை நடத்த இயலாவிட்டால் அஷ்டமி திதிவரும் தினத்தன்று மட்டுமாவது அவசியம் பூஜிக்க வேண்டும்.
    Next Story
    ×