search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலை, ஊர்வலமாக புறப்பட்ட போது எடுத்த படம். (முன்னுதித்த நங்கை அம்மன்.)
    X
    சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலை, ஊர்வலமாக புறப்பட்ட போது எடுத்த படம். (முன்னுதித்த நங்கை அம்மன்.)

    நவராத்திரி பூஜைக்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலை ஊர்வலமாக புறப்பட்டது

    திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலை ஊர்வலமாக புறப்பட்டது.
    திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. அதன்பிறகு 1840-ம் ஆண்டில் சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில் இந்த விழா திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.

    இந்த விழாவில், குமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் மற்றும் பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் பங்கேற்பது வழக்கம். இதற்காக இந்த சிலைகள் திருவனந்தபுரத்திற்கு யானை, பல்லக்கு மீது ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நவராத்திரி விழாவில் வைத்து பூஜைகள் செய்வார்கள்.

    அதன்படி இந்த ஆண்டிற்காக நவராத்திரி விழா வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது. அதனை முன்னிட்டு சுசீந்திரத்தில் உள்ள முன்னுதித்த நங்கை அம்மன் புறப்படும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நேற்று காலை 8.10 மணிக்கு பல்லக்கு வாகனத்தில் முன்னுதித்த நங்கை அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.

    அம்மன் கோவிலில் இருந்து வெளியே எழுந்தருளிய போது தமிழக மற்றும் கேரள போலீசார் அணிவகுத்து நின்று இசைவாத்தியங்கள் முழங்க துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கேரள நடிகர் சுரேஷ்கோபி எம்.பி., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அதன்பின்னர் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் முன்பு முன்னுதித்த நங்கை அம்மனுக்கு கோவில் சார்பாக திருக்கண் சார்த்தி வழிபாடு நடந்தது. பின்னர் நான்கு ரதவீதிகளிலும் அம்மன் சிலை உலா வந்தது. அம்மன் பல்லக்குடன் சுரேஷ்கோபி எம்.பி. உள்பட பலர் உடன் சென்றனர்.

    அப்போது, பக்தர்கள் தங்களின் வீடுகளின் முன் விளக்கேற்றியும், திருக்கண்சாத்தியும், மலர் தூவியும் அம்மனை வழிபட்டு வழியனுப்பினர். அம்மன் ஊர்வலத்தின் முன் பெண்கள் முத்துக்குடை ஏந்தியும், கையில் திருவிளக்கேற்றியும், சிவாச்சாரியார்கள் பாடல் பாடியும், சிலம்பாட்டம், சிறுவர்களின் நடனம் ஆகியவற்றுடன் அம்மன் சிலை ஊர்வலமாக புறப்பட்டது. ஊர்வலம் ஆசிரமம், கோட்டார், பார்வதிபுரம், சுங்கான்கடை, வில்லுக்குறி வழியாக நேற்று இரவு பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலை சென்றடைந்தது.
    Next Story
    ×