search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராமேசுவரம் கோவிலில் நவராத்திரி திருவிழா இன்று காப்பு கட்டுதலுடன் தொடக்கம்
    X

    ராமேசுவரம் கோவிலில் நவராத்திரி திருவிழா இன்று காப்பு கட்டுதலுடன் தொடக்கம்

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நவராத்திரி திருவிழா இன்று காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நவராத்திரி திருவிழா இன்று காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது. இதையொட்டி அம்மன் சன்னதி பிரகாரத்தில் அலங்காரம் செய்யப்பட்டு உள்ள கொலு மண்டபத்திற்கு அம்பாள் சிலை கொண்டு வந்து வைக்கப்பட்டு இன்று இரவு 7 மணி அளவில் அம்பாள் சிலைக்கு காப்பு கட்டப்பட்டு சிறப்பு மகா தீப ஆராதனை பூஜை நடைபெறும்.

    நாளை இரவு அம்பாள் அன்னபூரணி அலங்காரத்திலும், தொடர்ந்து ஒவ்வொரு நாள் இரவும் அம்பாள் மகாலட்சுமி, சிவதுர்க்கை, சரசுவதி, கொளி சிவபூஜை, சாரதாம்பிகை, கஜலட்சுமி, மகிஷாசுர மர்த்தினி, துர்கா-லட்சுமி ஆகிய அலங்காரத்திலும் கொலு மண்டபத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பதோடு தினமும் சிறப்பு தீப ஆராதனை பூஜைகளும் நடைபெறும்.

    மேலும் நவராத்திரி திருவிழாவின் இந்த 9 நாட்கள் மட்டும் அம்பாளின் அபூர்வ தங்க ஸ்ரீசக்கரம் கொலு மண்டபத்தில் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு தீப ஆராதனை பூஜைகளும் நடைபெறும். நவராத்திரி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சாமி அம்பாள் சூரனை வதம் செய்து அம்பு எய்தல் நிகழ்ச்சியானது வருகிற 30-ந் தேதி நடைபெறுகின்றது.

    அன்று மாலை 4.30 மணியளவில் கோவில் நடை சாத்தப்பட்டு இரவு 8.30 மணிக்கு திறக்கப்பட்டு பள்ளியறை பூஜை நடைபெற்று கோவில் நடை அடைக்கப்படும். நவராத்திரி திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி தலைமையில் உதவி கோட்டபொறியாளர் மயில்வாகணன், சூப்பிரண்டு ககாரின் ராஜ், பேஷ்கார்கள் அண்ணாதுரை, செல்லம், கலைச்செல்வன், கண்ணன் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு முதல் கொலு பொம்மைகள் வைப்பதற்காக 7 படிக்கட்டுகளுடன் கூடிய மரத்தால் ஆன மேடைகள் புதிதாக செய்யப்பட்டுள்ளன.
    Next Story
    ×