search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கொங்குநாட்டு குரு பரிகார தலம்
    X

    கொங்குநாட்டு குரு பரிகார தலம்

    பரிகாரம் பெற வேண்டிய ராசிக்காரர்கள் கொங்கு நாட்டு குரு பரிகார தலமாக விளங்கும் கோவையை அடுத்த காலகாலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து பலன் பெறலாம்.
    நவக்கிரகங்களில் குரு ஒன்று தான் பார்வையாலே பலன் அதிகம் கொடுக்கும் கிரகமாகும். அதனால் தான் குரு பார்க்க கோடி நன்மை என்று கூறினார்கள். அத்தகைய சிறப்பு பெற்ற குருபகவான் இன்று (சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு மேல் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்கிறார். குரு பெயர்ச்சியையொட்டி ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிதாரர்கள் பரிகாரம் பெற வேண்டியது அவசியம். இத்தகைய ராசிதாரர்கள் கொங்கு நாட்டு குரு பரிகார தலமாக விளங்கும் கோவையை அடுத்த காலகாலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து பலன் பெறலாம்.

    இந்த திருத்தலம் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். இந்த கோவிலில் மிகப்பெரிய தட்சிணாமூர்த்தி சிலை இருக்கிறது. இதன் மேல் லிங்கம் இருப்பது தனி சிறப்பு. இங்குள்ள மூலவர் மணல், நுரையால் செய்யப்பட்டவர் என்பதால் இந்த தலத்தில் தயிர், நெய், பஞ்சாமிர்த அபிஷேகம் கிடையாது. சிவனுக்கும், அம்பிகைக்கும் இடையே முருகன் வீற்றிருப்பதும், மரகத நந்தி அமைந்து இருப்பதும் கோவிலின் சிறப்பு.

    சிவபக்தனான மார்க்கண்டேயன் 16 வயதில் ஆயுள் முடிய வேண்டும் என்று விதி எழுதப்பட்டு இருந்தது. இதனால் அவனது உயிரை பிடிக்க எமதர்மன் வந்தார். இதை அறிந்த மார்க்கண்டேயன் திருக்கடையூரில் உள்ள சிவனை கட்டி பிடித்தார். அப்போது எமதர்மன் தனது பாச கயிற்றை வீசினார். அது மார்க்கண்டேயனுடன் சிவலிங்கத்தின் மீது விழுந்தது.

    தன் மீது பாச கயிறு விழுந்ததால் ஆத்திரம் அடைந்த சிவன், தனது காலால் எமதர்மனை எட்டி உதைத்தார். இதனால் எமபதவி நீங்கி சிவனுக்கே பாச கயிற்றை வீசியதால் பாவவினைக்கு ஆளாக்கப்பட்டார். இதை தொடர்ந்து மீண்டும் எமபதவி வேண்டி இந்த தலத்தில் வந்து பூஜை செய்து பலன் பெற்றது வரலாறு. இன்று குருபெயர்ச்சியையொட்டி காலை 7 மணிக்கு சிறப்பு யாக பூஜைகளும், 9.30 மணிக்கு குருபெயர்ச்சி, மகா பூர்ணாகுதி, கலசாபிஷேகம், மகா அபிஷேகம், 10 மணிக்கு லட்சார்ச்சனை, இரவு 7 மணிக்கு மகா தீபாராதனை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
    Next Story
    ×