search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சீரடி சாய்பாபா அணிந்த உடைகள்
    X

    சீரடி சாய்பாபா அணிந்த உடைகள்

    சாய்பாபா எப்போதும் தன் உடல் முழுவதையும் மூடும் வகையில் நீண்ட அங்கி போன்ற உடை அணிவதையே வழக்கத்தில் வைத்திருந்தார்.
    சாய்பாபா எப்போதும் தன் உடல் முழுவதையும் மூடும் வகையில் நீண்ட அங்கி போன்ற உடை அணிவதையே வழக்கத்தில் வைத்திருந்தார். முதலில் அவர் பச்சை, சிவப்பு நிறங்களில் அங்கி உடையை அணிந்தார். ஆனால் பிற்காலத்தில் அவர் முழுக்க, முழுக்க வெள்ளை நிற உடைகளையே விரும்பி அணிந்தார். ஆடைகள் உடுத்தும் வி‌ஷயத்தில் அவர் நடந்து கொண்ட விதம் இன்று வரை யாருக்குமே புரியாத புதிராக உள்ளது.

    உடை கிழிந்து போனால், அதை பாபா தூர எறிந்து விட மாட்டார். யாரிடமும் கொடுக்கவும் மாட்டார். துவாரகமாயில் எரியும் அக்னி குண்டத்தில் தன் உடையைப் போட்டு எரித்து சாம்பலாக்கி விடுவார். சில உடைகளை பாபா கந்தலாகும் வரை போடுவார். அந்த உடை கிழிந்தாலும் கூட அதை தைத்து போட்டுக் கொள்வார். சில உடைகளை அணிந்த சில தினங்களில் புதுசாக இருந்தாலும் கழற்றி தீயில் போட்டு எரித்து விடுவார்.

    பாபாவின் உடைகள் கொஞ்சம் கிழிந்து இருப்பது தெரிந்தால் தத்யா பட்டீல் என்ற பக்தர், அந்த கிழிசலில் விரலை விட்டு இழுத்து மேலும் கிழித்து விட்டு விடுவார். அப்படியானால் தான் பாபா புதிய உடை உடுத்துவார் என்பதற்காக அவர் அப்படி செய்வார். சிலரை பார்த்ததும் அவர்களை ஆன்மீகத்தில் மேல் நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் பாபாவுக்கு உதிப்பதுண்டு. அத்தகையவர்களுக்கு பாபா தன் கிழிந்த அங்கியை கழற்றி கொடுத்து விடுவார்.

    ஒரு தடவை பாபா தன் ஆத்மார்த்த பக்தரான மகல்சாபதிக்கு தனது பழைய கிழிந்த ஆடைகளில் ஒன்றை கொடுத்தார். இதன் காரணமாக மகல்சாபதி இல்லற வாழ்க்கையில் இருந்தாலும் ஒரு சன்னியாசிப் போலதான் வாழ்ந்து வந்தார்.

    பாபாவிடம் முக்தாராம் என்றொரு பக்தரும் சேவை செய்து வந்தார். ஒரு தடவை அவருக்கு தன் அழுக்கு உடை ஒன்றை கொடுத்து பாபா ஆசீர்வதித்தார். தர்மசாலாவுக்கு வந்த முக்தாராம், பாபாவின் அழுக்கு உடையை நன்றாக துவைத்து வெளியில் இருந்த கொடியில் காயப்போட்டார். பிறகு பாபாவை வணங்குவதற்காக துவாரகமாயிக்கு சென்று விட்டார்.

    அந்த சமயத்தில் வாமன்ராவ் என்ற பாபா பக்தர் அங்கு வந்தார். அப்போது அவருக்கு அசரீரியாக ஒரு குரல் கேட்டது. ‘பார்த்தாயா... முக்தாராம் என்னை இங்கே கொண்டு வந்து, துவைத்து இப்படி தலைகீழாக தொங்க போட்டு விட்டு போய் விட்டான்’’ என்ற குரல் கேட்டது.



    பாபா பேசுவது போன்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்த வாமன்ராவ், அங்கு பாபாவின் உடை துவைத்து காயப்போட்டிருப்பதைக் கண்டு மெய்சிலிர்த்தார். அந்த உடையை எடுத்து வாமன்ராவ், கண்களில் ஒற்றிக் கொண்டு, பிறகு தானே அதை அணிந்து கொண்டார். அப்படியே துவாரகமாயிக்கு சென்றார்.

    தன் உடையை வாமன்ராவ், அணிந்து வந்ததைப் பார்த்ததும் பாபாவுக்கு கோபம் வந்தது. ‘‘நீ ஏன் இந்த உடையை அணிந்தாய்?’’ என்று கடிந்து கொண்டார். என்றாலும் வாமன்ராவ், அந்த உடையை கழற்றவில்லை.

    அந்த உடையை தொடர்ந்து அணிந்தால்தான் தனக்கு சன்னியாசம் கிடைக்கும் என்று வாமன்ராவ் உறுதியாக நம்பினார். அவர் நம்பியது போலவே விரைவில் அவர் சன்னியாசி ஆகி விட்டார். பாபாவுக்கு நீண்ட நாட்களாக சேவை செய்து வந்த பல பக்தர்கள், அவரிடம் பழைய உடையை தாருங்கள் என்று கெஞ்சி கேட்பது உண்டு. ஆனால் பாபா அவ்வளவு எளிதாக தன் கிழிந்த உடைகளை கொடுக்க மாட்டார் எரித்து விடுவார்.

    1918-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந்தேதி பாபா, சமாதியான போது அவர் வைத்திருந்த பழைய பை ஒன்றை அவரது பக்தர்கள் எடுத்துப் பார்த்தனர். அந்த பையை தன் வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை யாரையும் தொட பாபா அனுமதித்ததே இல்லை.

    எனவே அந்த பையில் என்ன இருக்கிறது என்பதை அறிய எல்லாரிடமும் ஆவல் ஏற்பட்டது. அந்த பைக்குள் பச்சை நிற நீண்ட அங்கி உடையும், பச்சை நிற துணி தொப்பியும் இருந்தது. காசிராம் என்ற பக்தர் அந்த உடையை பாபாவுக்காக தைத்து கொடுத்திருந்தார்.

    பாபா உடல் சமாதிக்குள் வைக்கப்பட்ட போது, அவர் பயன்படுத்திய சில பொருட்களும், அந்த பச்சை நிற உடையுடன் கூடிய பையும் வைக்கப்பட்டது. பாபா அணிந்த வெள்ளை நிறை உடைகள் சில, துவாரகமாயில் இருந்தன. அவை அனைத்தும் இன்றும் சீரடி தலத்தில் உள்ள ‘‘சாய்பாபா மியூசியம்’’ அறையில் வைக்கப்பட்டுள்ளன.

    சீரடி செல்பவர்கள் மியூசியத்துக்கு சென்று பாபா மேனியில் பட்ட அந்த வஸ்திரங்களை கண் குளிரக் கண்டு வணங்கி வரலாம். அந்த வணக்கமே நிச்சயம் கோடி புண்ணியம் தரும்.



    சீரடி ஆலய வளாகத்துக்குள் சாய்பாபாவின் மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது. பாபா அவதார நிகழ்வை பிரதிபலிக்கும் வகையில் அந்த மியூசியம் உருவாக்கப்பட்டுள்ளது. பாபா பயன்படுத்திய அனைத்து முக்கியப் பொருட்களும் அந்த மியூசியத்தில் இடம் பெற்றுள்ளன.

    அங்கு என்னென்ன பொருட்கள் உள்ளன தெரியுமா?

    1. பாபா ஊர்வலத்தில் பயன்படுத்திய அணிவகுப்பு கொடி.

    2. பாபாவின் தலையணை-மெத்தை

    3. பாபாவுக்கு காற்று வீசப்பயன்படுத்திய விசிறி

    4. பாபா அணிந்த வெள்ளி நிற கஃப்ணி உடை.

    5. பாபாவின் செருப்பு

    6. பாபாவின் புகை பிடிக்கும் மண்ணால் தயாரிக்கப்பட்ட சுக்கா.

    7. அரசுக்கு ரிக்கார்டுகள்

    8. இசைக்கருவி

    9. பாபா பயன்படுத்திய கை

    10. பாபாவின் வண்ண கப்ளி உடையும் செருப்பும்

    11. பாபா கோதுமை அரைத்த திருகல்

    12. பாபா தண்ணீர் ஊற்றி வைக்கும் குடுவை

    13. படிகள்

    14. களி மண்ணில் செய்யப்பட்ட புகை பிடிக்கும் சுக்கா 10 உள்ளது.

    15. சியாம் குதிரைக்கு பயன்படுத்திய கயிறு.

    16. இரும்பு வளையம்

    17. விசிறி மற்றும் கடை

    18. தத்தாத் ரேயர் சிலை

    19. வண்ண குடை. சாவடி ஊர்வலத்தின் போது இந்த குடைதான் பக்தர் ஜோக்கால் பிடித்து வரப்பட்டது.

    20. பாபா சிலை

    21. பாபா அமர்ந்து குளித்த கல்

    22. பாபாவுக்காக தயாரித்து வழங்கப்பட்ட ரதம். இந்தூரை சேர்ந்த பக்தர் அவஸ்தி என்பவர் இந்த ரதத்தை தயாரித்து பாபாவுக்கு அன்பளிப்பாக கொடுத்திருந்தார்.

    23. பாபாவை தூக்கி செல்ல தயாரிக்கப்பட்ட வெள்ளி ரதம்.

    24. பாபா அமர்ந்த சக்கரநாற்காலி

    25. பாபா மகாசமாதி அடைவதற்கு முன்பு கடைசி மூன்று நாட்கள் எங்கும் செல்லாமல் ஒரு கட்டிலில் படுத்திருந்தார். பாபா மகா சமாதியானதும் அந்த கட்டிலில் தான் கிடத்தப்பட்டார். பாபாவுக்கான இறுதிச் சடங்குகள் அந்த கட்டிலில் நடைபெற்றது.

    26. பாபா தம் பக்தர்களுக்காக சமைத்த சமையல் பாத்திரமான அண்ணா

    27. பாபாவின் படங்கள்

    28. பாபா பயன்படுத்திய பலகை. முதலில் இந்த பலகை சாவடியில் வைக்கப்பட்டிருந்தது. பிறகு பாதுகாப்பு கருதி அது மியூசியத்துக்கு மாற்றப்பட்டது.



    துவாரகாமாயிக்கும் சாவடிக்கும் இடையில் உள்ள வழி பாதையில் மாருதி கோவில் அமைந்துள்ளது. கருவறையில் செந்தூரம் பூசிய ஆஞ்சநேயர் உள்ளார். பாபா அடிக்கடி இந்த கோவிலுக்கு சென்றதுண்டு. சாவடி ஊர்வலம் நடைபெறும்போது ஆஞ்சநேயர் கோவில் எதிரில் வந்ததும் பாபா சிறிது நேரம் நின்று, கையை மேலும் கீழும் அசைத்தபடி ஏதோ மந்திரங்கள் சொல்வார். அது யாருக்கும் புரியாது.

    பாபா மகாசமாதி அடைந்த பிறகு இந்த ஆலயமும் புதுப்பிக்கப்பட்டது. பாபா சென்ற ஆலயம் என்பதால் பக்தர்களும் தவறாமல் சென்று வழிபடுகிறார்கள். கண்டோபா ஆலயம் இப்போது சீரடி நகருக்குள் இருக்கிறது.

    ஆனால் பாபா சீரடிக்கு வந்தபோது அந்த ஊர் சாதாரணமாக இருந்தது. கண்டோபா ஆலயம் ஊர் எல்லையில் இருந்தது. அந்த ஆலய கருவறையில் சிவனின் அம்சமாக கண்டோபா உள்ளார். பாபாவுக்கு மிகவும் பிடித்த இடமாக கண்டோபா ஆலயம் திகழ்ந்தது. பாபா மீண்டும் சீரடிக்கு வந்தபோது கண்டோபா ஆலய பூசாரி மகல்சாபதி “சாய்”.... என்றழைத்தார். அன்று முதல் பாபா பெயர் சாய்பாபா ஆனது. இத்தகைய மகத்துவம் நிகழ்ந்த இடம் இது.

    அதனால்தானோ என்னவோ பாபா, கண்டோபா ஆலயத்தில் நிரந்தரமாக குடியேறிவிட மிகவும் ஆசைப்பட்டார். ஆனால் ஆலய பூசாரியாக இருந்த மகல்சாபதியோ, பாபாவை கண்டோபா கோவில் உள்ளேயே விடவில்லை விரட்டி விட்டார்.

    இதனால்தான் பாபா... சீரடி ஊருக்குள் வந்து வேப்ப மரத்தடியில் அமர்ந்தார். கண்டோபா ஆலயத்துக்கு பாபா வந்து சென்றதன் நினைவாக அவரது பாதுகையை அங்கு நிறுவி வழிபட்டு வருகிறார்கள்.

    இந்த ஆலயத்தில் கண்டோபா கடவுள் சிலைதவிர மகல் சாபதியின் சிலையும் உள்ளது. மகல்சாபதியின் வாரிசை சேர்ந்தவர்கள் இந்த ஆலயத்தை பராமரித்து பூஜித்து வருகிறார்கள். சீரடிக்கு வரும் பக்தர்களுக்கான தங்கும் விடுதிகள் அதிக அளவில் இந்த ஆலயப் பகுதியில் தான் கட்டப்பட்டுள்ளன. எனவே சீரடி செல்லும் பக்தர்கள் மிக எளிதாக கண்டோபா ஆலயத்துக்கு சென்று வழிபடலாம்.

    இதுவரை பாபா பற்றிய தகவல்களை பார்த்தீர்கள். கடவுள் அவதாரமான பாபாவின் புகழை பரப்பியவர்களில் தமிழகத்தை சேர்ந்த நரசிம்ம சுவாமிஜி மிக முக்கியமானவர். அவர் எப்படி பாபா புகழை நாடெங்கும் கொண்டு சென்றார் என்பதை அடுத்த வாரம் (வியாழக்கிழமை) காணலாம்.
    Next Story
    ×