search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றம்

    சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    குமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டர் தலைமைப்பதி அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி, தை மற்றும் ஆவணி மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், 5.30 மணிக்கு கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து காலை 6.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பூஜித குருசுவாமி கொடியேற்றினார். நிகழ்ச்சியில் பாலபிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார். குரு பொறுப்பு வகிக்கும் பூஜித குரு பையன் ராஜா முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மதியம் வடக்கு வாசலில் அன்னதானமும், இரவில் அய்யா தொட்டில் வாகனத்தில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இன்று (சனிக்கிழமை) அதிகாலை பள்ளியறை பணிவிடையும், வாகன பவனியும், மதியம் உச்சிப்படிப்பும், இரவு அய்யா பரங்கி நாற்காலியில் அமர்ந்து வீதி உலா வரும் நிகழ்ச்சியும், அன்னதானமும் நடக்கிறது.

    விழா நாட்களில் காலை, மாலையில் பணிவிடையும், மதியம் உச்சிப்படிப்பும், இரவில் வாகன பவனியும், உகப்படிப்பும், பக்தி நிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

    வருகிற 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) 8-ம் திருவிழா நடக்கிறது. அன்று மாலை 4 மணிக்கு அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் வீற்றிருந்து முத்திரிக்கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், சுற்றுப்பகுதி ஊர்களுக்கு வாகன பவனியும் நடைபெறுகிறது. வருகிற 28-ந் தேதி 11-ந் திருவிழா நடைபெறுகிறது. அன்று பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பூஜித குருக்கள் பால்பையன், பையன் காமராஜ், பையன் ஆகியோர் செய்துள்ளனர்.
    Next Story
    ×