search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கத்தில் காவிரி மகா புஷ்கர விழாவில் தெப்பத்தில் அகல் விளக்கேற்றி ஆற்றில் விட்டு வழிபாடு செய்த காட்சி.
    X
    ஸ்ரீரங்கத்தில் காவிரி மகா புஷ்கர விழாவில் தெப்பத்தில் அகல் விளக்கேற்றி ஆற்றில் விட்டு வழிபாடு செய்த காட்சி.

    ஸ்ரீரங்கம் காவிரி மகா புஷ்கர விழா 7-ம் நாள்: தெப்பத்தில் அகல் விளக்கேற்றி ஆற்றில் விட்டு வழிபாடு

    ஸ்ரீரங்கம் காவிரி மகா புஷ்கர விழாவின் 7-ம் நாளான நேற்று அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அகல் விளக்கேற்றி ஆற்றில் விட்டு வழிபாடு செய்தனர்.
    ஸ்ரீரங்கத்தில் காவிரி மகா புஷ்கர விழா கடந்த 12-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 7-வது நாளான நேற்று காலை 8 மணிக்கு யாகசாலையில் வருண ஹோமமும், 8.30 மணிக்கு கோபூஜையும் நடைபெற்றது. பின்னர் தொழில், விவசாயம் சிறக்க, தனவிருத்திக்காகவும் ஸ்ரீயாகம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில் ஆழிமலைக் கண்ணா பாசுரம், தொடர் பாராயணமும் வேத, திவ்ய பிரபந்த, இதிஹாச, புராண படலமும் நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு பூர்ணாஹுதி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் மாலை 6.30 மணியளவில் அம்மாமண்டபம் படித்துறையில் காவிரி தாயாருக்கு மங்கல ஆரத்தி மற்றும் மகா தீப ஆராதனை நடைபெற்றது. அப்போது அலங்கரிக்கப்பட்ட சிறிய தெப்பத்தில் பெரிய அகல் விளக்கை வைத்து, அதில் தீபம் ஏற்றி பூக்களை தூவி ஆற்றில் விட்டு வழிபட்டனர். இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை சாந்தி ஹோமம் நடைபெற்றது. நேற்றும் ஏராளமான பக்தர்கள் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் புனித நீராடினர்.

    இந்நிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) புரட்டாசி மாத மகாளய அமாவாசை ஆகும். இன்று நீர்நிலைகளில் புனித நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். இதையொட்டி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவிரி மகா புஷ்கரம் மற்றும் மகாளய அமாவாசை ஆகியவற்றால் இன்று பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பு பணிக்காக 300-க்கும் மேற்பட்ட போலீசார் அம்மாமண்டபத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் காவிரி புஷ்கர விழாவிற்காக வரும் பக்தர்கள், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்கிறார்கள். இது மட்டுமின்றி கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வருகின்றனர். இக்கோவிலில் ரெங்கநாதரை தரிசிக்க ரூ.250, ரூ.50 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, அதற்காக தனித்தனி வரிசைகள் உள்ளன. இது தவிர இலவச தரிசன வழியும் உண்டு. இந்த வரிசைகளில் எந்த வரிசையில் சென்றாலும் கடைசியில் ரெங்கநாதரை தரிசிக்கும் இடத்தில் ஒன்று சேர வேண்டும்.
    Next Story
    ×