search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஐப்பசி மாதம் பிறந்தவர்கள் அஷ்ட லட்சுமி யோகம் பெற்றவர்கள்
    X

    ஐப்பசி மாதம் பிறந்தவர்கள் அஷ்ட லட்சுமி யோகம் பெற்றவர்கள்

    ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகளே என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
    சுக்ரனைக் 'களத்திரகாரகன்' என்றும் 'சங்கீத போஜனகாரன்' என்றும், 'கலைஞன்' என்றும், 'கவிதரும் கிரகம்' என்றும் வர்ணிப்பது வழக்கம். அசுர குரு சுக்ரன் அள்ளிக் கொடுப்பதில் நிகரில்லாதவர். அவருக்குச் சொந்த வீடாக விளங்கும் துலாம் ராசியில், ஆதவன் சஞ்சரிக்கும் மாதமான ஐப்பசியில் பிறந்தவர்கள் அளவு கடந்த ஆற்றல் பெற்றவர்கள் மட்டுமல்ல, அதிர்ஷ்டமும் வாய்த்தவர்களாவர்.

    நீங்கள் ஐப்பசி மாதம் பிறந்தவராக இருந்தால் அஷ்ட லட்சுமியின் அருளுக்குப் பாத்திரமானவர்களாக இருப்பீர்கள். காரணம் சுக்ரபலம் கூடிய துலாம் ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் அமைப்புள்ள மாதம் தான் ஐப்பசி மாதம். எட்டுவகை லட்சுமியின் கடைக்கண் பார்வை மட்டுமல்லாமல் முழுக்கண்பார்வையும் பதியும் யோகம் உண்டு.

    ஆடை, அணிகலன்கள் அணிவதில் அதிக விருப்பம் கொண்டவர்கள். அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்று கூடச் சொல்லலாம்.

    நீதியையும்,நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். பார்ப்பதற்கு பசுபோல் இருந்தாலும் கோபம் வரும் பொழுது கொந்தளித்துப் பின் விளைவைச் சிந்திக்காமல் பேசி விடுவீர்கள்.

    இவர்களுக்கு நிரந்தரப் பகை என்பதுமில்லை. ஒருவரோடு சிநேகம் வைத்துக்கொண்டால் 'ஓகோ' என்று புகழ்ந்து சொல்வார்கள். உணவு உட்கொள்வதில் அதிக விருப்பம் உங்களுக்கு உண்டு. குறிப்பாக விதவிதமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். வித்தியாசமான சீதோஷ்ண நிலைகளில் வசிக்க வேண்டும் போன்ற எண்ணங்கள் இளம் வயதிலேயே உருவாகும்.

    கவர்ச்சிகரமான தோற்றத்திற்குச் சொந்தக்காரர்களாக விளங்கும் இவர்கள், பஞ்சாயத்துக்களில் தலைமைப் பொறுப்பேற்றால் பக்குவமாகப் பேசி நீதியை நிலைநாட்டுவார்கள். இம்மாதத்தில் முதல் மூன்று நாட்களிலும், கடைசி மூன்று நாட்களிலும் கார்த்திகை 1-ந் தேதியும் ஆற்றில் நீராடி அருகில் உள்ள ஆலயத்தில் வழிபாடு செய்தால் நேற்றுவரை செய்த பாவம் தீரும். நிகழ்காலத் தேவைகளும் பூர்த்தியாகும் என்பர் சான்றோர்.



    ஐப்பசியில் காவேரிப்புராணம், நதியின் கதை கேட்பதன் மூலம் விதியின் அமைப்பு மாறும் என்பது நம்பிக்கை. அங்ஙனம் விதியை மாற்றும் மாதமான ஐப்பசியில்

    புண்ணிய காரியங்களைச் செய்தால் எண்ணிய காரியங்கள் எல்லாம் நடைபெறும். இத்தனை சிறப்பு மிகுந்த புண்ணிய மாதமாக விளங்கும் இம்மாதத்தில் பிறந்தவர்கள் தெய்வ பக்தி மிகுந்தவர்களாக இருப்பதில் ஐயமில்லை. அதுமட்டுமல்லாமல் தேசபக்தியும் உங்களுக்கு இருக்கும்.

    பண்டிகைகளில் சிறப்பான தீபாவளியும், பார்போற்றும் கந்தனுக்கு எடுக்கும் சஷ்டி விழாவும் இந்த ஐப்பசி மாதத்தில் வருவதால் 'கண்ணனையும், கந்தனையும் விடாது வழிபட்டு வந்தால், மன்னரைப் போல் வாழும் வாழ்க்கை அமையும்' என்றார்கள்.

    இவர்கள் தங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள எடுக்கும் துறையாக கலைத்துறை, எழுத்துத் துறை, ஆடை, ஆபரண, அலங்காரப் பொருள் விற்பனை நிலையம், ரியல் எஸ்டேட் மற்றும் இனிப்புப் பொருள் விற்பனை நிலையம் மற்றும் நெல் பயிரிடுதல், வாகனம் வாங்கி விற்றல் போன்ற தொழில் வளத்தால் வளர்ச்சியைக் கூட்டிக் கொள்வர்.

    பொதுவாகவே உடலுக்கும், உள்ளத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள் சிறு உபாதைகளைக் கூட பொறுத்துக் கொள்ள மாட்டீர்கள். 'வரும் முன் காப்போம்' திட்டம் உங்களுக்குப் பொருத்தமானதாகும். கார்த்திகை, சித்திரை, ஆடி ஆகிய மாதங் களில் பிறந்தவர்களை வாழ்க்கைத் துணையாக ஏற்றால் வீட்டிற்கு மிகுந்த யோகமாகும்.

    எட்டுவகை லட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டும் வகையறிந்து கொண்டவர்கள் ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள். எனவே, அவர்களோடு நட்பு வைத்துக்கொள்ள பலரும் விரும்புவர். மொத்தத்தில் ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகளே என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

    மேலும் ஐப்பசியில் பிறந்தவர்கள் அன்றாட வாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொள்ள, கண்ணன் வெண்ணெய் உண்ணும் படம் அல்லது சிறிய உருவ பொம்மைகளை வீட்டில் வைத்து வழிபடலாம். கண்ணனை இவர்கள் வழிபட்டால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். கந்த சஷ்டி விழாக்காலத்தில் ஆறுநாட்களும் முடிந்தவரை விரதமிருந்து முத்தமிழால் முருகன் புகழ்பாடி செந்தூர் வழிபாட்டையும் மேற்கொண்டால் எந்தநாளும் இவர்களுக்கு இனிய நாளாக மாறும்.
    Next Story
    ×