search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நவராத்திரி பூஜைக்காக பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சாமி சிலைகளை வழியனுப்பும் விழா
    X

    நவராத்திரி பூஜைக்காக பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சாமி சிலைகளை வழியனுப்பும் விழா

    திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜையில் பங்கேற்க பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சாமி சிலைகளை வழியனுப்பும் விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் நவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்று வந்தது. 1840-ம் ஆண்டு அப்போதைய மன்னர் இந்த விழாவை திருவனந்தபுரத்திற்கு மாற்றினார். அதன்பின்பு பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சாமி சிலைகளை நவராத்திரி விழாவுக்காக திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைக்கும் விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

    குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் மற்றும் தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி சிலைகள் பத்மநாபபுரம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து கேரளாவுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன.

    இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 21-ந் தேதி திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது. அங்கு நடைபெறும் பூஜைகளுக்காக சாமி சிலைகள் நேற்று பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து கேரளாவுக்கு ஊர்வலமாக புறப்பட்டன. அவற்றை வழியனுப்பும் விழா விமரிசையாக நடந்தது.

    இதையொட்டி நேற்று முன்தினம் சுசீந்திரம் கோவிலில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மன் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலையில் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் சிலைகள் பத்மநாபபுரம் அரண்மனைக்கு பல்லக்கில் கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி அரண்மனை உப்பரிகை மாளிகையில் நடந்தது.

    நிகழ்ச்சியில், தொல்லியல்துறை இயக்குனர் ரஜிகுமார் உடைவாளை எடுத்து கேரள தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், தொல்லியல் துறை மந்திரி கடனப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோரிடம் அளித்தார். அவர்கள் உடைவாளை குமரி மாவட்ட திருக்கோவில் இணை ஆணையர் அன்புமணியிடம் கொடுத்தனர். அவர் அதனை அரண்மனை ஊழியர் சுதர்சன குமாரிடம் கொடுத்தார். இதில் இரு மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். சுதர்சன குமார் உடைவாளுடன் ஊர்வலத்தின் முன்பாக சென்றார்.

    தொடர்ந்து அந்த உடைவாள் அரண்மனை அருகே உள்ள சரஸ்வதியம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பூஜைகள் செய்த பின்பு, கோவிலில் இருந்த தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் சிலை யானை மீது எடுத்து வைக்கப்பட்டது.

    பின்னர், தமிழக - கேரள போலீசாரின் பேண்டு வாத்திய அணிவகுப்புடன் ஊர்வலம் புறப்பட தொடங்கியது. அப்போது, அரண்மனை நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை, பிடிபணம் காணிக்கை போன்றவை அளிக்கப்பட்டன.



    இந்த நிகழ்ச்சியில், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கேரள தேவசம்போர்டு தலைவர் பிரையார் கோபாலகிருஷ்ணன், மலையாள சினிமா நடிகரும், எம்.பி.யுமான சுரேஷ்கோபி, விஜயகுமார் எம்.பி., மனோதங்கராஜ் எம்.எல்.ஏ., பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், துணைத்தலைவர் ரமேஷ் மற்றும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    உடைவாளுடன் ஊர்வலம் புறப்பட்டதை தொடர்ந்து யானை மீது சரஸ்வதி அம்மன் சிலையும், முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகப்பெருமான் சிலைகள் பல்லக்குகளிலும் ஊர்வலமாக புறப்பட்டன.

    ஊர்வலம் கொல்லக்குடி முக்கு, மேட்டுக்கடை வழியாக கேரளபுரம் அதிசய விநாயகர், மாதேவர் கோவிலை சென்றடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. சிறிது நேரத்தில் ஊர்வலம் மீண்டும் புறப்பட்டது. வழிநெடுகிலும் சாமி சிலைகளுக்கு பக்தர்கள் மலர்தூவி, சிறப்பு தீபாராதனை காட்டி வழியனுப்பி வைத்தனர். நேற்று திருவிதாங்கோடு, அழகியமண்டபம், மார்த்தாண்டம் வழியாக குழித்துறை மகாதேவர் கோவிலை சென்றடைந்தது.

    அங்கிருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மீண்டும் புறப்படும் ஊர்வலமானது, களியக்காவிளையை சென்றடையும். அங்கு கேரள பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இன்று இரவு நெய்யாற்றின்கரை கிருஷ்ணசாமி கோவிலில் சாமி சிலைகள் வைக்கப்படுகின்றன.

    நாளை (புதன்கிழமை) காலையில் நெய்யாற்றின்கரையில் இருந்து சாமி சிலைகள் புறப்பட்டு மாலையில் திருவனந்தபுரம் கிழக்கு கோட்டை சென்றடைகிறது. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் உள்ள நவராத்திரி மண்டபத்தில் சரஸ்வதி தேவி சிலையை பூஜைக்காக அமர்த்துவர். வேளிமலை முருகப்பெருமான் சிலையை ஆரியசாலையில் உள்ள தேவி கோவிலிலும், முன்னுதித்த நங்கை அம்மன் சிலையை செந்திட்டை பகவதி அம்மன் கோவிலிலும் வைத்து பூஜைகள் நடைபெறும்.

    21-ந் தேதி நவராத்திரி பூஜைகள் தொடங்கி 9 நாட்கள் நடைபெறும். பூஜைகள் முடிந்த பின்பு சாமி சிலைகள் குமரி மாவட்டத்திற்கு மீண்டும் கொண்டு வரப்படுவது வழக்கம்.

    ஊர்வலத்தையொட்டி குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை, திருவனந்தபுரம் சூப்பிரண்டு மது தலைமையில் தமிழக மற்றும் கேரள மாநில போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×