search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மனத்தூய்மை தரும் ஸ்படிகம்
    X

    மனத்தூய்மை தரும் ஸ்படிகம்

    பல்வேறு தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் ஸ்படிக லிங்க வடிவங்களை வீட்டில் அல்லது தங்களது தொழில் அல்லது வியாபார இடங்களில் வைத்தும் அன்றாட பூஜைகளை செய்து வரலாம்.
    ஸ்படிகம் என்பது சிவபெருமானின் தலையில் இருக்கும் சந்திரனில் இருந்து விழுந்த ஒரு துளியாக கருதப்படுகிறது. இயற்கையாக உருவாகும் கண்ணாடி போன்ற ஒரு வகை கல்தான், ‘கிரிஸ்டல்’ எனப்படும் ‘ஸ்படிகம்’ ஆகும். தூய்மையான நிலையில் கண்ணாடி போலவும், குளிர்ந்த தன்மையுடனும் இருக்கும். ஸ்படிகத்தின் சிறப்பு. அதிலிருந்து வெளிப்படும் நேர்மறை அதிர்வுகளாகும். அவை நவக்கிரக சஞ்சார நிலைகளால், மனிதர்களுக்கு ஏற்படும் சிரமமான பலன்களை நிவர்த்தி செய்யக்கூடியதாக நம்பப்படுகிறது. நம் மனதில் உள்ளதை கண்ணாடிபோல் அப்படியே பிரதிபலிக்கும் தன்மை பெற்ற காரணத்தால், ஸ்படிகத்தை கையாளும்போது அல்லது ஸ்படிக லிங்கத்தை வணங்கும்போது, தூய்மையான மனதோடு இருப்பது முக்கியம்.

    சைவ ஆகம சாஸ்திரங்களில் லிங்க வழிபாடு என்பது, முக்கிய அம்சமாக குறிப்பிடப்படுகிறது. இயற்கையான, புனித தன்மை பொருந்திய முப்பதிற்கும் மேற்பட்ட பொருட்களால், லிங்க வடிவங்கள் உருவாக்கப்படுகின்றன. அத்தகைய பொருட் களின் தன்மைகளுக்கேற்ப அருள் சக்தி அதிலிருந்து வெளிப்படும் என்று சாஸ்திரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இயற்கையான சுயம்பு லிங்க வடிவத்திலேயே, பூமியின் ஆழங்களிலிருந்து கிடைக்கக்கூடியது ஸ்படிகம் ஆகும். அதன் காரணமாக ஸ்படிக லிங்கமானது அரிய சக்திகளை உடையதாக கருதப்படுகிறது.

    ஸ்படிகமும், விஷ்ணு சகஸ்ர நாமமும்.. :


    புகழ் பெற்ற ‘விஷ்ணு சகஸ்ரநாமம்’ என்ற மகாவிஷ்ணுவின் ஆயிரம் புனித நாமங்கள், அம்பு படுக்கையில் இருந்த பீஷ்மரால் சொல்லப்பட்டது. அவர் உத்தராயண புண்ணிய காலத்தில் தனது உயிரை விடுவதற்காக காத்திருந்த உணர்ச்சிகரமான தருணத்தில்தான் அந்த சகஸ்ரநாமத்தைக் கூறினார். ஆயிரம் நாமங்களையும் அவர் சொல்லி முடிக்கும் வரையில் போர்க்களத்தில் இருந்த ஸ்ரீகிருஷ்ணர், வியாசர், பஞ்சபாண்டவர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களை மறந்து நின்று கொண்டிருந்தனர். ஆயிரம் நாமங்களும் சொல்லி முடிக்கப்பட்ட பிறகே அனைவருக்கும் தங்களது சுய உணர்வு வந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

    அதன் பிறகு பீஷ்மரால் சொல்லப்பட்ட நாமங்களை யாருமே குறிப்பு எடுக்க இயலாததால், ஒப்பற்ற விஷயத்தை அனைவரும் இழந்து விட்டதாக தர்மர் தனது மனத்துயரை அனைவரிடமும் தெரிவித்தார். மேலும் அவர் கிருஷ்ணரிடம் அந்த நாமங்களை மீண்டும் பெறுவதற்கு உதவி செய்யும்படி வேண்டிக்கொண்டார். ஆனால் ஸ்ரீகிருஷ்ணர் தானும், தன்னை மறந்து அந்த நாமாக்களை கேட்டபடியே நின்று விட்டதால், அவருக்கும் எந்த உபாயமும் புலப்படவில்லை என்று தெரிவித்தார்.

    ஆனால் அனைவரும் ஒன்று சேர்ந்து மீண்டும் ஸ்ரீகிருஷ்ணரிடம், பீஷ்மரால் சொல்லப்பட்ட ஆயிரம் நாமாக்களை மீண்டும் பெறுவதற்கான வழியை காட்டியருளும்படி வேண்டிக்கொண்டனர். அதற்கு ஸ்ரீகிருஷ்ணர் உங்களில் ஒருவரால் அது சாத்தியம் என்று உரைத்ததோடு, அதற்கான உபாயத்தையும் சொன்னார். அதாவது சகாதேவனால் மீண்டும் சகஸ்ரநாமத்தை நினைவுபடுத்தி சொல்ல இயலும். அவன் சொல்லச் சொல்ல வியாசர் அதை எழுதிக்கொள்ளலாம் என்றும் தெளிவுபடுத்தினார்.

    சகாதேவனால் அது எப்படி முடியும்..? என்பது அனைவருக்கும் சந்தேகமாக இருந்தது. அவர் களது சந்தேகத்தை கிருஷ்ணரே மீண்டும் தெளிவு படுத்தினார். அதாவது ‘பஞ்ச பாண்டவர்களில் சகாதேவன் மட்டுமே சுத்தமான ஸ்படிக மாலையை அணிந்திருந்தான். சகஸ்ர நாமத்தின் சப்த அலைகளை அது தமக்குள் ஈர்த்துக்கொண்டிருக்கும். அதனால் அவன் சிவபெருமானை வணங்கி தியானித்து அந்த சப்த அலைகளை மீண்டும் மனதிற்குள் உள்வாங்கி, மொழியால் சொல்லும்போது வியாசர் அதை எழுதிக்கொள்ள இயலும்’ என்று தெரிவித்தார்.

    எவ்வாறு வழிபடுவது..? :

    யஜுர் வேதம் சிவனை ‘ஜோதி ஸ்படிக மணி லிங்க’ வடிவானவன் என்று கூறு கிறது. ஸ்படிக லிங்கங்களின் மகிமை குறித்து மார்க்கண்டேய சம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது. அத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்படிக லிங்கத்தை வழிபடுவதற்கு குறிப்பிட்ட முறை உள்ளது. அதை கவனிப்போம்.

    ஸ்படிக லிங்கம் என்பது பொதுவாக நீண்ட வடிவமும், சுமார் ஒரு அங்குலம் முதல் பத்து அங்குலம் வரையில் உயரமும், ஆறு பட்டைகள் உடையதாகவும் இருக்கும். இதன் தனி சிறப்பானது ஒரு வினாடிக்கு பல்லாயிரக்கணக்கான நேர்மறை அதிர்வுகளை வெளிப்படுத்துவதாக அளவிடப்பட்டுள்ளது. ஒரு ஸ்படிக லிங்கமானது, கருங்கற்களால் செய்யப்பட்ட ஆயிரம் லிங்கங்களுக்கு சமம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஸ்படிக லிங்கத்துக்கு விபூதி அபிஷேகம் செய்தால் கர்ம வினைகள் நீங்கும். ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து தூய மனதோடு சிவனின் பஞ்சாட்சர மந்திரத்தை 108 தடவை ஜபிக்க எல்லா பாவங்களிலிருந்தும் விமோசனம் கிடைப்பதாக ஐதீகம். பொதுவாக மந்திர சித்தி பெற வேண்டுமானால் ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து பய பக்தியுடன் ஜபித்து உருவேற்றிக்கொண்டால், பல மடங்கு பலன் கிட்டுவதாக நம்பிக்கை.



    சகல தேவதா வழிபாடு :

    ஸ்படிக லிங்கத்தின் முன்னர் சிவ வழிபாடு மட்டும் செய்யவேண்டும் என்று வழிமுறைகள் ஏதுமில்லை. சகல தேவதா ரூபங்களையும் ஸ்படிகத்தின் வாயிலாக வழிபாடு அல்லது மந்திர ஜப வழிபாடுகள் செய்யலாம். பொருளாதார வளம் வேண்டுவோர் மகாலட்சுமியின் அருள் வேண்டி ‘லட்சுமி அஷ்டோத்திர மந்திரத்தை’ ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து ஒன்றுபட்ட சிந்தனையோடு சொன்னால், ஜபத்தின் பலன் பல மடங்கு பெருகி நன்மைகளை தரும். ஸ்படிகம் நம் மனதையும், உருவத்தையும் அப்படியே பிரதிபலிக்கும் தன்மை கொண்டதால், வழிபாடுகள் செய்யும்போது தூய்மையான மனதோடு செய்வது அவசியம். தீய எண்ணங்கள், மற்றவரை பாதிக்கும் பிரார்த்தனைகள், அலை பாய்கின்ற மனம், தெளிவற்ற சிந்தனை ஆகிய காரணங்கள் எதிர்மறையான பலன்களை தரக்கூடிய தன்மை பெற்றவை. அதனால் ஸ்படிக வழிபாட்டில் கவனம் அவசியமானது.

    ஐஸ்வரியம் பெருகும் :

    ஸ்படிக லிங்க வழிபாட்டை வீட்டில் நித்திய பூஜையாகவும் செய்து வரலாம். அவ்வாறு பூஜை செய்பவர்கள் லிங்கத்திற்கு பசும்பால், பழச்சாறு, பன்னீர் மற்றும் மஞ்சள் கலந்த நீராலும் அபிஷேகம் செய்து, பூக்கள் கொண்டு பூஜை செய்து, தூபம், தீபம் காட்டி வழிபட்டால் சகல பாவங்களும் விலகி விடுவதாக மகான்களால் சொல்லப்பட்டுள்ளது. அந்த பூஜையின் காரணமாக வீடுகளில் ஐஸ்வரியமும், சந்தோஷமும் அதிகரிக்கும். ஸ்படிக லிங்க வழிபாடானது தாந்திரிக பூஜைகள் செய்பவர்களால் பெரிதும் போற்றப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.

    மற்றவர்கள் மீது ஏவப்பட்ட ஏவல் மற்றும் பில்லி, சூனியங்கள் முதலியவற்றை பூஜைகள் வாயிலாக எடுத்து, மற்றவர்களுக்கு உதவி செய்பவர்கள், அவற்றின் பாதிப்புகள் தங்களை திருப்பி தாக்காமல் இருக்க ஸ்படிக லிங்க வழிபாட்டை பிரதானமாக செய்வது வழக்கம். அதன் வாயிலாக ‘அபிசார தோஷம்’ என்று சாஸ்திரங்களில் சொல்லப்படும் ஏவல், பில்லி, சூனிய பாதிப்புகள் உள்ளவர்கள் ஸ்படிக லிங்கத்தின் முன்பாக தினமும் அரை மணி நேரம் அமர்ந்து மந்திரம் உச்சரித்து அல்லது வழிபாடுகள் செய்து வருவது நல்லது. மேலும் அவர்கள், இருபத்தொரு நாட்கள் அத்தகைய வழிபாடுகளை செய்து வந்தால் அவர்களை நன்மைகள் நாடி வரும்.

    அனைவருக்கும் நன்மை :

    பல்வேறு தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் ஸ்படிக லிங்க வடிவங்களை வீட்டில் அல்லது தங்களது தொழில் அல்லது வியாபார இடங்களில் வைத்தும் அன்றாட பூஜைகளை செய்து வரலாம். தக்க முறையில் பூஜிக்கும் காரணத்தால் ஸ்படிகமானது நாளடைவில், படிப்படியாக சிறப்பான ஆகர்ஷண சக்தி உள்ளதாக மாறு கிறது. அதனால் தொழில் அல்லது வியாபார விருத்தியானது பெருகுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மாணவ மாணவியர்களும் ஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்து தினமும் கல்வி விருத்திக்காக வழிபட்டு வரலாம். அதன் மூலம் ஞாபக சக்தியும், கல்வி கேள்விகளில் சிறந்த நிலையையும் அடையலாம்.
    Next Story
    ×