search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சரநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த போது எடுத்த படம்.
    X
    சரநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த போது எடுத்த படம்.

    பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில் பகுதி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

    புரட்டாசி மாத பிறப்பையொட்டி பண்ருட்டி மற்றும் காட்டுமன்னார்கோவில் பகுதி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
    பண்ருட்டி திருவதிகையில் பிரசித்தி பெற்ற சரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் முழுவதும் திருப்பதி ஏழுமலை யானுக்கு நடைபெறும் அனைத்து சேவைகளும் இங்கு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு புரட்டாசி மாதம் பிறந்ததை தொடர்ந்து முதல் நாளான நேற்று கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இதையொட்டி காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுப்ரபாதம், கோ பூஜை, தோமாலை சேவை, திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. இதையடுத்து மூலவர் சரநாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் சரநாராயணபெருமாள் திருப்பதி ஏழுமலையான் அலங்காரத்திலும், தாயார் வெள்ளங்கி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து உற்சவர் சரநாராயணபெருமாள் தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் அனைவருக்கும் கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் கோவில் பட்டாச்சாரியார் திரிபுர ராமன் தலைமையில் செய்யப்பட்டிருந்தது.

    இதேபோல் காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத பிறப்பையொட்டி நேற்று சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. குப்பங்குழி வீற்றிருந்த பெருமாள் கோவில் உள்பட பல்வேறு பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×